செய்திகள்

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள வவுனியா பொருளாதார மத்திய நிலையம்: ஒன்றுபடுவார்களா மக்கள் பிரதிநிதிகள்…?

-கே.வாசு-

புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் கொண்டு வரப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வடக்கில் யுத்தத்தால் பாதிப்படைந்த மக்களின் பொருளாதார விருத்திக்காக பொருளாதார மத்திய நிலையம் ஒன்று வவுனியாவில் அமைக்கப்படும் என கூறப்பட்டது. உண்மையில் அவ்வாறு அமைக்கப்படுவது சிறப்பானதும் கூட. தற்போது தம்புள்ளை பகுதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையம் போன்று வவுனியாவில் அமைக்கப்படும் போது அதன் மூலம் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகள், உற்பத்தியாளர்கள் நன்மைகளைப் பெற கூடியதாக இருக்கும். உள்ளூர் உற்பத்தியாளர்கள் இடைத்தரகர்கள் இன்றி தமது உற்பத்திகளை சந்தைப்படுத்தக் கூடிய ஒரு திறந்த வெளி உருவாக்கப்படும் அதேவேளை, பலருக்கு வேலை வாய்ப்புக்களும் ஏற்பட இடமுண்டு. இவ்வாறான நிலையில் இப் பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியாவின் எப்பகுதியில் அமைப்பது என்பது தொடர்பில் இழுபறி நிலை தற்போது வரை தொடர்கிறது. ஓமந்தையில் அமைக்க வேண்டும் என ஒரு சாரரும், தாண்டிக்குளம் விவசாய பண்ணை காணியை கையகப்படுத்தி அவர்களுக்கு மாற்றீடு காணியை வேறு இடத்தில் வழங்கி விட்டு அவ்விடத்தில் அமைக்க வேண்டும் என இன்னொரு சாரரும் கூறி வருகின்றனர். ஆனால் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஹரிசன் இத் திட்டம் நகரில் இருந்து இரண்டு கிலோமீற்றர் தூரத்திற்குள் அமைக்கப்பட வேண்டும். அவ்வாறான ஒரு இடத்திற்கே அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளதாக வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளதையடுத்து எங்கு அமைப்பது தொடர்பில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. அவர் கூறும் வகையில் அமைப்பது என்றால் தாண்டிக்குளம் விவசாய பண்ணை காணிப்பகுதியே தெரிவு செய்யப்பட வேண்டும். ஆனால், தாண்டிக்குளம் விவசாய பண்ணை மாகாணசபையின் கீழ் இயங்குவதால் அக் காணியை வழங்க முதலமைச்சர் மற்றும் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் அனுமதி மறுத்துள்ளனர். இந்நிலையில் இதனை அமைப்பது தொடர்பில் ஈரப்பெரியகுளம், பம்பைமடு, தாண்டிக்குளம், ஓமந்தை என பல இடங்களை பார்வையிட்டுள்ள நிலையில் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இதனால் இத்திட்டம் வவுனியாவை விட்டு வெளியில் செல்லக் கூடிய வாய்ப்புக்களும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் வவுனியா மாவட்டத்தைப் பிரதிநிதிப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் சிலர் வழங்கிய கருத்துக்களே இவை…

