சம்பந்தன் என்ன செய்யப் போகிறார்?
யதீந்திரா
அரசாங்கத்திற்குள் நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறப் போவதாக எச்சரித்திருக்கின்றனர். எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரைக்கும் தனக்கு கால அவகாசம் தருமாறு மைத்திரி அவர்களிடம் மன்றாடிக் கொண்டிருக்கின்றார். எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் கூட்டு அரசாங்கத்திற்கான புரிந்துனர்வு உடன்பாடு முடிவுக்குவருகிறது.
இன்னொரு புறம் மகிந்த ராஜபக்சவோ சந்தர்ப்பம் பார்த்து காத்திருக்கிறார். ஆனால் சம்பந்தனோ வழமைபோல் ஆசுவாசமாக, தனது மெய்ப்பாதுகாவலர்கள் புடைசூழ ஆலயங்களுக்கும் விழாக்களுக்கும் சென்று கொண்டிருக்கிறார். முன்னர் எப்படிப் பேசினாரோ இப்போதும் அப்படியே பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால் முன்னர் இருந்த மைத்திரிபால இப்போதில்லை. முன்னர் இருந்த ரணில் விக்கிரமசிங்க இப்போதில்லை. ஆனால் சம்பந்தன் மட்டும் அப்படியே இருக்கிறார். தமிழ் மக்களிடம் பேசும்போது நம்பிக்கையோடு இருங்கள், பொறுமையாக இருங்கள் என்று வழமைபோல் பேசும் சம்பந்தன், வெளிநாட்டு பிரதிநிதிகளை சந்திக்கும் போதும் ஒரே மாதிரியாகவே பேசி வருகிறார். அதாவது சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஜக்கிய தேசியக் கட்சியும் இணைந்து செயற்பட்டாலேயே புதிய அரசியல் யாப்பை உருவாக்க முடியும். தமக்கிடையிலான போட்டிகளை கைவிட்டு, இரண்டு கட்சிகளும் புதிய அரசியல் அமைப்பை உருவாக்க உதவ வேண்டும். அதற்கு அனைத்துலக சமூகம் அழுத்தங்களை கொடுக்க வேண்டும். ஆட்சி மாற்றம் இடம்பெற்ற நாளிலிருந்து சம்பந்தனோ சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாகவே இருந்துவருகிறார். ஆனால் நிலைமைகளோ சம்பந்தனின் நம்பிக்கையை தகர்க்கும் வகையில் நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கிறது.
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றொரு பழமொழியுண்டு. இப்போதும் இது கிராமப்புறங்களில் வழக்கதிலுண்டு. அதாவது ஓருவர், ஒரே நேரத்தில் நேரெதிரான இரண்டு விடயங்களுக்கு ஆசைப்படும் போது அவ்வாறானவர்களை கிண்டல் செய்வதற்கு இந்தப் பழமொழி பயன்படுத்தப்படுவதுண்டு. சம்பந்தனைப் பொறுத்தவரையில் தான் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்க வேண்டும் அதே வேளை, தமிழ் மக்களின் தானைத் தலைவராகவும் இருக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவராக இருக்க வேண்டும் என்றால் சிங்கள மக்களை கோபப்படுத்தும் எந்தவொரு காரியத்தையும் செய்யக் கூடாது. அதாவது அவர்களுக்கு நோகாமல் அரசியல் செய்ய வேண்டும். அதே வேளை தமிழ் மக்களின் அரசியல் நகர்வுகளும் தனது கட்டுப்பாட்டுக்குள் மட்டுமே இருக்க வேண்டும். அது தொடர்பில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எவையும் எந்தவொரு கேள்வியையும் கேட்கக் கூடாது. அப்படி கேட்டால் அது நிலைமைகளை குழப்பும். இந்த இடத்தில் ஒரு சிறந்த உதாரணத்தை குறிப்பிட முடியும்.
சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவரான பின்னர் ஒரு முறை கூட புதுடில்லிக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவில்லை. இது தொடர்பில் ஒரு முறை சுரேஸ் பிறேமச்சந்திரன் அறிவுறுத்தியிருக்கிறார். கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் புதுடில்லிக்கு சென்று நிலைமைகளை தெளிவுபடுத்துவோம். ஒரு வேளை அரசாங்கம் சில காரணங்களை முன்வைத்து எங்களை சந்திப்பதை தவிர்த்துக் கொண்டாலும் கூட, நாம் அங்குள்ள சிந்தனைக் குழுhம்களுடன் பேச முடியும், ஊடகங்களுடன் பேச முடியும். பின்னர் அந்த ஊடகங்கள் புதுடில்லியை நோக்கி பேசும். ஆனால் இதற்கு சம்பந்தன் அளித்த பதில் மிகவும் இலகுவானது. அவ்வாறு நாம் செய்தால் சிங்கள மக்கள் கோபிப்பார்கள். இவ்வளவுதான் சம்பந்தனின் அரசியல் புரிதல். இதே போன்றதொரு அரசியல் புரிதல்தான் சுமந்திரனிடமும் உண்டு. அதாவது, பகிரங்க தளங்களில் விடுதலைப் புலிகளும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்கள், கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டவர்கள், அவர்களையும் விசாரரிக்க வேண்டும் என்றெல்லாம் கூறினால் சிங்களவர்கள் உடனே சுமந்திரனை தூக்கி தோளில் சுமப்பர் என்று சுமந்திரன் கணக்குப்போடுகிறார் போலும். ஆனால் அது ஒரு கனவுலவாதம் மட்டுமே. சம்பந்தனின் சிங்கள மக்களை கோபப்படுத்தாத அணுகுமுறை, சுமந்திரனின் புலியெதிர்ப்பு அரசியல் இவற்றால் தெற்கில் எவ்வாறான மனமாற்றம் நிகழ்ந்திருக்கிறது? இத்தனைக்கும் பிறகும்தானே மகாநாயக்கர்கள் புதிய அரசியல் அமைப்பு தேவையில்லை என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றனர்.
ஆட்சி மாற்றத்தின் போது எதனை சம்பந்தன் நம்பிக்கையுடன் நோக்கினாரோ அதுதான் தற்போது பிரச்சினைக்குரிய ஒன்றாகவும் மாறியிருக்கிறது. வரலாற்றில் இரு துருவங்களாக இருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டும் ஒன்றிணைந்தால் அது மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பதே சம்பந்தனது நம்பிக்கையாக இருந்தது. அதனையே அவருக்கு ஆதரவாக இருந்தவர்களும் ஆமோதித்தனர். ஆனால் அந்த நம்பிக்கை தற்போது கேள்விக்குறியாகியிருக்கிறது? இரண்டு கட்சிகள் ஒன்றாக இருப்பதே தற்போது எதனையும் முன்னெடுக்க முடியாத நிலைமையை தோற்றுவித்திருக்கிறது. ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுவதிலும், ஒருவரை ஒருவர் வீழ்த்துவதிலுமே இரு கட்சிகளும் தங்களது நேரத்தை செலவழித்துவருகின்றன.
ஆட்சி மாற்றத்தின் போது ஒரு உடன்பாடு அவசியம் என்று சிலர் சம்பந்தனிடம் அறிவுறுத்தியிருந்தனர். ஆனால் சம்பந்தன் எதனையும் பொருட்படுத்தவில்லை. தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்னும் அடிப்படையிலேயே செயற்பட்டார். உண்மையில் அன்று ஒரு நல்ல சந்தர்ப்பம் இருந்தது. ஆட்சி மாற்றமென்பது ஒரு உள்நாட்டுத் தேவையாக மட்டும் இருந்திருக்கவில்லை. அது பிராந்திய மற்றும் உலகளாவிய சக்திகளினதும் தேவையாக இருந்தது. அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தை சம்பந்தன் சரியாக பயன்படுத்தியிருக்க முடியும். அதற்காக கஜேத்திரகுமார் குறிப்பிடுவது போன்று இந்தியாவுடனும் அமெரிக்காவுடனும் கூட்டமைப்பால் உடன்பாடு செய்ய முடியுமென்று இப்பத்தியாளர் கருதவில்லை. ஒரு நாடு பிறிதொரு நாட்டுக்குள் வாழும் மக்கள் கூட்டமொன்றுடன் உடன்பாடு செய்துகொள்ள வாய்பில்லை. ஏனெனில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் போது கூட விடுதலைப் புலிகள் அமைப்பையோ அல்லது வேறு எந்தவொரு ஆயுத விடுதலை அமைப்பையோ இந்தியா உடன்பாட்டில் ஒரு பங்காளியாக ஏற்றுக்கொள்ளவில்லை. அது இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்பாடாகவே இருந்தது. ஆனால் தமிழர் தரப்பின் கோரிக்கைகளுக்கு அமைவாகவே இந்தியா வடக்கு கிழக்கு இணைப்பிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருந்தது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் அதனை ஒரு தற்காலிக ஏற்பாடாகவும் உள்ளடக்கியிருந்தது. இன்று வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி தமிழர் தரப்பால் பேச முடிகிறதென்றால் அன்று அது இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தமையே காரணமாகும்.

