சமாதான உடன்படிக்கைக்குப் பிறகு கடந்துவிட்ட மூன்று தசாப்தங்கள்
வீரகத்தி தனபாலசிங்கம்
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணும் முயற்சியாக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவும் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் கொழும்பில் இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு நேற்றைய தினத்துடன் சரியாக 30 வருடங்கள் கடந்து விட்டன இலங்கைப் பிரச்சினையில் 1983 கறுப்பு ஜூலைக்குப் பின்னரான இந்தியாவின் நேரடித் தலையீட்டின் உச்சக் கட்டமாக அமைந்த அந்த உடன்படிக்கையை அடுத்து மாகாண சபைகள் முறையை அறிமுகப்படுத்துவதற்காக இலங்கையின் அரசியலமைப்புக்கு 13 வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. மாகாண சபைகள் முறையும் அடுத்த வருடத்துடன் 30 வயதை எட்டவிருக்கும் நிலையில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து இன்னமும் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.
இலங்கையின் பிரபலமான அரசியல் விஞ்ஞானப் பேராசிரியர்களில் ஒருவரான ஜெயதேவ உயன்கொட இந்திய -இலங்கை சமாதான உடன்படிக்கையின் மூன்று தசாப்த நிறைவை முன்னிட்டு இந்தியாவின் பிரதான ஆங்கிலத் தினசரிகளில் ஒன்றான ‘த இந்து’வில் கடந்த வாரம் எழுதிய கட்டுரையொன்றில் ‘உடன்படிக்கையின் கதை இலங்கையினதும் இந்தியாவினதும் வரலாறுகளின் அங்கமாகிவிட்டது. ஆனால், உடன்படிக்கைக்குப் பிறகு இலங்கையின் அரசியல் மாறியிருக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை என்பதும் ஆம் என்பதுமே பதிலாக இருக்கும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். பேராசிரியரின் இந்தக் கருத்து உடன்படிக்கைக்குப் பிறகு மூன்று தசாப்தங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இனப்பிரச்சினையும் அதற்கான தீர்வு முயற்சிகளும் இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கின்றன என்பதை முரண்நகையாக உணர்த்துகின்றது.
நாம் விரும்புகின்றோமோ இல்லையோ சமாதான உடன்படிக்கைக்குப் பிறகு இலங்கையில் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பிலான அரசியல் விவாதங்கள் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை ஒரு அளவுகோலாகக் கொண்டே பெரும்பாலும் அமைந்திருக்கின்றன. மாகாண சபைகள் முறையை இனப்பிரச்சினைக்கான தீர்வாக தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று தமிழர்கள் கூறுகின்ற போதிலும், அதில் பங்கேற்காமல் இருக்கவும் அவர்களால் முடியவில்லை.

புதிய அரசியலமைப்பொன்றை வரைவதற்கு தற்போது முன்னெடுக்கப்படுகின்ற செயன்முறைகளின்போது அதிகாரப்பரவலாக்கல் விவகாரத்தைப் பொறுத்தவரை பரிசீலனைக்கு எடுக்கப்படுகின்ற அதிகாரங்கள் தொடர்பான யோசனைகள் 13 வது திருத்தத்தின் ஏற்பாடுகளையும் விட பெருமளவுக்கு அதிகமானவையாக இருக்கின்றன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் பகிரங்கமாக பல தடவைகள் கூறியிருக்கிறார். தற்போது மாகாண சபைகளுக்குச் சட்டரீதியாக இருக்கின்ற அதிகாரங்களைக் கூட முழுமையாக நடைமுறைப்படுத்த அனுமதிக்காத சிங்கள அரசியல் சமுதாயத்தை 13 வது திருத்தத்தில் உள்ளதை விடவும் கூடுதல் அதிகாரங்களைக் கொண்டதான ஏற்பாடுகளை புதிய அரசியலமைப்பில் உள்ளடக்குவதற்கு இணங்கவைக்க முடியுமா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. அத்தகைய இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு உறுதியான செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடிய அரசியல் துணிவாற்றல் இன்றைய தேசிய ஐக்கிய அரசாங்கத்திடம் இல்லை என்பதை கடந்த மாதத்தைய அரசியல் நிகழ்வுப்போக்குகள் தெளிவாக வெளிக்காட்டின.