saththiyalingam (1)ப.சத்தியலிங்கம், வடமாகாண சுகாதார அமைச்சர்

பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதா அல்லது தாண்டிக் குளத்தில் அமைப்பதா என்பது தற்போதுள்ள கேள்வியல்ல. அதற்கான காலம் கடந்துவிட்டது. வவுனியாவில் அமைப்பதா அல்லது வேறுமாவட்டத்திற்கு கொண்டு செல்வதா என்பதே தற்போதைய கேள்வி. இந்த திட்டத்தின் பின்னணி பற்றி தெளிவில்லாத சில அரசியல்வாதிகள் மனம்போனபோக்கில் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த செயற்திட்டத்தின் பின்னணி பற்றி முதலில் கூறுவது பொருத்தமாகும் என நினைக்கின்றேன். மாகாண சபை தேர்தலில் பெரும் எதிர்பார்ப்புடன் மக்கள் எமக்கு வாக்களித்தனர். தேர்தல் முடிந்தகையோடு மக்கள் சந்திப்புகளை நடாத்தி மக்களின் தேவைகள் பற்றி கலந்துரையாடியிருந்தோம். இதன்போது குறிப்பாக விவசாயிகள் இரண்டு விடயங்களை முன்னுரிமைப்படுத்தியிருந்தனர். ஒன்று நீண்டகாலமாக திருத்தப்படாதிருந்த சிறுகுளங்களை புனரமைத்தல், மற்றது விவசாய உற்பத்திப்பொருட்களை விற்பனை செய்வதற்கான சந்தைவாய்ப்பை ஏற்படுத்தல்.

இதனை உணர்ந்து கடந்த வருடம் நவம்பர் மாதம் அதிமேதகு ஜனாதிபதியுடனான சந்திப்பில் வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது தொடர்பில் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தேன். அதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியதோடு 2016 ஆம் ஆண்டிற்கான பட்ஜட்டிலும் நிதியொதுக்கீடு செய்யப்பட்டது. மத்திய கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படத்தவுள்ள இந்த திட்டத்திற்கு காணி கோரப்பட்டது. முதலில் அரச பண்ணையில் புதிதாக அமைக்கப்பட்ட பேரூந்து நிலையத்திற்கு அருகில் காணி கோரப்பட்டது. எனினும் வளமான வயல் நிலமாக இருப்பதால் அதை விடுவிக்க நாம் சம்மதிக்கவில்லை. அதே வேளை வேறு இரண்டு இடங்களில் காணிகளை தெரிவு செய்து முன்மொழிந்திருந்தோம். அதில் முதலாவதாக ஓமந்தையிலும் அடுத்ததாக தாண்டிக்குளத்தில் விவசாயப்பண்ணையின் பயிர்ச்செய்கை செய்யப்படாத மேட்டுக்காணியும் முன்மொழியப்படடிருந்தது. எனினும் மத்திய அமைச்சின் காணித்தெரிவு நிபந்தனைக்கமைய நகரிலிருந்து 2 தொடக்கம் 3 கி.மீ தூரத்தில் காணி தேவையெனகூறி ஓமந்தைக்காணி மத்திய அமைச்சினால் நிராகரிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே மாவட்ட அரச அதிபரினால் கூட்டப்பட்ட காணி தொடர்பான விசேடகூட்டத்தில் தாண்டிக்குளத்தில் காணி வழங்குதென கூட்டத்தில் கலந்து கொண்ட மாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏகமனதாக தீர்மானித்து கௌரவ முதலமைச்சரின் அனுமதிக்காக கோரிக்கை அரசாங்க அதிபரால் அனுப்பப்பட்டது. எனினும் துரதிஸ்ரவசமாக மாகாண அமைச்சானது இந்தக்காணியை இதுவரை வழங்குவதற்கான அனுமதியை வழங்கவில்லை.
இந்த நிலையிலேயே தற்போது இந்த திட்டம் வேறு மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.

முற்றிலும் விவசாயிகளின் நன்மைக்காக அமைக்கப்படவுள்ள இந்த திட்டத்தை குறுகிய அரசியல் இலாபங்களுக்காக யாரும் தடுப்பதற்கு அனுமதிக்கமுடியாது. இந்த திட்டத்தை ஓமந்தையில் அமைப்பதா அல்லது தாண்டிக்குளத்தில் அமைப்பதா என்பது முக்கியமல்ல. வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்படவேண்டுமென்பதே எமது விருப்பமாகும். இதுவே எமக்கு வாக்களித்த மக்களின் விருப்பமும் ஆகும். இந்த திட்டம் கைநழுவிப்போனால் அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் எதிர்காலத்தில் அரசியலில் இருந்து மக்களால் தூக்கி எறியப்படுவார்கள்.

