சந்திரிகாவும் போர்க்குற்ற விசாரணையும்
வீரகத்தி தனபாலசிங்கம்
அரசாங்கத்தின் தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தின் தலைவியாக இருக்கும் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமரதுங்க கொழும்பு ஆங்கிலத் தினசரியொன்றுக்கு கடந்த வாரம் வழங்கிய நேர்காணலில் நல்லிணக்கச் செயன்முறைகள் தொடர்பில் விளக்கம் அளித்தபோது அவரிடமிருந்து வெளிவரக்கூடியவை என்று பலரும் எதிர்பார்த்திருக்க முடியாத சில கருத்துக்களைத் தெரிவித்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் பணியை அரசாங்கம் உங்களிடம் ஒப்படைத்திருக்கிறது. அப்பணிகளின் தற்போதைய நிலை என்னவென்று அவரிடம் கேட்கப்பட்ட போது ‘அவை வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. எதிரணியினர் மற்றும் சிறிய எண்ணிக்கையிலான தீவிரவாதிகளிடமிருந்து வருகின்ற எதிர்ப்புக்கு மத்தியில் பெரும்பான்மையானவர்களின் ஆசீர்வாதத்துடன் செயற்பாடுகள் தொடருகின்றன. நல்லிணக்கம் என்பது நீண்டதொரு செயன்முறை. புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டுவர வேண்டியதே இப்போது அவசரமானதாகும். அடுத்து காணாமல் போனோர் விவகார அலுவலகத்தையும் அமைக்கவேண்டியிருக்கிறது. இவை எல்லாவற்றையும் செய்துவிட்டால் போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கு நீதிமன்றங்களை அமைக்க வேண்டிய அவசியமில்லை’ என்று பதிலளித்தார்.
திருமதி.மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பான கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. உள்நாட்டுப்போரின் இறுதிக் கட்டங்களில் இடம்பெற்ற பிரச்சினைகள் தொடர்பாக விசாரிப்பதற்கு வெளிநாட்டு நீதிபதிகளையும் வரவழைக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் விதந்துரை செய்யப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு எதிரணி கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்திருக்கிறது. அதுபற்றி உங்களது அபிப்பிராயம் என்னவென்று திருமதி குமாரதுங்கவிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ‘அவ் விதமாக கருத்துத் தெரிவிப்பதற்கு அந்தச் செயலணிக்கு உரிமை கிடையாது. பொது மக்களின் கருத்துக்களை அறிந்து அரசாங்கத்துக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவேண்டிய பொறுப்பே அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதுவே அவர்களுடைய பொறுப்பாக இருந்தது. செயலணியின் உறுப்பினர்கள் தங்களுடைய சொந்தக் கருத்துக்களையும் அறிக்கையில் சேர்த்திருக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கள் தொடர்பாக செய்தி வெளியிட்ட இணையத்தள செய்திச் சேவையொன்று ‘திருமதி குமாரதுங்க குண்டொன்றைத் தூக்கிப் போட்டிருக்கிறார் . போர்க்குற்ற விசாரணைகள் தேவையில்லை என்கிறார்’ என்று அதற்கு தலைப்பிட்டிருந்தது. உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் வெளிநாட்டுப் பங்கேற்புடன் நீதி விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்று முன்வைக்கப்பட்டு வருகின்ற கோரிக்கை குறித்து நீண்ட காலமாகவே சர்ச்சைகள் கிளம்பியிருந்த போதிலும், அது குறித்து கவனத்தைப் பெரிதும் ஈர்க்கின்ற வகையில் முனைப்பான கருத்துக்களை திருமதி குமாரதுங்க முன்னர் வெளியிட்டதில்லை என்பதாலேயே கடந்த வாரத்தைய நேர்காணலில் அவர் தெரிவித்திருக்கும் இந்தக் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள், வழக்குத்தொடுநர்கள் மற்றும் விசாரணையாளர்களையும் உள்ளடக்கியதாக உள்நாட்டு நீதி விசாரணைப் பொறிமுறையொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை உட்பட, போருக்குப் பின்னரான காலகட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய தேசிய நல்லிணக்கம் மற்றும் நிலைமாறுகால நீதிச்செயன்முறைகள் தொடர்பில் 2015 அக்டோபரில் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை இதுவரையில் முன்னெடுத்திருக்கக் கூடிய செயற்பாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர், இம்மாத பிற்பகுதியில் ஆரம்பமாகவிருக்கும் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடரில், விரிவான அறிக்கையொன்றை வெளியிடவிருக்கும் நிலையில் திருமதி குமாரதுங்க போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை பற்றி, அதுவும் அரசாங்கத்தின் தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவியாக இருந்துகொண்டு இத்தகைய கருத்தை வெளியிட்டிருப்பது பிரத்தியேகமாகக் கவனிக்கப் படவேண்டிய அம்சமாகும்.
