சாதனைத் தமிழனைக் கண்டு கொள்ள மறந்த தமிழ் சமூகம்!
-கே.வாசு-
நாட்டில் பல துறை சார்ந்த திறமையானவர்கள் பலர் இருந்தும் அவர்கள் அந்த துறைகளில் தொடர்ந்தும் பிரகாசிப்பதற்கு வழங்கப்படுகின்ற ஆதரவு என்பது மிக குறைவாகவே உள்ளது. அதனால் பலரும் தமது திறமைகளை மழுங்கடித்து விட்டு காலசூழ்நிலைகளால் வேறு வேலைகளில் ஈடுபடத் தொடங்குகின்றனர். வேறு சிலர் இன்னும் போராடி தமது திறமையால் சாதித்தும் விடுகிறார்கள். இதில் தனது திறமை காரணமாக இன்று வடபகுதியில் பேசப்படும் ஒருவரே குமார் நவநீதன்.
வயது 28. சாதாரண ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவன். வவுனியா, கூமாங்குளம் கிராமத்தில் வசித்து வருகிறான். தனது 19 ஆவது வயதில் தந்தையை இழந்து தாயின் பராமரிப்பில் வளர்ந்தான். மூன்று சகோதரிகள், ஒரு சகோதரன். மூத்த ஆண்பிள்ளை என்பதால் தாயுடன் இணைந்து குடும்பத்தை பார்க்க வேண்டிய பாரிய பொறுப்பு அவனுக்கிருந்தது. அதனை தட்டிக் கழிக்காது பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டு, கடைகளில் வேலை செய்து குடும்பத்தை பார்த்தான்.
இளமையில் இருந்து விளையாட்டுத்துறையில் அவனுக்கிருந்த ஆர்வத்தை அவன் பயன்படுத்துவதற்கு குடும்ப சூழல் அவனுக்கு இடம் கொடுக்கவில்லை. எப்படியாவது படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என முயன்ற போதும் தந்தையின் நோயும், அவரது மரணமும் அவனை அந்த இலக்கை எட்டவிடவில்லை. அதன்பின் கடைகளில் வேலை செய்து கொண்டு விளையாட்டு பயிற்சிகளிலும் ஈடுபடத் தொடங்கினான். வேலை ஒருபுறம். குடும்பச் சுமை மறுபுறம். இதற்குள் தனது 21 ஆவது வயதில் இருந்து தவறாது காலை 6 மணியில் இருந்து 8 மணிவரை மைதானத்திற்கு சென்று ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தான். வீட்டில் இருந்து 7.5 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள நகரசபை மைதானமே நவநீதனின் பயிற்சிக்களம். கடந்த 7 வருடங்களாக கடும்பயிற்சி. இன்று அவனை சர்வதேச போட்டி ஒன்றுக்கு கொண்டு சென்றுள்ளது.
கடந்த 7 வருடங்களுக்குள் மாகாண மற்றும் தேசிய ரீதியில் பல போட்டிகளில் பங்கு பற்றி பல சாதனைகளைப் படைத்த போதும் அவனை சர்வதேச ரீதியில் கொண்டு செல்வதற்கு எவரும் முன்வரவில்லை. வடமாகாணத்தில் 2010, 2012, 2014, 2015 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் முதலாமிடத்தையும், ஊர்சுற்றும் போட்டியில் நான்கு தடவை முதலாமிடத்தையும் பெற்றிருந்தான் நவநீதன். தேசிய ரீதியில் 2015 ஆம் ஆண்டு மரதன் ஒட்டப் போட்டியில் 42.195 கிலோமீற்றர் தூரத்தை 2 மணித்தியாலம், 40 நிமிடம், 30 செக்கனில் ஓடி முடித்து 9 வது இடத்தைப் பெற்றான். அதே ஆண்டு அனுராதபுரத்தில் இடம்பெற்ற சர்வதேச மரதன் ஓட்டப் போட்டியில் 6வது இடத்தைப் பெற்றிருந்தான். அவன் தனி ஒரு மனிதாக இவ்வாறு சாதிப்பதற்காக மேற்கொண்ட போராட்டங்கள் பல. அவனுக்கு உதவியது அவனது நண்பர்களே. அவர்களின் ஆறுதல் வார்த்தைகளும் அவ்வப் போது அவர்கள் தனிப்பட்ட ரீதியில் வழங்கிய சிறு உதவிகளுமே இன்று அவனை ஒரு சர்வதேச விளையாட்டு வீரனாக வடக்கிற்கு மட்டுமன்றி முழு இலங்கைக்கு அடையாளம் காட்டியுள்ளது. யாரும் அவனுக்கு கைகொடுக்காத நிலையில் அவனது திறமையைக் கண்டு இலங்கை கடற்படையின் விளையாட்டு வீரராக அவனை உள்வாங்கியுள்ளது கடற்படை.