masthanகே.கே.மஸ்தான், வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர்

2016 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் ஆரம்ப கட்டமாக 200 மில்லியன் ரூபாய் செலவில் வவுனியாவில் பொருளாதார அபிவிருத்தி நிலையம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் நாங்கள் அதனை அமைப்பதற்கு இடம்பார்க்கின்ற போது முதலில் ஓமந்தையில் உள்ள ஒரு இடத்தைக் பலரும் கூறினார்கள். ஆனால் மாவட்ட செயலகத்தில் இது தொடர்பில் இடம்பெற்ற கூட்டத்தில் இதனுடன் சம்மந்தப்பட்ட கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஹரிசன் வரவில்லை. ஆனால் அவர் கூறியதாக தகவல் ஒன்று கூறப்பட்டது. இப்படியான பொருளாதார மத்திய நிலையம் நகரை அண்டிய பகுதியில் அமைக்கப்படும் போது தான் அது வெற்றியளித்துள்ளது. அவ்வாறு இல்லாதுவிட்டால் அதில் பயனில்லை. ஆகையால் நகரில் இருந்து இரண்டு- மூன்று கிலோமீற்றருக்குள் இடம் இருந்தால் தான் தரலாம். இல்லை என்றால் வேறு மாவட்டத்திற்கு கொண்டு செல்லக் கூடிய நிலை வரும் என தெரிவித்தாக கூறப்பட்டது. அதனால் அந்தக் கூட்டத்தில் இருந்த அரசாங்க அதிபர் வவுனியா மாவட்ட அரசியல்வாதிகளை அழைத்து இது பற்றி கலந்துரையாடி முடிவெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டு சந்திப்பு இடம்பெற்றது. தாண்டிக்குளம் விவசாய பண்ணைக்குள் விவசாயம் செய்யப்படாத கிரவல் நிலத்தைக் கொண்ட ஒரு பகுதி இருக்கிறது. அந்த இடத்தை இதனை அமைக்க கொடுக்கலாம் என அடையாளப்படுத்தி அந்தக் கூட்டத்தில் முடிவெடுத்து கௌரவ முதலமைச்சர் அவர்களிடம் அனுமதி கோரிய போது அந்த இடம் தரமுடியாது என அவர் தெரிவித்துள்ளார். இருந்தாலும் இங்கு உள்ள பொது அமைப்புக்கள் முதலமைச்சர் அவர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதி அனுப்பியுள்ளதுடன் அதன் பிரதிகளை மக்கள் பிரதிநிதிகள் ஆகிய எங்களுக்ம் அனுப்பியுள்ளார்கள்.

அவர்கள் தாண்டிக்குள்தில் தான் பொருளாதார மத்திய நிலையம் அமைக்க வேண்டும் எனவும், அதற்கான காரணங்களை காட்டி தெளிவாக கடிதம் எழுதியுள்ளனர். விவசாய பண்ணைக் காணியை கையகப்படுத்தி அதில் அமைப்பது தொடர்பில் உண்மையில் விவசாயிகளிடம் இருந்தே எதிர்ப்பு வந்திருக்க வேண்டும். அவர்களுக்கு அது பாதிப்பு இல்லாத படியால் அவ்வாறான எதிர்ப்பு வரவில்லை. அதில்தான் அமைக்க வேண்டும் என அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் மாகாணசபை முதலமைச்சர் மற்றும் இத்துறை சார்ந்த வடமாகாண அமைச்சர் அவர்களும் இதற்கு அனுமதி தரவில்லை என மாகாண சபை உறுப்பினர்கள் கூறுகிறார்கள். இதனை உடனடியாக ஆரம்பிக்காது விட்டால் இத் திட்டத்தை வேறு மாவட்டத்திற்கு கொண்டு செல்லப் போவதாக மத்திய கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கூறியுள்ளார். இதனால் இனியும் இழுத்தடிப்புக்களை செய்யாது இப்பகுதியைச் சேர்ந்த மாகாண சபை, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து கலந்துரையாடி நல்ல முடிவு எடுக்க வேண்டும். ஏன் இதில் இப்படி பிரச்சனை வந்தது என்று தெரியாமல் இருக்கிறது. விவசாய பண்ணைக்கு மாற்றுக் காணி 50 ஏக்கர் வேறு இடத்தில் வழங்கி இதை மாதிரி விவசாய பண்ணையை உருவாக்கி தருவதாகவே தீர்மானிக்கப்பட்டது. வவுனியா நகர அபிவிருத்தியில் தொடர்ச்சியாக இப்பகுதியில் வேறு வேறு பல கட்டட அமைப்புக்களும் வரவுள்ளதால் காலப்போக்கில் பண்ணையை காலப்போக்கில் முழுமையாக வேறு இடத்திற்கு மாற்ற வாய்ப்புள்ளது. எனவே, தாண்டிக்குளத்தில் பொருளாதார மையம் அமைப்பது தான் சிறந்தது. ஏன் எனில் இங்கு வரும் விவசாயிகள் தமது விற்பனை முடிந்து தமக்கு தேவையான ஒரு பொருளை பெறுவது என்றால் நகருக்கு தான் வரவேண்டும். அதனால் அதனை நகருக்கு அண்மையில் அமைத்தால் தான் கூடிய நன்மை கிடைக்கும். இன்று தம்புள்ளை பொருளாதார மையம் நகருக்கு அண்மையில் அமைக்கப்பட்டுள்ளதால் சிறப்பாக இயங்குகிறது. எனவே இதனையும் தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும் என்பதே எனது கருத்து.

