சாந்தனின் இறுதி கிரியை திங்கட்கிழமை – வடக்கில் அஞ்சலி நிகழ்வுகள்!
சாந்தனின் பூதவுடல் எதிர்வரும் திங்கட்கிழமை (04.03.2024) யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை தீருவில் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தார் அறிவித்துள்ளனர்.
வவுனியா ,கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் அஞ்சலி நிகழ்வுகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சாந்தனின் உடல் நீர்கொழுப்பு வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது.
உடற்கூற்று பரிசோதனை தொடர்பில் இழுபறிகள் காணப்பட்ட போதிலும் தற்போது சகல பரிசோதனைகளும் நிறைவுபெற்று உடல் கையளிக்கப்பட்டுள்ளதாக சாந்தனின் சகோதரர் மதிசுதா தெரிவித்தார்.
கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட பூதவுடன் இன்று காலை 9 மணிக்கு மாங்குளத்திலும், காலை 10.30 இற்கு கிளிநொச்சியிலும் தொடர்ந்து 11.30 இற்கு இத்தாவில் பகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,கொடிகாமம் ஊடாக பூதவுடல் எடுத்துச்செல்லப்பட்டு பிற்பகல் 2 மணிமுதல் வல்வெட்டித்துறை தீருவிலில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
இந்த இறுதி கிரியையில் உறவினர்கள் ஊர் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு இடமளிக்குமாறு குடும்பத்தார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இன்றைய தினத்தினை தமிழ் தேசிய துக்கதினமாக அனுஷ்டிக்க பொது அமைப்புக்கள் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
-(3)




