சர்வதேச விசாரணையே தேவை; ஜெனீவாவில் அழுத்தம்
போர்க்காலத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்கு இலங்கையின் சட்ட முறைமைக்குள் நீதி கிடைக்கப்போவதில்லை என்பதை ஏற்கனவே நடைபெற்ற பல வழக்குகள் எமக்கு உறுதிப்படுத்தியிருப்பதால் இலங்கை விவகாரத்தை ஐ.நா. பொதுச் சபையின் மூலமாக சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்வதே ஒரே வழியாக இருக்கும் என ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நேற்று இடம்பெற்ற பக்க நிகழ்வு ஒன்றில் வலியுறுத்தப்பட்டது.
குமாரபுரம் படுகொலையை அடிப்படையாக வைத்து இது தொடர்பாக தன்னுடைய வாதத்தை முன்வைத்தார் கொள்கை ஆய்வுக்கான அடையாள அமைப்பின் ஆய்வாளரான தர்ஷா ஜெயதீஸ்வரன். 2015 இல் கொண்டுவரப்பட்ட ஐ.நா. தீர்மானத்தின் 6, 8 ஆவது பகுதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் வெளிநாட்டு நீதிபதிகள், இராணுவ மயமாக்கல் ஆகிய விடயங்களை நடைமுறைப்படுத்துதல் என்ற தலைப்பில் இந்த பக்க நிகழ்வு இடம்பெற்றது. இலங்கையில் சமத்துவத்துக்கான அமைப்பு, பிரித்தானிய தமிழர் பேரவை, பசுமைத்தாயகம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து இந்த பக்க நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
தமிழ் கார்டியன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அபினயா நாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கடுமையான வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்றன. இலங்கை உட்பட பல நாடுகளிலிருந்து இராஜதந்திரிகள், அதிகாரிகள், மனித உரிமைகள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்கள். தர்ஷா ஜெகதீஸ்வரன் இங்கு தொடர்ந்து உரையாற்றிய போது ;
“குமாரபுரம் கொலை வழக்கை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது இலங்கையின் சட்ட அமைப்பு நம்பகரமான சுயாதீன விசாரணை ஒன்றுக்கு ஏற்றதல்ல என்றே சொல்ல வேண்டும். 1996ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர். 46 போர் காயமடைந்திருந்தனர். இந்தப் படுகொலை இடம்பெற்ற போது குழுவாக பாலியல் வன்முறைச் சம்பவம் இடம்பெற்றது. கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் மூன்று நாட்களாக அந்தப் பகுதியில் கிடந்தது. சடலங்கள் மீட்கப்பட்ட போது அவை அடையாளங்காண முடியாதவையாகக் காணப்பட்டன. விசாரணை திருமலை மேல் நீதிமன்றத்திலிருந்து அநுராதபுரம் நீதிமன்றத்துக்குப் பின்னர் மாற்றப்பட்டது.
இதில் சம்பந்தப்பட்ட ஆறு படையினரின் பாதுகாப்புக்காகவே இந்த இடமாற்றம் செய்யப்பட்டது. விசாரணையின் இறுதியில் 606 குற்றச்சாட்டுக்களிலிருந்தும் 6 படையினரும் விடுவிக்கப்பட்டனர். இராணுவத்தினரை குற்றவாளிகளாக்க அரசாங்கம் விரும்பவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே இதனை யாழ்ப்பாணத்தில் வைத்து அண்மையில் தெரிவித்திருந்தார். இராணுவத்தினரை விசாரிக்கப்போவதில்லை என அவர் சொல்லியிருந்தார். இவை அனைத்தையும் பார்க்கும் போது, இலங்கையின் சட்ட அமைப்புக்குள் நீதியான விசாரணைக்கு இடமில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது’ என தர்ஷா ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.
இதனையடுத்து உரையாற்றிய நிரஞ்சலா அருள்நாயகி, சர்வதேச சம்பந்தம் இல்லாமல் நம்பகரமான நீதி விசாரணை ஒன்றை இங்கு எதிர்பார்க்க முடியாது. பொதுமக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கையை ஜனாதிபதியோ பிரதமரோ பெற்றுக்கொள்ள முன்வராத நிலையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அதனைப் பெற்றுக்கொண்டார்.சந்திரிகா குமாரதுங்க எதனையும் நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரத்தைக் கொண்டிருக்காத ஒருவர்.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் நீதியான விசாரணை ஒன்றில் நம்பிக்கை வைக்க முடியாத நிலைதான் உள்ளது. இலங்கையின் சட்டமுறைமைக்குள் நீதி கிடைக்கப்போவதில்லை. அதனால், ஐ.நா. பொதுச் சபைக்கு இந்தப் பிரச்சினையைக் கொண்டு சென்று சர்வதேச நீதிமன்றத்துக்கு இந்தப் பிரச்சினையைக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

