செய்திகள்

தேர்தலில் போட்டியிடப்போவதில்லை: இறுதி நேரத்தில் வைகோ அதிரடி அறிவிப்பு

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என வைகோ அறிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவிருந்த மதிமுக பொதுச்செயலாளரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கோவில்பட்டி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யவதற்காக வந்த வைகோ தனது முடிவை கடைசி நேரத்தில் மாற்றினார். தொடர்ந்து, மாற்று வேட்பாளர் விநாயக் ரமேஷ் அத்தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக தேர்தல் அலுவலர் அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்யும் தோரணையில் தொண்டர் படையோடு வந்தார். ஊடகங்களில் வைகோ வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக செய்தி வெளியிட தொடங்கின.

இந்நிலையில், வைகோ வேட்புமனுவை தாக்கல் செய்யாமல், அப்பகுதி மதிமுக நிர்வாகி விநாயக் ரமேஷை வேட்புமனு தாக்கல் செய்ய வைத்து பரபரப்பு ஏற்படுத்தினார். வைகோ கடைசி நேரத்தில் எடுத்த இந்த முடிவு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இதுகுறித்து அவர் கூறும் போது, ஜாதி மோதலை தவிர்க்கவே போட்டியில் இருந்து விலகுகிறேன் என்றும் கோவில்பட்டியில் போட்டியிட தகுதியான வேட்பாளர் விநாயக் ரமேஷ், தான் என்றும் கூறினார்.

மேலும் நான் நடுநிலையானவன். ஆனால், என்னை வைத்து ஜாதி மோதலை ஏற்படுத்த திமுக முயல்கிறது என்பதை அறிந்து வேதனை அடைந்தேன். எனவே, வருகிற சட்டப்பேரவை தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. இந்த தேர்தல் மக்கள் நலக் கூட்டணி – தேமுதிக – தமாகா கூட்டணி வெற்றிபெற பாடுபடுவேன் என்றார்.

R-06