thiyakarasa (1)ம.தியாகாராசா, வடமாகாணசபை உறுப்பினர்

இந்த பொருளாதார மையம் அமைப்பது தொடர்பில் நடைபெற்ற கூட்டத்தில் எனது கருத்தை நான் தெரிவித்த போது, தாண்டிக்குளத்தில் உள்ள விவசாய பண்ணை நிலத்தை இத்திட்டத்திற்காக உள்வாங்கினால் அப்பண்ணை காலப்போக்கில் அழிந்து வீடும். அதற்கு எதிராக விவசாய பயிற்சி கல்லூரி அமைந்துள்ளதால் அதில் கல்வி கற்பவர்களின் கற்றல் நடவடிக்கைகளும் பாதிக்கும். இதைவிட அப்பகுதியில் உள்ள புகையிர பாதையோரத்தில் உள்ள பல குடும்பங்களுக்கு கூட இதனால் பாதிப்பு வரும் எனத் தெரிவித்து வேறு ஒரு மாற்றிடம் எடுப்பது தான் நல்லது என தெரிவித்திருந்தேன். இதேபோன்று ஏனைய மாகாணசபை உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இது எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பதற்கு அப்பால் இத் திட்டம் வவுனியாவில் அமைக்கப்பட வேண்டும் என்பதே அனைவரதும் விரும்பம். இதனால் இத் திட்டத்தை நகரில் இருந்து இரண்டு கிலோமீற்றர் தூரத்திற்குள் தான் அமைக்க முடியும் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கூறுவதால் விவசாய பண்ணைக் காணியில் ஒரு பகுதியை எடுத்து அதற்கு மாற்று காணி கொடுத்தி விட்டு அங்கு அமைப்போம் என நானும் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் சேர்ந்து கடிதம் ஒன்றினை எழுதி முதலமைச்சரிடம் வழங்கி விட்டு அது சம்மந்தமாக கதைத்தோம். அப்போது முதலமைச்சர் கூறிய உறுதிமொழி என்னவென்றால் தான் அமைச்சருடன் கதைத்ததாகவும், அவர் ஓமந்தையில் அமைக்க உறுதிமொழி தந்ததாகவும் கூறினார். அதன்பின் தற்போது மீண்டும் இது தொடர்பில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. என்ன நடந்தது என தெரியவில்லை. பம்பைமடு பகுதியிலும் காணி பார்க்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் காணி போதாது என கூறப்பட்டுள்ளது. இந்தப் பண்ணை அமைப்பது தொடர்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு அறிக்கை ஒன்று வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் தாண்டிக்குளம் பகுதியில் அமைக்ககூடாது ஓமந்தையில் அமைப்பது தான் சிறப்பானது என கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எமக்கு அந்த அறிக்கை இன்று வரை கிடைக்கவில்லை. வடக்கு விவசாய அமைச்சர் தாண்டிகு;குளம் விவசாய பண்ணைக் காணியை வழங்க முடியாது எனக் கூறுகிறார். அதனை பிரித்து அங்கு ஒரு காணி, இங்கு ஒரு காணி என நடத்துகின்ற போது விவசாய விதை உற்பத்தி பண்ணை அழிவடைந்து விடும் எனவும் விடுதிகள் கூட பாதிக்கப்படும். தமக்கு தொடர்ந்தும் பாராமரிப்பது கடினம் என அவர் தெரிவித்துள்ளார். எது எப்படியாக இருந்தாலும் வவுனியா மாவட்டதில் இது அமைய வேண்டும் என்பதே எனது கருத்து. பல கோடி ரூபாயில் அமைக்கப்படவுள்ள இந்த அபிவிருத்தி எமது விவசாயிகளுக்கு ஒரு நன்மை. இதை முதலமைச்சர், விவசாய அமைச்சர் ஆகியோருடனும் சம்மந்தப்பட்ட மத்திய அமைச்சருடனும் கதைத்து ஓமந்தை அல்லது பம்பைமடு ஆகிய பகுதிகளில் உள்ள ஒரு இடத்தை தெரிவு செய்து அமைக்க வேண்டும். அது முடியாது போனால் தாண்டிகு;குளம் காணியை வழங்கி இத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எனது கருத்து.

