கொல்லப்பட்ட பிரதேச சபை தலைவர் பாதாள குழுவை சேர்ந்தவர் என்கிறார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்!
துப்பாக்கிச் சூட்டில் இன்று கொல்லப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தலைவர் பாதாள குழுக்களுடன் தொடர்புகளை பேணியவர் என்றும், அவருக்கு எதிராக வழக்குகள் பல இருந்தன என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.
வெலிகம பிரதேச சபையின் தலைவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் ஊடாகவோ கடந்த காலங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் ஊடாகவோ பொதுமக்கள் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. நாம் அறிந்த வகையில் இந்த நாட்டில் ஒருங்கிணைந்த குற்றக் கும்பல்கள் இருக்கின்றன. அவர்கள் பிரிவடைந்து இருக்கின்றனர். அவர்களிடம் ஆயுதங்கள் இருப்பதுடன், அவர்களிடையே மோதல்களும் நடக்கின்றன. கடந்த மே 20ஆம் திகதி நான் இந்த பாராளுமன்றத்தில் தெளிவுப்படுத்தியுள்ளேன்.
வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர எனும் வெலிகம லசா என்பவர் மக்கள் பிரதிநிதியாக தெரிவாகியிருந்தாலும் இவர் பாதாள குற்றவாளியே. இவருக்கு எதிராக 8 வழக்குகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.




