சரத் பொன்சேகாவைச் சுற்றி ஒரு அரசியல் சர்ச்சை
வீரகத்தி தனபாலசிங்கம்
எமது அரசியல்வாதிகளில் அதிகப் பெரும்பான்மையானவர்கள் தாங்கள் பொதுவெளியில் பேசுகின்றவற்றைப் பற்றி நாட்டு மக்கள் என்ன நினைப்பார்கள் என்பது குறித்து கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. அதுமாத்திரமல்ல, அவர்கள் பேசுகின்ற அநேகமான விடயங்கள் மக்களின் அடிப்படை விவேகத்தையே நிந்தனை செய்பவையாகவும் கூட இருக்கின்றன. முன்னாள் இராணுவ தளபதியும் தற்போதைய அமைச்சருமான ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை மையப்படுத்தியதாக மூண்டிருக்கும் ஒரு சர்ச்சை இதற்கு மிக அண்மைய உதாரணமாகும்.
அடிக்கடி வேலை நிறுத்தங்களும், வீதிப் போராட்டங்களும் இடம் பெறுவதால் அரசாங்கம் பெரும் நெருக்கடியை எதிர்நோக்குகின்றது. இந்தப் போராட்டங்களினால் பொது மக்களுக்கான சேவைகள் சீர்குலைக்கப்படுகின்ற சூழ்நிலை தோன்றியிருக்கிறது. இதனால் நிலைவரத்தைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய தேவையை உணர்ந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இருவாரங்களுக்கு முன்னர் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒரு யோசனையை முன்வைத்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. மின்சார விநியோகம், எரிபொருள் விநியோகம் மற்றும் துறைமுக செயற்பாடுகள் போன்ற அத்தியாவசிய சேவைகளைச் சீர்குலைக்கும் வகையிலான தொழிற்சங்கப் போராட்டங்களினால் தோன்றக்கூடிய அவசரகாலச் சூழ்நிலையை உருப்படியான முறையில் கையாளுவதற்கு பொன்சேகா தலைமையில் விசேட உபகுழுவொன்றை அமைக்கவேண்டுமென்பதே அந்த யோசனையாகும்.
திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்களை லங்கா இந்தியன் ஒயில் கம்பனிக்கு குத்தகைக்கு விடுவதற்கு அரசாங்கம் மேற்கொள்வதாகக் கூறப்படுகின்ற முயற்சிக்கு எதிராக பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தொழிற்சங்கங்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தின் விளைவாக நாடு பூராவும் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டதற்கு மறுநாளே ஜனாதிபதியின் யோசனை பற்றிய செய்திகள் வந்திருந்தன.

இதையடுத்து நடந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளரான சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன நாட்டில் ஒழுங்கு கட்டுப்பாட்டைப் பேணுவதற்கு இருவருட காலத்துக்கு இராணுவத் தளபதி பதவியை அல்லது முப்படைகளினதும் பொறுப்புத் தளபதி பதவியை ஏற்பதற்காக ஃபீல்ட் மார்ஷல் பொன்சேகா தனது அமைச்சர் பதவியைத் துறக்க வேண்டுமென்று ஜனாதிபதி கேட்டுக் கொண்டதாகவும் முறையான அதிகாரங்களும் பொறுப்பும் தரப்பட்டால் அமைச்சர் பதவியைத் துறந்து புதிய பொறுப்பை வகிப்பதற்கு தயாராக இருப்பதாக பொன்சேகா இணங்கிக் கொண்டதாகவும் தெரிவித்தார். பொன்சேகாவும் கூட இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்ததையும் காணக்கூடியதாக இருந்தது. களனியில் இடம்பெற்ற புதுவருடக் கொண்டாட்டங்களின்போது செய்தியாளர்களிடம் பேசிய பொன்சேகா அத்தியாவசிய சேவைகள் சீர்குலைக்கப்படும் போது மக்கள் பாதிக்கப்படாத வகையில் அந்தச் சேவைகளை முன்னெடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு தன்னிடம் ஜனாதிபதி கேட்டுக் கொண்டதாகக் கூறினார். இராணுவத்தைப் பொறுப்பேற்குமாறு தன்னிடம் ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளை தான் நிராகரித்துவிட்டதாகவும் அதற்குப் பிறகே அத்தியாவசிய சேவைகள் சீர்குலைக்கப்படாதிருப்பதை உறுதி செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு தன்னிடம் ஜனாதிபதி கேட்டுக் கொண்டதாகவும் பொன்சேகா கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
