செய்திகள்

சத்தியசீலனின் மலரும் நினைவுகளில் ஈழ விடுதலைப் போராட்டம்: பதிவு 11

மீண்டும் நீண்ட இடைவெளியின் பின்னர் எனது இந்த பதிவை எழுதுவதற்கு மன்னிக்கவும். பல்வேறு காரணங்களினால் தொடர்ந்து என்னால் எழுத முடியாமல் போய்விட்டது.

எனது முதல் பதிவில் ஈ. வே. ரா பெரியாரை அவரது அலுவலகத்தில் சந்தித்தமை பற்றி விரிவாக எழுதி இருந்தேன். அதன் பின்னர் நாம் ஜி. டி. நாயுடுவை கோயம்புத்தூரில் இருந்த அவரது தொழிற்சாலையில் சந்தித்தோம். இவர் தமிழக வரலாற்றில் விஞ்ஞான தொழில்நுட்ப துறையில் ” அதிசய மனிதர் ” என்று அழைக்கப்படுபவர். ஆரம்பக் கல்வியை மட்டுமே நாயுடு கற்றிருந்தார். ஆனால், அவரை பொறியியலாளர் என்றும் கண்டுபிடிப்பாளர் என்றும் அழைத்தனர். இந்தியாவின் முதலாவது மின்சக்தி மோட்டாரை கண்டுபிடித்த பெருமை இவரையே சாரும். கைத்தொழில் துறையில் மட்டுமன்றி, இயந்திரவியல் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளிலும் பல பொருட்களை தயாரித்தார். இதனால் இவரை இந்தியாவின் ” எடிசன்” என்றும் அழைத்தார்கள்.

ஜி. டி. நாயுடு

ஜி. டி. நாயுடு

ஈழத்தில் நாம் முன்னெடுத்துவந்த போராட்டம் பற்றியும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் அவருக்கு விளக்கிய நாம் அவரது உதவியை கோரினோம். குறிப்பாக தொழில்நுட்ப உதவி வேண்டும் என்றும் வோல்கி டோல்கி (walkie talkie) செய்து தர முடியுமா என்று கேட்டோம். அதற்கு அவர் உடன்பட்டார். எமக்கு அவர் மதிய உணவு வழங்கி எமது முயற்சிகளை பாராட்டி அனுப்பினார்.

இந்த சந்திப்பின் பின்னர் சென்னையில் ம.பொ.சி என்று அழைக்கப்படும் விடுதலைப் போராட்ட வீரரும் சிறந்த தமிழறிஞருமான ம. பொ. சிவஞானத்தை சந்தித்தோம். அப்போது அவர் தமிழ்நாடு மேலவைத் தலைவராக இருந்தார். அவரது கட்சியின் பெயரும் தமிழரசுக்கட்சி தான். சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக இவர் சிலம்புச் செல்வர் என அழைக்கப்பட்டார். மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என்ற பெயரை வைக்கப் பேராடினார். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது ‘மதராஸ் மனதே’ என்று ஆந்திரர்கள் சென்னையைக் கேட்டபோது, அதனை எதிர்த்துப் போராடித் தமிழகத் தலைநகராகச் சென்னையை இருத்தினார். திருவேங்கடத்தையும் (திருப்பதி) தமிழகத்துடன் இணைக்கப் போராடினார், அதில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் அப்போராட்டத்தால் திருத்தணி தமிழகத்துக்கு கிடைத்தது. குமரி மாவட்டம், செங்கோட்டை, பீர் மேடு, தேவிக்குளம் போன்றவை தமிழகத்துக்கு கிடைக்க போராடினார். குமரியும் செங்கோட்டையும் தமிழகத்துக்கு கிடைத்த போதும் பீர் மேடு, தேவிக்குளம் கேரளத்துடன் இணைக்கப்பட்டன.

maposi

  ம.பொ.சி

இவரிடம் எமது நோக்கத்தை எடுத்துக்கூறியபோது முதலில் ஏசினார். ” நீங்கள் சின்னப்ப பெடியள். இவற்றை விட்டு விடுங்கள். அதை அரசியல்வாதிகள் பார்த்துக்கொள்வார்கள்” என்று கூறினார். இருந்தபோதிலும் எமது முயற்சிகள் பற்றி அவரிடம் எடுத்துக்கூறி விட்டு உதவிகள் எதுவும் கேட்காமல் வந்துவிட்டோம்.

இதன்பின்னர், முரசொலி அடியாரை அவரது முரசொலி பத்திரிகை அலுவலகத்தில் சந்தித்தோம். முரசொலிமாறன் தான் பத்திரிகையின் சொந்தக்காரர். அவர் அப்போது டெல்லியில் எம்பியாக இருந்தார். அவரின் காரியதரிசி பாண்டியனும் அந்த அலுவலகத்தில் நாம் சென்றபோது இருந்தார். ஆனால் நாம் முரசொலி அடியாரைத்தான் சந்தித்தோம். எமது ஆயுத போராட்ட நோக்கம் பற்றி அவரிடம் கூறி அதற்கு பத்திரிகை ரீதியில் ஆதரவு தரும்படி வேண்டினோம். அதற்கு அவர் உடன்பட்டார். எமது செயற்பாடுகளை ஆர்வத்துடன் கேட்டறிந்தார்.

இந்த நான்கு சந்திப்புக்களையும் இரண்டு கிழமைகளில் நாம் முடிந்திருந்தோம். மேலும் சந்திப்புக்களில் ஈடுபடுவதற்கு அங்கு பல நாட்கள் தங்கி இருக்க வேண்டி இருந்தது. அதற்கு எம்மிடம் பணம் இருக்கவில்லை. நான் திருச்சி திரும்பினேன். ஏனைய மூவரும் கொழும்பு சென்று அங்கிருந்து மீண்டும் யாழ்ப்பாணம் சென்றனர். அங்கு சென்று பேரவை உறுப்பினர்களுக்கு எமது சந்திப்புக்கள் பற்றி அவர்கள் விளக்கம் அளித்ததனர்.

1971 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாட்டுக்கு வந்த நான் மீண்டும் செப்டெம்பரில் படகு மூலம் வல்வெட்டித்துறை செல்ல முயன்றேன். ஆனால் உரிய போக்குவரத்து ஏற்பாடுகளை செய்ய முடியாமல் போனதால் நவம்பர் மாதத்திலேயே என்னால் மீண்டும் அங்கு செல்ல முடிந்தது. வல்வெட்டித்துறையை சேர்ந்த கதிரவேலு என்பவர் கொண்டுவந்த வள்ளத்திலேயே நான் அங்கு சென்றேன்.

நான் வல்வெட்டித்துறை சென்றபின்னர் அடுத்த கட்டமாக எத்தகைய நடவடிக்கைகள் செயற்பாடுகளில் ஈடுபட்டோம் என்பது பற்றிய விபரத்தை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

பதிவு 10…..

பதிவு 9…..

பதிவு 8…..