கடந்த வருட ஆரம்பத்தில் இருந்து அரசியலமைப்புச் சீர்திருத்தச் செயன்முறைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் இலங்கையின் மூன்று பிரதான பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்களும் புதிய அரசியலமைப்பொன்று நாட்டுக்குத் தேவையில்லை என்றும் வேண்டுமானால் தேர்தல் முறையில் மாற்றத்தைச் செய்வதற்கு அரசியலமைப்புத் திருத்தமொன்றைக் கொண்டுவரலாம் என்றும் கூட்டாக அரசாங்கத்துக்கு திடீரென்று ‘அறிவுறுத்தலை’ விடுத்ததன் நோக்கமென்ன? அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் என்று சொல்லப்படுகின்றவை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காணக்கூடியதாக விரிவான அதிகாரப்பரவலாக்கல் ஏற்பாடுகளுக்கு வழிவகுத்துவிடாதிருப்பதை உறுதிசெய்வதில் சிங்கள பௌத்த சமூகத்தின் சார்பில் தாங்கள் அக்கறையாக இருப்பதாக மகாநாயக்கர்கள் வெளிக் காட்டிக் கொள்கிறார்கள் அரசாங்கத்தின் தலைவர்களும் மகாநாயக்கர்களின் உணர்வுகளைச் சாந்தப்படுத்தும் வகையில் அவர்களுக்கு வாக்குறுதிகளை வழங்கியதையும் காணக்கூடியதாக இருந்தது. புதிய அரசியலமைப்பு வரைவை மகாநாயக்கர்களுக்கு காண்பித்து அவர்களின் அபிப்பிராயங்களை அறிந்துகொண்ட பின்னரே இறுதி வரைவு நிறைவு செய்யப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரில் சென்று அவர்களை வணங்கி உறுதியளித்திருந்தார். இத்தகைய சூழ்நிலையில் உத்தேச அரசியலமைப்பில் 13 வது திருத்தத்திற்கு அப்பாலான அதிகாரப்பரவலாக்கல் ஏற்பாடுகள் உள்ளடக்கப்படும் என்று தமிழர்கள் எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியும்? அரசியலமைப்புச் சீர்திருத்தங்களின் வீச்செல்லையை யார் தீர்மானிக்கப்போகிறார்கள் என்பது முன்கூட்டியே வெளிக்காட்டப்பட்டிருக்கும் நிலையில்’ சிங்கள அரசியல் சமுதாயத்திடமிருந்து அரசியல் தீர்வு விடயத்தில் தமிழர்கள் எதிர்பார்க்கக் கூடியவற்றின் எல்லையும் புரியவைக்கப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.
உள்நாட்டுப் போரின் மிகவும் ஆரம்பக் கட்டத்திலேயே இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் கண்டுவிட முடியும் என்ற நம்பிக்கையில் இந்தியா மேற்கொண்ட ஒரு முயற்சியே சமாதான உடன்படிக்கையாகும். கறுப்பு ஜூலைக்கு பின்னரான சூழ்நிலைகளில் இந்திய அரசாங்கத்தின் நெருக்குதல்கள் காரணமாகவே அன்றைய ஜனாதிபதி ஜெயவர்தன உடன்படிக்கையில் கைச்சாத்திட முன்வந்தார். அந்த உடன்படிக்கை எவ்வாறு குழப்பியடிக்கப்படும் என்பதை முன்கூட்டியே உய்த்துணர முடியாத அளவுக்கு அவர் ஒன்றும் ஏமாளித்தனமான அரசியல்வாதியல்ல.
உடன்படிக்கையின் ஏற்பாடுகளுக்கு எவ்வாறு முட்டுக் கட்டைகளை ஏற்படுத்துவது என்பதையும் தீர்மானித்துக் கொண்டுதான் ராஜீவ் காந்தியுடன் உடன்படிக்கையில் அவர் கைச்சாத்திட்டார் என்பதை கடந்த கால இலங்கை அரசியல் நிகழ்வுப்போக்குகளைத் திரும்பிப் பார்த்தால் புரிந்துகொள்ள முடியும். தனக்கு நெருக்குதலைக் கொடுத்த ராஜீவ் காந்தியின் அரசாங்கம், சமாதான உடன்படிக்கையை விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொண்டிராத சூழ்நிலையில் இலங்கையில் ஒரு பாடத்தைப் படிக்கும் என்பதை ஜெயவர்தன நன்கு தெரிந்து வைத்திருந்தார். அதை அவர் மானசீகமாக விரும்பியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. இலங்கைப் பிரச்சினையில் தமிழர்களின் சார்பில் இந்தியா தீவிரமாகத் தலையீடு செய்து வந்த போக்கை மாற்றியமைப்பதில் ஜெயவர்தன வெற்றி கண்டார் என்று தான் சொல்லவேண்டும்.

வடமாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் தற்காலிகமாக இணைப்பதற்கு உடன்படிக்கையில் ஒரு ஏற்பாடு இருந்தது. இணைந்த வடக்கு–கிழக்கு மாகாண சபைக்கு தேர்தல்கள் நடத்தப்பட்டு ஒருவருட காலத்தில் இணைப்பின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்காக கிழக்கு மாகாணத்தில் சர்வஜன வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும் என்று உடன்படிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து அன்று ஜெயவர்தனவிடம் கேட்கப்பட்டபோது சர்வஜனவாக்கெடுப்பு நடத்தப்படும் பட்சத்தில் வடக்கு– கிழக்கு இணைப்பைத் துண்டிப்பதற்கு ஆதரவாக தானே முன்னின்று பிரசாரம் செய்யப் போவதாக அவர் பதிலளித்திருந்தார். உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட தலைவரே அந்த இலட்சணத்தில் தான் அதன் நடைமுறைப்படுத்தல் செய்முறைகள் குறித்து சிந்தித்தார். இவ்வாறாக இலங்கைத் தரப்பில் சூழ்ச்சித்தனமான நோக்கங்களுடன் செய்து கொள்ளப்பட்டதே அந்த உடன்படிக்கையாகும். உடன்படிக்கைக்குப் பிறகு ஓரிரு மாதங்கள் கடந்த நிலையில் வடக்கு கடலில் படகில் வந்து கொண்டிருந்த விடுதலை புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள் பலர் இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டனர். பலாலி இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர்களை கொழும்புக்கு கொண்டுவரும் முயற்சியில் அப்போது தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத் முதலி ஈடுபட்டிருந்தார். அதை அறிந்த அந்த விடுதலை புலிகள் தற்கொலை செய்துகொண்டதும், அதையடுத்து இந்திய அமைதிகாக்கும் படைக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே 1987 அக்டோபரில் சண்டை மூண்டதும் எல்லோருக்கும் தெரியும். பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் லலித் அத்துலத் முதலியிடம் விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினர்களை கொழும்புக்குக் கொண்டுவருவதற்கு மேற்கொண்ட முயற்சியால் சமாதான உடன்படிக்கை குழம்பிப் போகும் என்று நினைக்கவில்லையா என்று கேட்டபோது உடன்படிக்கையைக் குழப்புவதற்காகவே தான் அவ்வாறு செய்ததாக கூறினாராம். இதை அவரின் நெருங்கிய நண்பர் ஒருவர் அவரின் நினைவாக ஆங்கிலப் பத்திரிகையொன்றில் எழுதிய கட்டுரையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான கெடுதியான நோக்கங்களுடனேயே ஜெயவர்த்தன அரசாங்கம் உடன்படிக்கையுடன் தொடர்புடைய விவகாரங்களை அணுகியது. சமாதான உடன்படிக்கையை இலங்கையோ அல்லது இந்தியாவோ இன்னமும் முறைப்படியாக கைவிடவில்லை என்பதைத் தவிர, அதை இப்போது இரு நாடுகளுமே உரிமை கொண்டாடுவதில்லை என்பதே உண்மையாகும். ஜெயவர்தனவுக்குப் பிறகு பதவிக்கு வந்த எந்த இலங்கை ஜனாதிபதியுமே சமாதான உடன்படிக்கை குறித்து பெரிதாகப் பேசவில்லை. ஆனால், 13 ஆவது திருத்தம் குறித்து அவர்கள் தொடர்ந்து பேசி வந்ததில் வஞ்சகத்தனமான நோக்கம் இருந்தது. அரசியல் தீர்வு, அதிகாரப் பரவலாக்கல் குறித்து சர்வதேச சமூகத்திடமிருந்து அதுவும் குறிப்பாக இந்தியாவிடமிருந்து வரக்கூடிய எந்தவொரு வலியுறுத்தலையும் சமாளிப்பதற்கு மாத்திரமே 13 ஆவது திருத்தம் கொழும்பு அரசாங்கங்களுக்கு கை கொடுத்துக் கொண்டிருக்கிறது. போரை முழுமூச்சாக முன்னெடுத்து அதை அதன் தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டுவந்த ராஜபக் ஷ ஆட்சியில் 13 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகளுக்கு அப்பால் சென்று அதிகாரப் பரவலாக்கலை (13+) செய்வது குறித்தும் உறுதிமொழிகள் வழங்கப்பட்ட விசித்திரத்தைக் காணக்கூடியதாக இருந்தது. அதே ராஜபக் ஷ ஆட்சி 2013 செப்டெம்பரில் வடமாகாண சபைக்கு தேர்தலை நடத்துவதற்கு முன்னதாக மாகாண சபைகளுக்கு 13 ஆவது திருத்தத்தின் மூலமாக இருக்கின்ற காணி அதிகாரங்களையும் பொலிஸ் அதிகாரங்களையும் இல்லாமல் செய்வதற்கு அரசியமைப்புக்கு திருத்தங்களைக் கொண்டுவருவது குறித்து யோசனை செய்தது ஒன்றும் இரகசியமானதல்ல .ஆனால், பிறகு அந்த யோசனை கைவிடப்பட்டது. இந்தியாவிடமிருந்து அதற்கு எதிர்ப்பு வந்திருக்கக்கூடும் என்று அப்போது பேசப்பட்டது.