ஜனாதிபதியினால் முன் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற இந்த யோசனைக்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் போன்ற பிரதான தொழிற்சங்கங்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. இதையடுத்து சில அமைச்சர்கள், ஜனாதிபதி அத்தகைய எந்தவொரு யோசனையையும் முன்வைக்கவில்லை என்று கூறிய அதேவேளை, வேறு சில அமைச்சர்கள் ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் வேடிக்கையாக பேசினாரே தவிர, பொன்சேகாவுக்கு பொறுப்பைக் கொடுப்பது குறித்து கருத்தூன்றிய முறையில் பேசவில்லை என்று சொன்னார்கள். அத்தியாவசிய சேவைகள் சீர்குலைக்கப்படாதிருப்பதை உறுதி செய்வதற்கான பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்த உதவ முடியுமா என்று பொன்சேகாவை ஜனாதிபதி கேட்டார். அதற்கு அவர் இணங்கிக் கொண்டார். இராணுவத்தளபதி பதவியையோ அல்லது இராணுவத்தில் வேறு பதவியையோ அவருக்கு கொடுப்பதற்கான திட்டம் எதுவும் கிடையாது. ஒரு ஃபீல்ட்மார்ஷல் என்ற வகையில் பொன்சேகா இராணுவத்தளபதியின் தரத்துக்கு மேலானவர். அனுபவம் நிறைந்த முன்னாள் இராணுவத் தளபதி என்ற வகையில் அவர் சகல அமைச்சுக்களுக்கும் உதவுவார். அரசாங்க செயற்பாடுகளுக்கு அவரின் ஒத்துழைப்பை இதுவரை நாம் போதுமானளவுக்கு பெற்றுக்கொள்ளவில்லை என்று கடற்தொழில், நீரியல் வள அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளருமான மகிந்த அமரவீர கூறினார்.

அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் பேசிய அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க, ஜனாதிபதி அக்கறையுடன் பேசவில்லை. அவர் வேடிக்கையாகவே குறிப்பிட்டார் என்று கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது. வேலை நிறுத்தப் போராட்டங்களை கட்டுப்படுத்தும் பொறுப்பை பொன்சேகாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜனாதிபதி நகைச்சுவையுணர்வுடன் கூறினாரே தவிர அக்கறையுடன் அத்தகைய யோசனையை அவர் முன்வைக்கவில்லை என்று தொழில், தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரத்னவும் கூறினார். “அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ளவில்லை. பொன்சேகா பற்றிய செய்தியை ஊடகங்கள் மூலமாகவே அறிந்தேன். பிறகு நான் ஜனாதிபதியைச் சந்தித்தபோது அவர் தான் நகைச்சுவையாக குறிப்பிட்டதாக என்னிடம் சொன்னார். ஜனாதிபதி நினையாப் பிரகாரம் சொன்னதை தேவையற்ற முறையில் பெரிதுபடுத்துகிறார்கள். சிலர் இதைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் அடைய முயற்சிக்கிறார்கள். அமைச்சரவைப் பேச்சாளர் பொறுப்புணர்வுடன் கருத்துக்களை வெளியிட வேண்டும்” என்று செனவிரத்ன கூறினார்.
இதையடுத்து கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ராஜித சேனாரத்ன, அமைச்சர் ஜோன் செனவிரத்னவை கடுமையாகக் கண்டனம் செய்தார். ஊழல் மோசடிகளை விசாரணை செய்வதற்காக பொன்சேகாவை நியமிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்திருக்கிறார். பொன்சேகா பற்றி செய்தி வந்ததும் ஜோன் செனவிரத்ன உட்பட சிலர் பயந்து நடுங்குகிறார்கள். செனவிரத்ன போன்றவர்கள் ஒரு காலை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ பக்கத்திலும் மறு காலை ஜனாதிபதி சிறிசேன பக்கத்திலும் வைத்துக் கொண்டு மதில் மேல் பூனைகள் போன்று செயற்படுகிறார்கள் என்று சேனாரத்ன குற்றஞ்சாட்டினார்.