ஜெனீவா தீர்மானத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயன்முறைகள் தொடர்பில் சர்வதேச சமூகத்துக்கு உறுதியளித்ததன் பிரகாரம் உரிய முறையில் அரசாங்கத்தினால் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியவில்லை. கடந்த வருடம் ஆகஸ்ட் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காணாமல் போனோர் விவகார அலுவலக சட்டத்தையும் கூட, அரசாங்கம் இதுவரையில் வர்த்தமானியில் வெளியிட வில்லை. இதனிடையே அந்த அலுவலகத்துக்கு இருக்கும் அதிகாரங்களைக் குறைப்புச் செய்வதற்கான பிரதமரின் யோசனையை அமைச்சரவை சில தினங்களுக்கு முன்னர் அங்கீகரித் திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது இந்த இலட்சணத்தில் அரசாங்கம் எதிர்வரும் ஜெனீவா கூட்டத்தொடருக்கு எவ்வாறு முகம் கொடுக்கப் போகின்றது என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
பரவலாக எதிர்பார்க்கப்பட்டதுபோன்றே, 2015 அக்டோபர் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் கால அவகாசத்தை ஜெனீவாவில் அரசாங்கம் கோரவிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சில தினங்களுக்கு முன்னர் கொழும்பிலுள்ள வெளிநாட்டு செய்தியாளர்களுடனான சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். ஜெனீவா தீர்மானத்துக்குப் பின்னரான சுமார் ஒன்றரை வருட காலத்தில் அத்தீர்மானத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயன்முறைகளில் அக்கறை காட்டுவதைவிடவும் காலத்தை எவ்வாறு கடத்துவது என்பதில்தான் அரசாங்கம் கருத்தூன்றிய கவனத்தை செலுத்தியிருக்கிறது. பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறைகளை ஏற்படுத்துவதற்கு மேலாக புதிய அரசியலமைப்பைக் கொண்டு வரும் செயன்முறைகளுக்கே அரசாங்கம் முன்னுரிமை கொடுக்கவேண்டியிருக்கிறது என்றும் சமரவீர வெளிநாட்டுச் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். அந்த ஜெனீவா தீர்மானத்துக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியிருந்தபோதிலும், வெளிநாட்டு நீதிபதிகளையும் விசாரணையாளர்களையும் உள்ளடக்கிய நீதி விசாரணைப் பொறிமுறை தொடர்பான ஏற்பாட்டுக்கு எதிர்ப்பை வெளிக்காட்டுவதிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட அரசாங்கத் தலைவர்கள் கூடுதலான காலத்தை செலவிட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.
இத்தகையதொரு பின்புலத்தில், திருமதி குமாரதுங்க தெரிவித்திருக்கும் கருத்துக்களை உன்னிப்பாக நோக்கும்போது அவர் சர்வதேச பங்களிப்புடனான நீதி விசாரணைப் பொறிமுறை மாத்திரமல்ல, முற்றுமுழுதாக உள்நாட்டு நீதிபதிகளைக் கொண்ட விசாரணையும் கூட தேவையில்லை என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது. அத்துடன் நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பான கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கையை கடந்தமாத முற்பகுதியில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து அரசாங்கத்தின் சார்பில் பெற்றுக்கொண்ட திருமதி. குமாரதுங்க, அந்த அறிக்கை தொடர்பில் ஒரு மாதகால இடைவெளிக்குள் முரண்பட்ட கருத்தை வெளியிட்டிருக்கிறார். அதாவது, அறிக்கையின் விதப்புரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டியது கட்டாயமில்லை என்ற போதிலும், அந்த அறிக்கையை முழுமையாக அக்கறையுடன் ஆராய்ந்து பொது விவாதத்துக்கு உட்படுத்திய பிறகே ஒரு தீர்மானத்துக்கு வரவேண்டும் என்று கடந்த மாதம் அவர் கூறியிருந்தார். அறிக்கையை திருமதி முத்தெட்டுவேகமவிடமிருந்து பெற்றுக்கொள்வதைக் கூட திட்டமிட்டுத் தவிர்த்த ஜனாதிபதியும் பிரதமரும் அதன் விதப்புரைகளைப் பற்றி எந்தவிதமான அக்கறையும் காட்டவில்லை.பொது விவாதம் எங்கே நடக்கப்போகிறது?
வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு முறையிலான நீதிவிசாரணைப் பொறிமுறையொன்றே போரில் பாதிக்கப்பட்ட மக்களிடையேயான பரவலான விருப்பமாக இருக்கிறது என்று செயலணியினால் தெரிவிக்கப்பட்ட விதப்புரைக்கு எதிராக பிரசாரங்களைத் தீவிரப்படுத்துவதிலேயே அரசாங்கத் தலைவர்கள் கவனத்தைச் செலுத்தினார்கள். அவர்களின் சிந்தனையின் வழியிலேயே திருமதி குமாரதுங்கவும் ஒருமாதம் கழித்து கருத்துக் கூறியிருக்கிறார். நீதி விசாரணைப் பொறிமுறை எந்தவகையானதாக இருக்கவேண்டும் என்பது குறித்து அறிக்கையில் கருத்துக் கூறுவதற்கு செயலணியின் உறுப்பினர்களுக்கு உரிமை கிடையாது என்று அவர் கடுந்தொனியில் பேசியிருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது. இத் தருணத்தில் திருமதி குமாரதுங்க இலங்கைப் போரின் இறுதிக்கட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சுமார் ஐந்தரை வருடங்களுக்கு முன்னர் வெளியிட்ட கருத்து தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகின்றது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் தலைவர் நீதியரசர் கே.பாலகிட்ணரின் 10 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் 2011 ஜூலை பிற்பகுதியில் அவரின் குடும்பத்தவர்களினால் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பொருளாதார அபிவிருத்தி, சகல பிரிவினரையும் தழுவிய சமூகங்கள், சமாதானம் என்ற தலைப்பில் நினைவுப் பேருரையை திருமதி குமாரதுங்க நிகழ்த்தினார்.

இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக பிரிட்டனின் செனல் 4 தொலைக்காட்சியில் ‘இலங்கையின் கொலைக் களங்கள்’ என்ற தலைப்பிலான விவரணப்படம் ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நேரம் அது.
’28 வயதான எனது மகன் கொலைக் களங்களை பிரித்தானிய தொலைக்காட்சியில் பார்த்த பின்னர் ஒரு இலங்கையர் என்றும், பௌத்தர் என்றும் தன்னைக் கூறுவதற்கு வெட்கப்படுவதாக எனக்கு தொலைபேசி மூலம் ஒரு காலைவேளை தெரிவித்தார். அந்தவேளையை எனது வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன். எனது மகளும் இதே போன்ற கருத்தைத் தெரிவித்தார். எமது நாட்டவர்கள் இத்தகைய பயங்கர நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்பது குறித்து அவர்கள் அதிர்ச்சியையும், அச்சத்தையும் வெளிப்படுத்தினர். எனது மகனும் மகளும் மற்றவர்களைப் பற்றி அக்கறைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பது குறித்து நான் பெருமைப்படுகின்றேன். அவர்கள் இருவரும் தங்களது தாயாரும் தந்தையாரும் விரும்பியபடியான மனிதர்களாக வளர்ந்திருக்கிறார்கள் என்பது குறித்தும் நான் பெருமைப்படுகிறேன். ஒரு தேசம் என்ற வகையில் இலங்கையர்களாகிய நாம் தோல்வியடைந்து விட்டோம் என்பதை தன்னடக்கத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். எமது தவறுகளை ஒப்புக்கொள்வதற்கான நேர்மையையும் தவறுகளைத் திருத்திக்கொள்வதற்கான பெருந்தன்மையையும் நாம் கொண்டிருக்க வேண்டும். நிரூபிக்கப்பட்ட உண்மைகளையும் நேர்மையான விமர்சனங்களையும் தொடர்ந்தும் நிராகரிப்பது எவரது பிரச்சினையையும் தீர்த்து வைக்க உதவாது. நல்லிணக்கம், புனர்வாழ்வு, புனரமைப்பை அடையும் உயரிய இலக்கிற்கு எமது தலைவர்கள் தலைமை தாங்கவேண்டும்’ என்று திருமதி குமாரதுங்க அன்று தனதுரையில் குறிப்பிட்டார். அவ்வாறு பேசிக்கொண்டிருந்த போது ஒரு கட்டத்தில் அவர் கண்கலங்கிய நிலையில் ஒரு சில நிமிடங்கள் மெளனம் சாதித்ததையும் கண்டோம்.
