செய்திகள்

சம்பூரில் புதுமையான நிகழ்வு

மக்கள் செறிந்து வாழ்ந்த சம்பூர் கிராமத்தைவிட்டு உடுபுடவைகள்கூட இல்லாமல் மக்கள் வெளியேறி பத்து ஆண்டுகளாகின்றன. நாளை   (25 ) மக்களை 175 ஏக்கரில் மீள குடியமர அனுமதிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

வன்னியிலும், யாழ்ப்பாணத்திலும் மக்கள் மீள்குடியேற்றம் நடைபெற்றபோது கேளிக்கைகளோ, கொண்டாட்டங்களோ இடம்பெறவில்லை. ஆனால் சம்பூரில் மட்டும் றோட்டுப் போட்டால் கொண்டாட்டம், குடியேறினால் கொண்டாட்டம் என எல்லாமே அரசியல் லாபத்துக்காக நடைபெறுவதாக மக்கள் விசனம் அடைந்துள்ளனர்.

ஒருபுறம் அனல்மின் நிலையம், மறுபுறம் மக்களின் விளைநிலக் காணிகளில் மீண்டும் கடற்படைமுகாம், வாழ்வாதாரத்திற்கே வழியில்லாத மக்களின் அவலம் என்று நீண்டு செல்கையில், குடியேற்றத்தை குதூகலக் கொண்டாட்டமாக கொண்டாட ஒரு அணி புறப்பட்டுள்ளது.

ஏற்கனவே சம்பூர் பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் அருகில் முதன்முதலில் பத்தொன்பது குடும்பங்கள் குடியமர்ந்ததற்கு சிலர் உரிமை கோரி நிற்கின்றனர். அதற்காக அப்போதைய ஜனாதிபதியின் புதல்வரிடம் ஐம்பது லட்சம் பணம் பெறப்பட்டதாகவும் ஒருதகவல் இப்போது கசிந்துள்ளது. அந்தப் பணம் எவரிடம் வழங்கப்பட்டது என்பது தொடர்பில் நல்லாட்சி அரசாங்கமே விசாரணை நடாத்த வேண்டும் எனவும் மக்கள் வியந்து நிற்கின்றனர்.

தற்போது விடுபடவுள்ள கடற்படை முகாம் காணி 175 ஏக்கர் நிலத்துக்குப் பதிலாக கடற்படையினருக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் உரிமையாளர்களின் அனுமதியின்றி அரசியல்வாதிகளால் தாரைவார்க்கப்பட்டுள்ளது. அதற்குள் அடங்கும் சிலகுளங்கள், பல நூறு ஏக்கர் வயல்காணிகள், தோட்ட நிலங்கள், சிறு கைத்தொழில் பிரதேசங்கள் போன்றவற்றை மக்கள் இழந்து நிற்கின்றனர்.

இவற்றையெல்லாம் மூடி மறைத்து குடியேற்றத்தைக் கொண்டாட்டமாக்க சிலர் முயற்சிப்பது வேதனைதரும் விடயமாகும்.

எமது சொந்த நிலத்தில் நாம் குடியேற எவரிடம் கேட்க வேண்டும். அதற்கு ஏன் விழா எடுக்க வேண்டுமென்று மக்கள் விசனப்பட்டு நிற்கின்றனர்.

n10