inthiraraya (1)இ.இந்திரராசா, வடமாகாண சபை உறுப்பினர்

வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சர் உள்ளிட்ட வடமாகாண சபை உறுப்பினர்களாகிய நாங்கள் ஓமந்தையை தெரிவு செய்யுமாறு ஆரம்பத்தில் வலியுறுத்தினோம். ஆனால் நகரில் இருந்து 2 கிலோமீற்றருக்குள் தான் அதனை அமைக்க முடியும். ஓமந்தையில் அமைக்க முடியாது என கிராமிய பொருளாதார அமைச்சர் தெரிவித்தாக விசேட கூட்டத்தில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். இதனையடுத்து இது அமைப்பது தொடர்பிலான இடத்தை தீர்மானிக்க அரசியல்வாதிகள் அற்ற குழு ஒன்றினை மாவட்ட அரச அதிபர் நியமித்தார். சுயாதீனமாவும், சுதந்திரமாகவும் இது பற்றி பரிசீலித்த அந்த குழு பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைப்பது தான் சிறந்தது என தெரிவித்துள்ளது. தாண்டிக்குளத்தில் விசாய பயிற்சி நிலையம், விவசாய பண்ணை உள்ளடக்கிய காணி சிறிய காணி. அதில் ஒரு பகுதி பொருளாதார மத்திய நிலையம் அமைக்க வழங்கில் பண்ணை இயங்குவதற்கு இடப் பற்றாக்குறை ஏற்படும். பண்ணையுடன் இணைந்ததாக அதன் முன்னால் விவசாய கல்லூரி உள்ளது. இன்று பெயர் பெற்ற குண்டகசாலை விவசாய கல்லூரி பல நூற்றுக்கணக்கான காணியை உள்ளடக்கி சிறப்பாக செயற்படுகிறது. இந்த நிலையில் குண்டகசாலை போன்று எமது மாவட்ட இந்த விவசாய கல்லூரி இயங்குவதற்கு கூட காணி பற்றாக்குறை இருக்கிறது. காலப்போக்கில் அதனை விஸ்தரிக்கின்ற போது கூட விவசாய பண்ணைக் காணிகளை பயன்படுத்த முடியம். விவாயத்துறை சார்ந்த பல புத்திஜீவிகளை இந்த விவசாய கல்லூரி உருவாக்கி வரும் நிலையில், அதன் முன்னால் சந்தைகளை உள்ளடக்கிய பொருளாதார மத்திய நிலையம் அமைவது பொருத்தமற்றது. அங்கு கல்வி பயிலும் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும். இது தொடர்பில் வடமாகாண விவசாய அமைச்சர், முதலமைச்சர் ஆகியோரிடமும் பேசியுள்ளோம். ஆனால் தற்போது ஒவ்வொரு அரசியல்வாதிகளும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை கூறுகிறார்கள். அவை ஊடகங்களில் பல்வேறு விதமாக வருகிறது. இந்த திட்டம் வவுனியாவிற்கு அவசியமானது. இது பூனாவ பகுதிக்கு சென்றதாக கூட செய்தி வந்துள்ளது. அரசியல்வாதிகளை விடுத்து இதன் தற்போதைய நிலை என்ன என்பதையும், அதன் உண்மை தன்மை தொடர்பிலும் சம்மந்தப்பட்ட கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அல்லது அவர் சார்பாக மாவட்ட அதிகாரி என்ற வகையில் அரச அதிபர் உண்மை நிலையயை தெளிவு படுத்தி மக்கள் மத்தியில் உள்ள குழப்பத்தை தீர்க்க வேண்டும்.