இதேவேளை, அரசாங்கத்துக்கு எதிரான சீர்குலைவு நடவடிக்கைகளை தனது உதவியுடன் கட்டுப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி வேடிக்கையாக கூறியதாக எஸ்.பி.திசாநாயக்க போன்ற அமைச்சர்கள் வெளியிட்ட கருத்துக்களை நிராகரித்த பொன்சேகா, அரசியல் நோக்குடனான வேலை நிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் விளைவாக அரசியல் உறுதிப்பாடின்மை ஏற்படுவதைத் தடுக்க தன்னால் ஏதாவது பங்கையாற்ற முடியுமா என்று ஜனாதிபதி தன்னிடம் அக்கறையுடனேயே கேட்டதாக குறிப்பிட்டிருக்கிறார். எஸ்.பி.திசாநாயக்க வெளியிட்டதைப்போன்று கருத்தை தெரிவித்த ஜோன் செனவிரத்ன முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக் ஷவின் அடிவருடி என்றும் அவரின் கருத்தைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்றும் கூறிய பொன்சேகா, ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற விரும்பியிருந்தால் இராணுவத் தளபதியாக இருந்த வேளையில் தன்னால் அதைச் செய்திருக்க முடியுமென்றும் கொழும்பின் நான்கு மூலைகளிலும் தடையைப் போட்டுவிட்டு அரசாங்கமொன்றை அமைத்திருக்க முடியுமென்றும் கூட குறிப்பிட்டிருக்கிறார்.
ராஜித சேனாரத்னவும் பொன்சேகாவும் தன்னைப் பற்றி தெரிவித்த கருத்துக்களினால் பெரிதும் மனமுடைந்து போன ஜோன் செனவிரத்ன மேதினத்துக்கு மறுநாள் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி சிறிசேனவிடம் முறையிட்டதாக செய்திகள் வெளியாகின. ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினப் பேரணியில் சேனாரத்னவும் பொன்சேகாவும் ஜோன் செனவிரத்னவைத் தாக்கிப் பேசியதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரான மலிக் சமரவிக்கிரம வருத்தம் தெரிவித்திருக்கிறார். கோதாபய ராஜபக் ஷவின் அடிவருடி என்று தன்னைக் குற்றச்சாட்டுகிறவர்கள் தான் உண்மையில் அவரின் அடிவருடிகளாக இருந்தார்கள் என்று ஜோன் செனவிரத்ன பதிலுக்கு சாடியிருக்கிறார்.

வாதப் பிரதிவாதங்களும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டுக்களும் இவ்வாறாக தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் பொன்சேகா விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டைக் கூறியிருக்கிறார். ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி) யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கிளப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர், ‘விசேட இராணுவ பிரிவொன்றை அமைப்பது குறித்து அமைச்சரவையில் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. நாட்டின் சட்டத்தின் படி பாதுகாப்பு படைகளின் பிரதம தளபதி ஜனாதிபதியே. இராணுவ தளபதியாக இருந்த ஃபீல்ட் மார்ஷல் பொன்சேகா நிறைந்த அனுபவம் கொண்டவர். அமைச்சரவைக்குள்ளேயும் வெளியேயும் அவர் செய்து வருகின்ற பங்களிப்புகளை நானும் ஜனாதிபதியும் மதிக்கிறோம். விசேட இராணுவப் பிரிவொன்றை அமைப்பதில் நாம் நாட்டம் கொண்டிருக்கவில்லை. நாட்டின் சுயாதிபத்தியத்தையும் பாதுகாப்பையும் பேணுவதற்கே நாம் பாதுகாப்பு படைகளைப் பயன்படுத்துகின்றோம். பொன்சேகாவுக்கு புதிய பதவி கொடுப்பது குறித்து அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அவரே பாராளுமன்றத்தில் விளக்கமளிப்பார். சீர்குலைவு அல்லது இடைநிறுத்தம் இன்றி அத்தியாவசிய தேவைகளை எவ்வாறு பேணுவது என்பதில் மாத்திரமே அரசாங்கம் முக்கிய கவனத்தைச் செலுத்துகிறது. எந்தவொரு அவசரகாலச் சூழ்நிலையிலும் அத்தியாவசிய சேவைகள் சீர் குலைக்கப்படாதிருப்பதை உறுதி செய்து கொள்வதற்கு விசேட குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்று ஜனாதிபதியையும் என்னையும் அமைச்சர்கள் கேட்டுக்கொண்டார்கள். இதுதொடர்பில் மேலும் கலந்தாலோசனைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அந்தக் குழுவில் பொன்சேகாவுக்கு ஒரு பொறுப்பைக் கொடுக்க வேண்டுமென்று இந்த கலந்தாலோசனைகளின் முடிவில் தீர்மானமொன்று வருமாக இருந்தால் அதை எம்மால் செய்யக்கூடியதாக இருக்கும்’ என்று கூறினார். இதனிடையே ராஜபக் ஷ விசுவாசியான பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் இந்த விவகாரத்தில் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித செனாரத்ன கூறியிருப்பதையே ஆதாரமுடைய தகவலாகக் கருதமுடியும் என்று குறிப்பிட்டார்.
அடிக்கடி இடம்பெறுகின்ற வேலை நிறுத்தங்களும் வீதிப்போராட்டங்களும் இன்றைய அரசாங்கம் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க இயலாததாக இருக்கிறதென்ற எண்ணத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ராஜபக் ஷ ஆட்சியில் இப்படியெல்லாம் வாரமொரு வேலைநிறுத்தமும், அநேகமாக தினமும் தலைநகரில் ஒரு வீதி ஆர்ப்பாட்டமும் நடந்திருக்க முடியுமா என்று சாதாரண மக்கள் இயல்பாகவே கேட்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
இன்றைய அரசாங்கத்தின் கீழ் நாட்டில் நிலவுகின்ற ஒப்பீட்டளவிலான ஜனநாயக வெளியை ஜனாதிபதியும் பிரதமரும் தாங்கள் நடத்துகின்றதாகக் கூறுகின்ற நல்லாட்சிக்கு ஆதரவான சக்திகளை விடவும் அதற்கு எதிரான சக்திகளே தங்களுக்கு சாதகமான முறையில் உச்சபட்சத்திற்கு பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. தொழிற்சங்க போராட்டங்கள் மற்றும் வீதிப் போராட்டங்கள் சகலதிலுமே நியாயமில்லை என்று கூறிவிட முடியாது. ஆனால் அண்மைக்காலமாக தீவிரமடைந்திருக்கும் பல போராட்டங்கள் முற்றிலும் கட்சி அரசியல் நோக்கங்களுடனானவை என்பதில் சந்தேகமில்லை. முன்னாள் ஜனாதிபதி ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு எதிரணியினர் இந்த போராட்டங்களின் பின்னணியில் இருந்து செயற்படுகின்றார்கள். தங்களது வியூகங்கள் பெருமளவுக்கு வெற்றியளித்து வருவதையடுத்து கூட்டு எதிரணியினர் 1953 ஆகஸ்டில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு எதிராக இடதுசாரிக் கட்சிகளினால் நடத்தப்பட்ட வெற்றிகரமான ஹர்த்தாலை ஒத்த போராட்டத்தை நடத்தக்கூடிய சாத்தியம் குறித்தெல்லாம் பேசுவதற்கு துணிச்சல் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. மேதினத்தன்று காலி முகத்திடலில் நடைபெற்ற பேரணியில் பெருமளவில் மக்கள் திரண்டதால் உற்சாகம் அடைந்த கூட்டு எதிரணி அரசியல்வாதிகள் தலைநகரில் அரசாங்க நிறுவனங்களை மக்கள் முற்றுகையிடும் நாள் தொலைவில் இல்லை என்று எச்சரிக்கை விடுக்கவும் தயங்கவில்லை.