இந்தக் கட்டத்தில் 13 ஆவது திருத்தம் தொடர்பில் கொழும்பு அரசாங்கங்கள் கடைப்பிடித்த அணுகுமுறைகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்தியாவில் வைத்து ஒரு தடவை தெரிவித்த கருத்தை நினைவுபடுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.
2009 மேயில் உள் நாட்டுப் போர் முடிவுக்குப் வருவதற்கு மூன்று மாதங்கள் முன்னதாக ராஜீவ் காந்தி பற்றி முன்னாள் இந்திய மத்திய அமைச்சர் மணி சங்கர் ஐயர் எழுதிய நூலொன்றின் வெளியீட்டு வைபவத்திலும் கலந்துரையாடலிலும் கலந்துகொள்வதற்காக திருமதி குமாரதுங்க டில்லி சென்றிருந்தார். அந்தக் கலந்துரையாடலில் எமது இனநெருக்கடி பற்றி பிரஸ்தாபிக்கும்போது அவர் சமாதான உடன்படிக்கைக்குப் பிறகு இலங்கையில் பதவியில் இருந்த சகல அரசாங்கங்களுமே உடன்படிக்கையின் ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படாதிருப்பதை உறுதி செய்து கொண்டன என்று தெரிவித்திருந்தார். ‘மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஏற்பாடுகளை உள்ளடக்கிய 1987 ஜூலை 29 சமாதான உடன்படிக்கையை இலங்கையில் அடுத்தடுத்து பதவிக்கு வந்த சகல அரசாங்கங்களுமே சூழ்ச்சித் தனமாகச் சீர்குலைத்திருக்கின்றன. உடன்படிக்கையில் விதந்துரைக்கப்பட்டதன் பிரகாரம் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டிருக்குமேயானால், இனநெருக்கடி நீண்ட காலத்துக்கு முன்னரேயே முடிவுக்கு வந்திருக்கக்கூடும். 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த நானும் முயற்சித்தேன். ஆனால், இலங்கையின் அரசியல் கட்சிகளில் சில பிரிவினர் அதற்கு அனுமதிக்கவில்லை. அதை நடைமுறைப்படுத்தினால், நாளடைவில் இலங்கையில் தனித் தமிழ் நாடு தோன்றுவதற்கு வாய்ப்பாகிவிடும் என்று அந்தக் கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்திருந்தன. இலங்கையில் சகல அரசாங்கங்களுமே அந்தத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாதிருப்பதை உறுதி செய்து கொண்டன. என்னாலும் கூட, அதை நடைமுறைப்படுத்தக் கூடியதாக இருக்கவில்லை’ என்று திருமதி குமாரதுங்க குறிப்பிட்டிருந்தார்.
இந்தியா அக்கறைப்படாத பட்சத்தில் சமாதான உடன்படிக்கையின் எந்தவொரு ஏற்பாட்டையும் நடை முறைப்படுத்துவது குறித்து இலங்கை கரிசனை காட்டப் போவதில்லை என்பதே உண்மை. உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலகட்டத்துக்குப் பின்னர் பெரிதும் மாறிவிட்ட சர்வதேச அரசியல் நிலைவரங்களுக்கு மத்தியில் இந்தியா இதுவிடயத்தில் இலங்கை மீது எந்த நெருக்குதலையும் பிரயோகிக்க முன்வரப்போவதில்லை. அதற்கான தேவை தனக்கு இருப்பதாக இந்தியா இப்போது கருதவில்லை.. தமிழர் பிரச்சினையைப் பயன்படுத்தி தனது நலன்களை இலங்கையில் இனிமேலும் பேணமுடியுமென்று இப்போது இந்தியா நம்பவில்லை .