sivamohanசி.சிவமோகன், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்

வவுனியாவில் அமைக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பொருளாதார மத்திய நிலையத்தின் ஊடாக ஒரு மொத்த விற்பனை நிலையம் அமைப்பது தொடர்பில் சகல மாகாண சபை, பாராளுமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர், வடமாகாண அமைச்சர்கள் என அனைவருக்கும் அறிவித்தல் வழங்கி வவுனியா மாவட்ட செயலகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இதனை எங்கு அமைப்பது என்பது தொடர்பில் அலசி ஆராயப்பட்டு தாண்டிக்குளம் விவசாய பண்ணையில் உள்ள விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலத்தை பயன்படுத்துவது என கூட்டத்திற்கு வந்திருந்தவர்களால் தீர்மானிக்கப்பட்டது. தற்சமயம் இது தொடர்பில் மாறுபாடான கருத்து முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளதால் இந்த நிலையம் எமது மாவட்டத்தைவிட்டு விலகி வேறு மாவட்டத்திற்கு செல்லக் கூடிய அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை வவுனியா மாவட்த்திற்கு என ஒதுக்கப்பட்ட இந்த நிதி இந்த மாவட்டத்திலேயே பயன்படுத்தப்பட வேண்டும். இது வேறு மாவட்டதிற்கு கொண்டு செல்வதை எந்தவொரு காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதைவிட இந்த பொருளாதார மத்திய நிலையம் நகரில் இருந்து 2 கிலோமீற்றர் தூரத்திற்குள் தான் அமைக்க முடியும் என்பது மத்திய அரசின் ஒரு கோரிக்கை. அது நியாயமானதும் கூட. சகல இடங்களிலும் அப்படி தான் நடந்தும் இருக்கிறது. எனவே அந்தக் காணியை ஒதுக்கி கொடுக்கும் போது வடமாகாண முதலமைச்சர் அதற்கான ஒழுங்கை செய்ய வேண்டுமே தவிர முரணான, முரண்பாடான ஒரு தீர்மானத்தை எடுத்து இந்த அபிவிருத்தி திட்டத்தை இல்லாமல் செய்கின்ற நடவடிக்கைக்கு அவர் ஒரு உடந்தையாக இருக்க கூடாது என்பது தான் என்னுடைய கருத்து.

