செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்துடனான 2 ஆவது மீளாய்வு இன்று

இலங்கைக்கான பிணை எடுப்புப் பொதியின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இரண்டாவது மீளாய்வு பணிகள் இன்று (07)ஆரம்பிக்கப்படவுள்ளன.

மீளாய்வு பணிகளை வெற்றிகரமாக முடித்து, IMF ஊழியர்களுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதை இலங்கை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது

இது மூன்றாவது தவணை நிதியை அணுக அனுமதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தெற்காசிய தீவு நாடு 1948 இல் சுதந்திரம் பெற்றதிலிருந்து அதன் மோசமான நிதி நெருக்கடியிலிருந்து மீண்டு வருகிறது.

இலங்கை கொவிட்-19 நெருக்கடியின் பின்னர் கடந்த 2022 ஆம் ஆண்டு பணவீக்கம், நாணய தேய்மானம் மற்றும் குறைந்த வெளிநாட்டு கையிருப்புடன் போராடியது.

மேலும், நாடு வங்குரோத்தடைந்தது. கடனைச் செலுத்த முடியாமல் போனது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திண்டாடியது.

இந் நிலையில் புதிதாக ஆட்சிக் வந்த ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக சர்வதேச நாணய நிதியத்துடன் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நீட்டிக்கப்பட்ட ஏற்பாட்டிற்கு, விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் ஒப்புதல் அளித்தது.

இலங்கையுடனான 48 மாத கால கொண்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் முதலாவது மீளாய்வினை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையானது கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் நிறைவு செய்தது.

இதன் மூலம், பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக சுமார் 337 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அணுகுவதற்கு வழி வகுத்தது.

2 ஆவது மீளாய்வு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க,

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் இரண்டாவது மீளாய்வை இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் திட்டமிடப்பட்ட ஆரம்ப சந்திப்புடன் ஆரம்பிக்கவுள்ளது.

ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நமது தொடர்ச்சியான முயற்சிகளில் இது ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது.

ஒரு வெற்றிகரமான மதிப்பாய்வை முடித்து, மூன்றாவது தவணையை அணுகுவதற்கு இது வழி வகுக்கும் பணியாளர் நிலை ஒப்பந்தத்தை எட்டுவோம் என்று எதிர்பார்க்கிறோம்.

இது நமது வளர்ச்சிப் பாதையை விரைவுபடுத்தும், பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் – என்றார்
-(3)