செய்திகள்

மியன்மாரில் இனச்சுத்திகரிப்பு இடம்பெறுகின்றது- நோபல் பரிசு பெற்றவர்கள் கண்டனம்

மியன்மார் இராணுவத்தினால் ரொகிஞ்சா முஸ்லீம்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்கள் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபைக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.குறிப்பிட்ட கடிதத்தில் மியன்மாரில் தற்போது இடம்பெறுவது இனச்சுத்திகரிப்பு மற்றும் மனித குலத்திற்கு எதிரான ஆகிய செயல்களிற்கு நிகரானது என அவர்கள் தெரிவித்துள்ளதுடன் மியன்மாரின் ஜனநாயக போராளி ஆங் சாங் சூகியை அவர்கள் கடுமையாக சாடியுள்ளனர்.
பேராயர் டெஸ்ட்மன்ட் டுட்டு, மலா யூசுவ் உட்பட 23 பேர் கையெழுத்திட்டுள்ள அந்த கடிதத்தில் மியன்மாரில் இடம்பெறும் இராணுவநடவடிக்கையால் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்,பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்சாங் சூகியிடம் தொடர்ச்சியாக வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ள போதிலும் ரொகிங்யா முஸ்லீம்களிற்கு முழுமையான பிரஜாவுரிமை வழங்கப்படுவதை உறுதிசெய்ய அவர் நடவடிக்கை எடுக்கவில்லை,இது குறித்து நாங்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.