சம்பூர் அனல் மின் திட்டத்தை கைவிடுகின்றது இலங்கை அரசு: இந்திய அரசு கடும் அதிருப்தி
இந்தியாவுடன் கூட்டுமுயற்சியாக மேற்கொள்ளப்படவிருந்த சம்பூர் அனல் மின் திட்டம் கைவிடப்பட்டு விட்டதாக, இலங்கை அரசாங்கம் உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
சம்பூர் அனல் மின் நிலையத் திட்டத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்த போதே, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் சஞ்சய் ராஜரட்ணம், இதனைத் தெரிவித்தார்.
இந்தியாவுடன் கூட்டுமுயற்சியாக மேற்கொள்ளப்படவிருந்த சம்பூர் அனல் மின் திட்டத்தை, இலங்கை மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க வளங்கள் அமைச்சு தொடர்ந்து முன்னெடுக்காது என்று அவர் உயர்நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்தினார்.
மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க வளங்கள் அமைச்சின் செயலர் கலாநிதி அமரநாத் படகொட இதனை அறிவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சம்பூரில் அனல்மின் நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு உள்ளூர் மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசாங்கத்தின் ஒரு தலைப்பட்சமான இந்த செயற்பாட்டினால் இந்தியா கடும் அதிருப்தியடைந்திருப்பதாகத் தெரிகின்றது. இது தொடர்பாக அரசாங்கம் இந்தியாவுக்கு அறிவிக்கவில்லை என்று கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுடன் இணைந்து கூட்டு முயற்சியாக அமைக்கத் திட்டமிட்டிருந்த சம்பூர் அனல் மின் திட்டத்தைக் கைவிட்டுள்ளதாக, சட்டமா அதிபர் மூலம் இலங்கை அரசாங்கம் நேற்று உயர்நீதிமன்றத்தில் அறிவித்தது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள கொழும்பிலுள்ள இந்திய தூதரக பேச்சாளர், எஷா சிறிவத்சவா, “சம்பூர் விவகாரம் தொடர்பாக எந்த விடயங்களையும் இலங்கை அரசாங்கம் இதுவரையில் தெரியப்படுத்தவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
-06