அடிக்கடி இடம் பெறுகின்ற போராட்டங்கள் காரணமாக ஒருவித அராஜக சூழ்நிலை தோன்றக்கூடிய ஆபத்து இருக்கிறது. இவ்வாறு கூறும்போது அதை இன்றைய அரசாங்கத்தின் அணுகுமுறைகளையும் செயற்பாடுகளையும் நியாயப்படுத்த முயற்சிப்பதாக அர்த்தப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை.
இன்று காணப்படக்கூடியதாக இருக்கின்ற தொழிற்சங்க மற்றும் வீதிப்போராட்ட அலையை தடுத்து நிறுத்த வேண்டுமானால் கடுமையான எதிர்நடவடிக்கைகளில் இறங்க வேண்டியது அவசியம் என்று அரசாங்கம் நினைப்பதன் ஒரு வெளிப்பாடுதான் அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி சிறிசேன முன்வைத்ததாகக் கூறப்படுகின்ற யோசனையாகும். அவர் பொன்சேகாவிடம் வேடிக்கையாகப் பேசினாரா இல்லையா என்பதல்ல இங்குள்ள பிரச்சினை. இராணுவ நடவடிக்கை போன்று இரும்புக்கரம் கொண்டு சில நடவடிக்கைகளை எடுத்தால் மாத்திரமே அரசாங்கத்துக்கு எதிரான தற்போதைய போராட்டங்களை கட்டுப்படுத்த முடியும் என்று அரசாங்கத் தலைவர்கள் நம்புகிறார்கள் என்பதே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும்.
உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்த ஆயுதப் படைகள் இலங்கையில் எந்தக் காரியத்தையும் ‘கச்சிதமாக’ செய்துமுடிக்கக் கூடிய தகுதியும் வல்லமையும் கொண்டவை என்ற அபிப்பிராயம் தென்னிலங்கை அரசியல் வர்க்கத்திடம் வேரூன்றியிருக்கிறது. போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவத் தளபதியாக இருந்த பொன்சேகாவை ராஜபக் ஷாக்களே ‘உலகிலேயே தலைசிறந்த இராணுவத் தளபதி’ என்று புகழ்ந்துரைத்தனர் என்பது எல்லோருக்கும் நினைவிருக்கிறது. பிறகு அதே பொன்சேகாவை ராஜபக் ஷாக்கள் தங்கள் இரண்டாவது பதவிக்காலத்தில் எவ்வாறு நடத்தினார்கள் என்பது வேறு கதை. போரைக் ‘கச்சிதமாக’ முடித்துவைத்ததைப் போன்று பொன்சேகாவினால், தற்போதைய தொழிற்சங்கப் போராட்டங்களையும் அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டு வரமுடியுமென்று ஜனாதிபதி சிறிசேன நினைக்கிறார் போலும். ராஜபக் ஷாக்களின் ஆட்சிக் காலத்தில் இலங்கை அரசியல் கூடுதலான அளவுக்கு இராணுவமயப்பட்டதாக இருந்தது. அந்த இராணுவவாத அரசியல் போக்கு புதிய அரசாங்கத்தில் பெருமளவுக்கு அருகிப் போய்விட்டதாக கூறுவதற்கில்லை. ஆனால், ராஜபக் ஷாக்கள் இராணுவவாத அரசியலில் காட்டிய முனைப்பை இன்றைய ஆட்சியாளர்களிடம் காணமுடியாவிட்டாலும், பொன்சேகாவைப் பயன்படுத்தி அத்தியாவசிய சேவைகள் சீர்குலையாதிருப்பதை உறுதி செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த ஜனாதிபதியின் யோசனை இராணுவவாத அரசியல் சிந்தனையின் ஒரு தொடர்ச்சியேயாகும். இன்றைய அரசாங்கம் இராணுவாத அரசியலை வெளிப்படையாக ஆதரிப்பதாகவும் இல்லை. வெளிப் படையாக எதிர்ப்பதாகவும் இல்லை.




