செய்திகள்

சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட கருணாநிதிக்குத் தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு

திமுக தலைவர் மு கருணாநிதி சமூகவலைதளங்களில் கருத்துகளை வெளியிடுவதற்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறி கருணாநிதி தனது முகநூல் பக்கத்தில் தொடர்ந்து தேர்தல் தொடர்புடைய பதிவுகளை வெளியிடுவதாக அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

தேர்தலன்று நடக்கும் வாக்குப்பதிவு துவங்குவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பே அனைத்து வகையான தேர்தல் பிரச்சாரங்களும் நிறுத்தப்படவேண்டும் என்கிற தேர்தல் ஆணையத்தின் விதியை மீறி கருணாநிதி தனது முகநூல் பக்கத்தில் தொடர்ந்து தேர்தல் தொடர்பான பதிவுகள் இடுவதாகவும், திமுகவைச் சேர்ந்தவர்கள் திமுகவின் தேர்தல் அறிக்கையை பிரச்சாரம் செய்வதாகவும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இந்தத்தடையை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனது முகநூல் பதிவுகள் குறித்து மே மாதம் 17 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையத்திடம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கருணாநிதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
R-06