செய்திகள்

சரத் பொன்சேகா முன்வைத்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை

இலங்கையின் இறுதிக் கட்டப் போரின்போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பெருந்தொகை தங்கத்தில் ஒருபகுதி கையாடல் நடந்துள்ளது என்ற அர்த்தத்தில் முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா முன்வைத்த குற்றச்சாட்டை  முன்னாள் பொருளாதாரத் துறை அமைச்சர் பசில் ராஜபக்ஷ மறுத்துள்ளார்.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை வெற்றியடையச் செய்வதற்காக, தமிழர்களை தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட வைப்பதற்காக மஹிந்த தரப்பால் புலிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டையும் பசில் ராஜபக்ஷ மறுத்துள்ளார்.

இது சரத் பொன்சேக்காவின் சொந்தக் கருத்து அல்ல என்று தெரிவித்த பசில் ராஜபக்ஷ, இனிவரும் காலத்தில் தமக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகளுக்கான முன்னேற்பாடு என்றும் தான் அவரின் இந்த கருத்துக்கள் எனவும் அவர் கூறினார்.

‘புலிகள் தங்க நகைகளை முறையான சட்டத்திட்டங்களுக்கமைய வைத்திருக்கவில்லை. பயங்கரவாதிகளிடமிருந்து எடுக்கப்பட்ட நகைகளை மீண்டும் பயங்கரவாதிகளிடம் கொடுக்க முடியுமா என்பது தொடர்பில் சட்டம் இருக்கிறதா என்று எனக்கு தெரியாது. விசாரணை நடத்துபவர்கள் ஒரு முடிவை எடுப்பார்கள்’ என்றார் பசில் ராஜபக்ஷ.

2005-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது, மகிந்த ராஜபக்ஷவை வெற்றியடையச் செய்வதற்காக புலிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு  ஒரு பொய்யான குற்றச்சாட்டு. சரத் பொன்சேக்காவுடன் நான் ஒருபோதும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து பேசியது இல்லை. அவர் கூறுவது போல எந்த ஒரு பணப்பரிமாற்றமும் நடக்கவில்லை. பெரும்பாலும் சரத் பொன்சேக்காவுக்கு எதிராக இராணுவத்திற்குள் எழுந்த பிரச்சனைகளை தீர்ப்பது தொடர்பிலேயே, நான் அவருடன் அதிக தடவைகள் பேசியுள்ளேன்’ என்றார் முன்னாள் அமைச்சர்.

n10