ஆட்சி மாற்றத்தின் போதும் சம்பந்தனுக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சம்பந்தன் அதனை தனது எதேச்சாதிகார பண்பால் தவறவிட்டுவிட்டார். சம்பந்தன் இந்திய அல்லது அமெரிக்க தரப்பை ஒரு சாட்சியாகக் கொண்டு கொழும்புடன் ஒரு உடன்பாட்டுக்குச் சென்றிருக்க முடியும். அவ்வாறானதொரு உடன்பாடு இருந்திருக்குமானால் அதனை ஆதாரமாகக் கொண்டு சர்வதேச சமூகத்தை எதிர்கொண்டிருக்க முடியும். ஆனால் இன்று, கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் என்பது போலவே சம்பந்தனின் வாதங்கள் அமைந்திருக்கின்றன. யாரைக் கண்டாலும் சர்வதேச சமூகம் புதிய அரசியல் அமைப்புக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்கிறார். சுதந்திர வர்த்தக உடன்பாடு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கொழும்பு வந்திருந்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சரிடமும், சம்பந்தன் புதிய அரசியல் அமைப்பு பற்றி பேசுகின்றார். இலங்கையின் உள்ளக நிலைமைகளை நன்கு அறிந்துதானே சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்பாடு தொடர்பில் ஆலோசிக்கின்றது. அதன் பின்னர் அவர்களிடம் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசுவல் என்ன ராஜதந்திரம் இருக்கிறது?
1972இல் கொடுவரப்பட்ட அரசியல் யாப்பு, பின்னர் 1978இல் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பு இரண்டிலும் தமிழ் மக்களின் பங்களிப்பில்லை என்பதுதானே தமிழர் தரப்பின் குற்றச்சாட்டு. ஆனால் இவ்வாறான குற்றச்சாட்டுக்களின் மத்தியில்தானே கொழும்பு சர்வதேசத்துடன் வெற்றிகரமாகப் பணியாற்றியது. கடந்த எழுபது வருடகால அரசியலில் அரசியல் யாப்பு என்னும் ஒரு விவகாரத்தை பொருட்படுத்தாத சர்வதேச சமூகம், இனிவரப் போகும் அரசியல் யாப்பு விடயத்தை முன்னிறுத்தியா இலங்கையை வெறுக்கப் போகிறது? ஆகவே விடயங்களை எங்களின் பக்கத்திலிருந்து நோக்க வேண்டும். மாறாக மற்றவர்களின் பக்கத்தில் இருந்தல்ல. தமிழர் தரப்பு தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பதுதான் எல்லாவற்றையும் விட முக்கியமானது. நிலைப்பாடுகளில் தளர்வை ஏற்படுத்துவதற்குக் கூட ஒரு நிலைப்பாடு கட்டாயமானது. சம்பந்தன் ஆட்சி மாற்றத்தின் போது எந்தவொரு நிலைப்பாடும் இன்றி இருந்ததுதான் இன்றும் தமிழ் மக்கள் ஒரு தனித்தரப்பு என்னும் அந்தஸ்தை இழந்து நிற்பதற்கு முழுக் காரணம். இவ்வாறானதொரு நிலைமைக்காக ஒருவரை குற்றம்சாட்டு முடியுமென்றால் அது சம்பந்தன் மட்டுமே. இன்று இலங்கையில் பல்வேறு விடயங்கள் நிகழ்கின்றன. பொருளாதார உடன்பாடுகள் இடம்பெறுகின்றன. பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விவாதிக்கப்படுகிறது. ஆனால் இவை எவற்றிலும் தமிழர்களின் குரல்களை காணவில்லை. நிலைமை இவ்வாறுதான் தொடரப் போகிறதென்றால் சம்பந்தன் என்ன செய்யப்போகிறார்? தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியுடன் திருப்திகொள்ளப் போகிறாரா அல்லது தமிழ் மக்களின் தலைவராக செயற்படப் போகிறாரா?