இலங்கையர்கள் என்றும் பௌத்தர்கள் என்றும் கூறுவதற்கு தனது பிள்ளைகளை வெட்கப்படவைத்த போர்க்குற்றங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதற்கு அவசியமான விசாரணையை அவசியமற்றது என்று ஏன் முன்னாள் ஜனாதிபதி இப்போது கூறுகிறார்? புதியதொரு அரசியலமைப்பைக் கொண்டுவந்து, அடுத்து காணாமல் போனோர் அலுவலகத்தையும் அமைத்துவிட்டால் போர்க்குற்ற விசாரணைக்கு நீதிமன்றங்கள் தேவையில்லை என்று அவர் கூறுகிறார் என்றால், இதுகாலவரையான பாதிப்புக்களுக்கும் போர்க்குற்றங்களுக்கும் பரிகாரம் கிடைக்கக்கூடிய அளவுக்கு தமிழ் மக்களை திருப்தி படுத்தக்கூடிய அரசியல் தீர்வைத் தரவல்ல பயனுறுதியுடைய அரசியலமைப்பொன்றை கொண்டுவருவதற்கேதுவான அரசியல் சூழ்நிலை இன்று தென்னிலங்கையில் இருக்கிறதா ? நிரூபிக்கப்பட்ட உண்மைகள்’, நேர்மையான விமர்சனங்கள் என்று நினைவுப் பேருரையில் தானே குறிப்பிட்டவற்றை தமிழர்கள் மறந்து விட வேண்டும் என்று இப்போது திருமதி குமாரதுங்க எதிர்பார்க்கின்றாரா?
போரின் இறுதிக்கட்டங்களில் குடிமக்கள் இழப்பு அறவே ஏற்படவில்லை என்பதே முன்னாள் ஜனாதிபதி ராஜபக் ஷவின் நிலைப்பாடாக இருக்கிறது. இன்றைய ஆட்சியாளர்கள் குறிப்பாக ஜனாதிபதி சிறிசேன போர்க் குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீதான குற்றச்சாட்டுக்களை கைவிடுவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை நிர்ப்பந்திக்க அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உதவியை நாடுவது குறித்துப் பேசுகிறார்கள்.
போர்க் குற்றங்கள் தொடர்பிலான பொறுப்புடைமையை ஏற்றுக்கொண்டு அவற்றுக்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன்நிறுத்துவதற்கும் தென்னிலங்கை தயாராயில்லை. தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான பயனுறுதியுடைய முயற்சிகளுக்கும் தயாராயில்லை என்பதே தமிழ் மக்கள் முன்னால் விரிந்துகிடக்கும் யதார்த்த நிலை என்றே எண்ணவேண்டியுள்ளது. இறுதியாக டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் ஃபொக்ஸ் நியூஸுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்த கருத்தொன்றை நினைவுபடுத்துவது இவ் விடத்தில் பொருத்தமாக இருக்கும்.
‘உலகம் பூராவும் பெரும் எண்ணிக்கையான மக்கள் உயிரிழப்பதற்கு அமெரிக்காவின் தவறுகளே காரணம். நாம் பல தவறுகளைச் செய்திருக்கிறோம். பெரும் எண்ணிக்கையானவர்களைக் கொலை செய்திருக்கிறோம். எம்மிடையே பெருமளவு கொலைகாரர்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவை பாவம் செய்யாத நாடு என்று நினைக்கிறீர்களா?’
ஆயிரம் குறைபாடுகள் இருந்தாலும், தனது நாடு செய்த பாவங்களை ஒப்புக்கொள்கிற அளவுக்கு ஒரு நேர்மை ட்ரம்பிடம் இருந்திருக்கிறதே ? நம்மவரிடம்…..?




