செய்திகள்

சகல கட்சிகளையும் இணைத்து நல்லாட்சியை தொடருவேன்: பிரதமர் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று சகல கட்சிகளையும் இணைத்துக்கொண்டு, ஆட்சியமைக்கவுள்ளதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொதுத் தேர்தலின் பின்பும் நல்லாட்சி தொடரும் என்றார்.

கம்பளை நகரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேற்று சனிக்கிழமை காலை அளிக்கப்பட்ட வரவேற்பைத் தொடர்ந்து கம்பளை அத்காலை பகுதியில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் கலந்துகொண்டார்.

இதில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் கம்பளைத் தொகுதி அமைப்பாளர் சமந்த அருணகுமார, நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் ஆனந்த அளுத்கமகே உட்பட பலரும் கலந்துகொண்டனர். இங்கு பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

நாட்டு மக்கள் நல்லாட்சிக்கும் மாற்றத்திற்கும் ஜனவரி எட்டாம் திகதி தங்களது வாக்குரிமையை உபயோகித்தார்கள். எனவே ஜனவரி எட்டாம் திகதி ஏற்பட்ட மாற்றத்தைப் பாதுகாக்க வேண்டும். யுத்தத்தின் பின்பு தம்மை மட்டும் வளம்படுத்திக் கொண்டவர்களை மீண்டும் தோற்கடிக்க வேண்டும். எதிர்வரும் பொதுத் தேர்தல் விருப்பு வாக்கு முறையில் நடைபெறும் இறுதித் தேர்தலாக அமையும். நாட்டு மக்களுக்கு நல்லாட்சி தேவைப்பட்டது. இந்த நல்லாட்சியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஏற்படுத்தினோம். அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தினோம்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரசியல் கட்சிகள் தனித்தனியே போட்டியிடவுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முதலான கட்சிகள் உட்பட பல கட்சிகள் தனித்துப் போட்டியிடும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் போட்டியிடும். இக்கட்சி இரண்டாகப் பிளவுபட்டுக் களமிறங்கலாம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சிலர் மகிந்த ராஜபக்ஷவை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கின்றனர். அவர்கள் எதைச் செய்வார்கள் என்று எமக்குத் தெரியாது.

ஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று சகல கட்சிகளையும் இணைத்துக் கொண்டு ஆட்சியமைக்கும். எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெறும். நாம் சகல கட்சிகளையும் இணைத்துக் கொண்டு தேசிய அரசாங்கம் என்ற அடிப்படையில் ஆட்சியை அமைப்போம். ஆனால் எதிர்க்கட்சியில் சிலர் இதனை விரும்பவில்லை. ஆனால் நாம் சகல கட்சிகளையும் இணைத்துக் கொள்வோம்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்க வேண்டும். நாட்டை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு செல்ல முடியாது. புதிய ஆட்சியில் நல்லாட்சி தொடரும். அத்துடன் பத்து இலட்சம் தொழில்வாய்ப்புகளையும் உருவாக்குவோம் என்றார்.