செய்திகள்

சம்பூர் அனல் மின் நிலைய காணிகளிலிருந்து வெளியேற மறுப்போருக்கு எதிராக நடவடிக்கை

சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு என ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ள காணிகளிலிருந்து வெளியேற மறுப்பு தெரிவித்துள்ள குடும்பங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

அனல் மின் நிலையத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட காணிகளிலிருந்து வெளியேறும்படி, மூதூர் பிரதேச சிவில் நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதேச செயலாளரால் இவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், அங்கிருந்த மூன்று குடும்பங்கள் வெளியேற மறுத்துவிட்டன. இவர்களுக்கு எதிராக பிரதேச செயலாளரால் மூதூர் நீதிமன்றத்தில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இவர்கள் சார்பில் ஆஜரான மனித உரிமைகளுக்கான சட்டத்தரணி கே.எஸ். ரட்னவேல் இதற்கு எதிராக ஆட்சேபனை தெரிவித்திருந்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்ய எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி விசாரணையை ஓத்திவைத்துள்ளது.

சம்பூர் பிரதேச மக்கள் 10 வருடங்களுக்கு முன்பு யுத்தம் காரணமாக அங்கிருந்து வெளியேறியிருந்தனர். கடந்த வருடம்தான் அவர்கள் தங்கள் சொந்த காணிகளில் மீளக் குடியேறியுள்ளனர்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஜனாதிபதியினால் மீள் குடியேற்றத்திற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்த வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி கே. எஸ். ரட்னவேல்  தெரிவித்தார்.

n10