கொக்கட்டிச்சோலை படுகொலையின் 28ஆவது ஆண்டு நினைவு கூரப்பட்டது
மட்டக்களப்பின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படுகொலையாக கருதப்படும் கொக்கட்டிச்சோலை படுகொலையின் 28ஆவது ஆண்டு நினைவு இன்று புதன்கிழமை மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) தமிழரசுக்கட்சி கிளை ஏற்பாட்டில் கொக்கட்டிச்சோலையில் நடைபெற்றது.
கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் “கொக்கட்டிச்சோலை படுகொலையின் 28ஆவது ஆண்டு வணக்க நிகழ்வும் சமகால அரசியல்;” கருத்தரங்கும் என்னும் தலைப்பில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இன்று பிற்பகல் 3.00மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜா, மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் படுகொலைசெய்யப்பட்டவர்களின் உறவினர்களினால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.
1989ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் திகதி கொக்கட்டிச்சோலை இரால் பண்ணையில் வேலையில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.
இந்த கொலை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப்பரராஜசிங்கம் ஐ.நா.வின் கவனத்துக்கு கொண்டுசென்றதை தொடர்ந்து இக்கொலை உலகம் முழுவதும் பேசப்பட்டது.











