சங்கமித்ரா படத்தில் இருந்து சுருதிஹாசன் திடீர் விலகல்
பாகுபலி–2 படம் வெற்றியால் சரித்திர படங்கள் எடுக்க திரையுலகினர் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. இயக்குனர் சுந்தர்.சி. 8–ம் நூற்றாண்டு காலகட்டத்தை பின்னனியாக வைத்து சங்கமித்திரா என்ற பெயரில் புதிய சரித்திர படமொன்றை சர்வதேச தரத்தில் இயக்கப்போவதாக அறிவித்தார்.
இதில் கதாநாயகர்களாக நடிக்க ஜெயம்ரவி, ஆர்யா ஆகியோரும் கதாநாயகியாக நடிக்க சுருதிஹாசனும் தேர்வு செய்யப்பட்டனர். பிரான்சில் நடந்த திரைப்பட விழாவில் இந்த படம் பற்றிய தகவலை அறிமுகம் செய்து சுருதிஹாசன் குதிரையில் செல்வது போன்ற அவரது முதல் தோற்ற படத்தையும் வெளியிட்டனர். இந்த படத்தில் நடிப்பதற்காக சுருதிஹாசன் லண்டனில் தங்கி வாள் சண்டை பயிற்சி எடுத்து திரும்பினார்.
படப்பிடிப்புக்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. இந்தநிலையில் சங்கமித்ரா படத்தில் சுருதிஹாசன் தொடர்ந்து பணியாற்ற முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கிறது என்று படத்தை தயாரிக்கும் தேனாண்டாள் பட நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தது. இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து சங்கமித்ரா படத்தில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து சுருதிஹாசன் தரப்பில் அவரது செய்தி தொடர்பாளர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:–
துரதிர்ஷ்டவசமாக சங்கமித்ராவில் பணியாற்ற வேண்டாம் என்ற முடிவை எடுக்கும் நிலையில் சுருதிஹாசன் இருக்கிறார். இந்த படம் எவ்வளவு பெரியது, 2 வருடங்கள் படப்பிடிப்புக்கான தேதிகள் ஒதுக்க வேண்டும் என அனைத்தும் தெரிந்தே இதில் அவர் நடிக்க வந்தார். தனது கதாபாத்திரம், திரைக்கதை வடிவம், படப்பிடிப்பு தேதிகள் ஆகியவற்றின் முக்கியத்துவங்கள் அவருக்கு தெரியும்.
படப்பிடிப்புக்கு தயாரவதற்காக ஏப்ரல் மாதத்தில் இருந்து சிறந்த சண்டை பயிற்சியாளரிடம் பயிற்சியும் பெற்றார். ஆனால் சங்கமித்ரா படத்தில் அவருக்கு இருந்த ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை தாண்டி விலகுவதற்கான முடிவை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. முழுமையான திரைக்கதை அவருக்கு தரப்படவில்லை. படப்பிடிப்பு தேதிகளும் சரியாக முடிவு செய்யப்படவில்லை.
இதுவே சுருதிஹாசன் விலக காரணம். அவர் தற்போது ஏற்கனவே நடித்துள்ள பெஹன் ஹோகி தேரி இந்தி படத்தின் விளம்பர வேலைகளில் இருக்கிறார். தொடர்ந்து சபாஷ்நாயுடு படத்தில் நடிக்கவும் தயாராகி வருகிறார். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.(15)