கடந்த 20 ஆம் திகதி தாய்லாந்தின் பாங்கொக் நகரில் நடைபெற்ற 100கிலோமீற்றர் அஞ்சல் மரதன் ஓட்டப் போட்டியில் இலங்கை சார்பாக பங்கு பற்றிய பண்டார (அனுராதபுரம்), சஜீவ (கண்டி), லக்சிறி (காலி) ஆகியோருடமன் நான்கு பேர் கொண்ட குழாமில் பங்கு பற்றி இரண்டாம் இடத்தை இலங்கை அணி பெற காரணமாக விளங்கியவன் நவநீதன். கலந்து கொண்ட நான்கு பேரில் ஒரே ஒரு தமிழ் வீரர் நவநீதனே. இன்று அவனது குடும்பம் இவனது சாதனையால் மகிழ்ச்சியில் இருந்தாலும், அதனை கொண்டாட முடியாத நிலையில் இருக்கிறது. ஏனெனில் அவனது சாதனைக்கு முன் அங்கு நிற்பது குடும்ப வறுமையே. நவநீதன் அவற்றை தாங்கி அந்த இடர்களுக்குள்ளேயே சாதித்ததை யாரும் மறுத்துவிட முடியாது.
இவனது உழைப்பிலேயே குடும்பம் தங்கியுள்ள நிலையில், விளையாட்டுப் போட்டியில் பங்கு பற்றுவதற்குச் செல்ல ஆயத்தமாகும் போதும் கூட அதற்கு பணம் இல்லாது தவிர்ந்திருந்தான். வடமாகாண கல்வி, விளையாட்டுத்துறை அமைச்சர்க.குருகுலராஜா, , மத்திய விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரிஸ் ஆகியோரிடம் உதவி வழங்குமாறு வவுனியாவில் இடம்பெற்ற விளையாட்டுத்துறை கூட்டத்தில் விளையாட்டு வீரர்கள் நேரடியாக கோரப்பட்டும், கடிதமும் வழங்கப்பட்ட போதும் அவன் செல்வதற்கு எந்த உதவியும் கிட்டவில்லை. விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரிஸ் விமான ரிக்கெற்றுக்களை ஏற்பாடு செய்ய முடியும் என அந்த கூட்டத்தில் பகிரங்கமாக தெரிவித்த போதும் அது கூட நிறைவேற்றப்படவில்லை. இறுதியில் அவனும், அவனது நண்பர்களும் இணைந்து வவுனியாவில் நல்லுள்ளம் கொண்ட சிலரிடம் பெற்ற சிறு உதவிகளைக் கொண்டே விமானத் டிக்கெற் தொடக்கம் ஏனைய செலவுகளையும் ஈடு செய்து தாய்லாந்து புறப்பட்டான்.
தாயலாந்தின் பாங்கொக் நகரில் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கென்யா, கொங்கொங் உள்ளிட்ட 30 நாடுகள் பங்குபற்றிய இந்த 100கிலோ மீற்றர் தூரம் வரையிலான அஞ்சல் மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றினான். இதில் பங்கு பற்றி இலங்கை அணி இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொள்ள காரணம் இவனே. இன்று தென்னிலங்கையில் வெற்றியுடன் வந்த அந்த வீரர்கள் அவர்களது பகுதிகளில் கௌரவிக்கப்பட்ட போதும், வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் மக்களுக்கு பெருமை தந்த இந்த வீரனுக்கு மட்டும் எந்தவித வரவேற்பும் இன்றி கடந்த 22 ஆம் திகதி புகையிரதத்தில் வந்திறங்கி வீடு சென்றுள்ளான். அண்மையில் கூட சார்க் நாடுகளுக்கு இடையில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வடக்கின் வவுனியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய இரு பெரும்பான்மை சகோதரர்கள் இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்று வெற்றி பெற்றிருந்தனர். அவர்கள் இருவரையும் வாகனம் ஒன்றில் வவுனியா நகரில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு மாவட்ட செயலகத்தில் பாரிய அளவில் கௌரவிப்பும் வழங்கப்பட்டது. ஆனால் நவநீதனுக்கு மட்டும் அந்த கொடுப்பனவு இல்லை. காரணம் என்ன…? ஏழ்மையா..? அல்லது தமிழன் என்பதலா…? இல்லை எமது சமூகத்தின் அக்கறையற்ற தன்மையா…? சிந்திக்க வேண்டிய விடயமிது.
இவ்வாறான வீரர்கள் ஊக்குவிக்கப்படும் போதே இனிவரும் காலங்களில் இன்னும் பல வீரர்கள்களை உருவாக்க முடியும். இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணியில் ஒரு தமிழனுக்கும் வாய்ப்பு கொடுக்கப்ப்வில்லை என பலரும் குறை கூறுகிறார்கள். ஆனால் தேசிய அணியில் இருந்து சாதிக்கும் இந்த வீரர்களை மறந்து விடுகிறார்கள். வடக்கில் இளைஞர்கள் தவறாக செல்கிறார்கள். பிழையாக வழிநடத்தப்படுகிறார்கள் எனப் பலரும் வெட்டி அறிக்கை விடுகிறார்கள். அப்படியாயின் இவ்வாறு சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு இவர்களால் என்ன செய்ய முடிகிறது எனபதே இப்போதுள்ள கேள்வி..
N5