கடந்த பெப்ரவரியில் இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவு செயலாளர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சிலர் சமாதான உடன்படிக்கையின் அடிப்படையில் இந்தியாவுக்கு ஒரு கடப்பாடு இருப்பதால் உத்தேச புதிய அரசியலமைப்பில் வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் மீண்டும் இணைப்பதற்கான ஏற்பாட்டை சேர்க்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் புதுடில்லி கேட்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தனர் .அதற்கு பதிலளித்த ஜெய்சங்கர் இரு மாகாணங்களின் இணைப்பை மீண்டும் செய்யுமாறு இலங்கையை இந்தியா இனிமேல் வற்புறுத்தப் போவதில்லை.1987 சமாதான உடன்படிக்கைக்குப் பிறகு இதுவரையான காலகட்டத்தில் பெருமளவு காரியங்கள் நடந்தேறிவிட்டன. இணைப்பை மீண்டும் செய்வது கஷ்டமானது. கடந்த காலத்துக்குத் திரும்பிச் செல்ல முடியாது. சூழ்நிலை மாறிவிட்டது என்பதால் கொழும்பில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து அண்மைக்காலத்தில் தோன்றியிருக்கக் கூடிய வாய்ப்புக்களைப் பயன்படுத்தி தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதிலேயே சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார் .
தமிழர் பிரச்சினை என்று வரும்போது எந்தவொரு விவகாரத்திலும் இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியா எந்தவிதமான நெருக்குதலையும் இனிமேல் பிரயோகிக்கப்போவதில்லை அல்லது நெருக்குதலைப் பிரயோகிக்க வேண்டுமென்று இலங்கைத் தமிழர்கள் இனிமேல் எதிர்பார்க்கக்கூடாது என்பதே ஜெய்சங்கரின் அந்தக் கருத்துக்கள் மூலமாக உணர்த்தப்பட்ட செய்தி என்றே கூற வேண்டும். தமிழர் பிரச்சினையில்இலங்கை அரசாங்கத்துக்கு கசப்பை ஏற்படுத்தக் கூடிய அல்லது அதனுடன் முரண்படக் கூடியதாக எந்த அணுகுமுறையையும் இந்தியா கடைப்பிடிக்கப் போவதில்லை என்பதால், சமாதான உடன்படிக்கையின் எதிர்காலம் பற்றிய அக்கறை அதற்கு இருக்குமென்று எதிர்பார்ப்பதற்கில்லை.
13 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகளையே முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கையை வழிக்குக் கொண்டுவர இயலாத இந்தியா அந்தத் திருத்தத்திற்கு அப்பால் சென்று அதிகாரப் பரவலாக்கலை வழங்கி இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு இலங்கையை கேட்கவா போகிறது? தமிழர் பிரச்சினையைப் பொறுத்தவரை, இந்தியா இனிமேல் என்ன செய்யப்போகிறது அல்லது என்ன செய்ய வேண்டும் என்பதல்ல இப்போதுள்ள கேள்வி. இந்தியாவை நம்பிக் கொண்டு இனிமேலும் காத்திருப்பதனால் தமிழர்கள் அடையக்கூடியது என்ன என்பதே முக்கியமான கேள்வியாகும்.
சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டவேளையில் இந்திய வெளியுறவுச் செயலாளராக இருந்தவர் தமிழ்நாட்டவரான ஏ. பி. வெங்கடேஸ்வரன். இலங்கைப் பிரச்சினையை ராஜீவ் காந்தியும் அவருக்கு நெருக்கமானவர்களும் கையாண்ட முறையை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ராஜீவ் காந்தியுடன் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து வெளிறவுச் செயலாளர் பதவியில் அவரால் தொடர்ந்து இருக்கவும் முடியவில்லை. இந்தியப் படைகள் இலங்கைக்கு செல்கின்ற போது அந்நாட்டில் இருக்கின்றதையும் விட மிகவும் மோசமான நிலையே அந்தப்படைகள் திரும்பிவரும் போது அங்கு ஏற்பட்டிருக்கும் என்று அவர் அன்று சொன்ன கருத்து இச்சந்தர்ப்பத்தில் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகிறது.