linganathan (1)ஜி.ரி.லிங்கநாதன், வடமாகாண சபை உறுப்பினர்

நான் முன்னர் வவுனியா நகரசபைத் தலைவராக இருக்கும் போதே 1999 ஆம் ஆண்டு வவுனியா நகர அபிவிருத்தி நடவடிக்கை தொடர்பில் அப்போதைய ஆளுனர் காமினி பென்சேகா அவர்களுடன் கலந்துரரையாடி இந்த விவசாய பண்ணை காணியை பெற்று அந்த பண்ணையை இடம்மாற்றுவதுடன் அப்பகுதியில் சர்வதேச தரத்திலான விளையாட்டு திடல் மற்றும் மாவட்ட செயலகம் உள்ளிட்ட அரச திணைக்களங்களை நிறுவுவதுடன், மாவட்ட செயலகக் காணி வைத்தியசாலையின் விஸ்தரிப்புக்கும் வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டு அனுமதியும் கிடைத்திருந்தது. ஆனால் பின் வந்த அரசியல் சூழ்நிலைகளால் அது நடைபெற வில்லை. தற்போது அமைக்கபடவுள்ள பொருளாதார மத்தியநிலையம் நகரை அண்டியே அமைக்கப்பட வேண்டும். ஏற்கனவே தீர்மானித்த படி விவசாய பண்ணையை வேறு இடத்திற்கு மாற்ற முடியும். நகர அபிருத்திக்கு நிலப்பற்றாக்குறை காணப்படுகின்றது. அதனால் இந்தக் காணியைப் பொருளாதார மத்திய நிலையத்திற்கு வழங்குவதால் வவுனியாவில் பல்வேறு அபிவிருத்திகள் இடம்பெறுவதற்கும் வேலை வாய்ப்புக்கள் அதிகரிப்பதற்கும் வாய்ப்புக்கள் உள்ளது. தொடர்ந்தும் நகர அபிவிருத்தி இடம்பெறும் போது விவசாய பண்ணை காணி உள்வாங்க வேண்டிவரும். இதனால் விவசாய பண்ணையை புளியங்குளம், பரசங்குளம் பகுதியில் அமைக்க 200 ஏக்கர் காணி வழங்க அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது தொடர்பில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. எனவே, எமது மாவட்டத்தின் அபிவிருத்திக்கு ஏற்ற இந்த நிலத்தை வழங்க முதலமைச்சருடன் வடமாகாண உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து கதைத்து சதமாகமான முடிவினை எடுக்க வேண்டும். இந்த திட்டத்தை திரும்பிச் செல்லவிடாது உடனடியாக எமது மாவட்டத்தில் அமைக்க பொருத்தமான காணியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே எனது கருத்து.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் கருத்துக்களை பெறுவதற்கு வன்னிப் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களுடன் தொடர்பு கொள்ள பல தடவை தொலைபேசியில் முயன்ற போதும் அவர் தொடர்பை ஏற்கவில்லை. வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களிடம் கேட்ட போது அவர் இது தொடர்பில் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதால் தற்போது கருத்து கூற முடியாது என தெரிவித்துள்ளார். இருப்பினும் மாவட்ட மட்ட அபிவிருத்தியில் தாம் கூடிய கவனம் செலுத்துவதாகவும், இத் திட்டம் வவுனியாவிற்கு மிக அவசியமானது. தாண்டிகுளம் மற்றும் ஓமந்தை தொடர்பில் அரச அதிபரால் அமைக்கப்பட்ட குழு ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஓமந்தையே பொருத்தமானது என தெரிவித்துள்ளது. ஓமந்தை விவசாயிகளைக் கொண்ட ஒரு விவசாய பிரதேசம். அப்பகுதியிலேயே இது அமைக்கப்பட வேண்டும். மத்திய அரசாங்கம்’ வடக்கில் அபிவிருத்திகளை செய்கின்ற போது மாகாண சபையுடன் கலந்துரையாடி செய்ய வேண்டும் எனவும் அவர் வவுனியாவில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே, இவ்விடயம் தொடர்பில் மாறுபட்ட முரண்பாடான கருத்துக்கள் மக்கள் பிரதிநிதிகள் மத்தியிலேயே காணப்படுகின்றது. ஆனால், அவர்கள் தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை விடுத்து மக்கள் நலன்சார்ந்து உண்மையில் அத் திட்டத்திற்குரிய விவசாய உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடி தீர்க்கமான முடிவு ஒன்றினை எடுத்து பொருளாதார மத்திய நிலையம் வவுனியாவில் பொருத்தமான இடத்தில் நிறுவப்படுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்தாகவுள்ளது.

N5