சார்க் விளையாட்டுப் போட்டியில் வவுனியா வீரர்கள் இருவர் பதக்கம்
இந்தியாவில் நடைபெற்ற சார்க் நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் பங்கு பற்றி பதக்கம் வென்று வவுனியா மாவட்ட இரு விளையாட்டு வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இவ்விரு விளையாட்டு வீரர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட அரச அதிபர் ரோஹண புஸ்பகுமார தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில் இன்று இடம்பெற்றது.
சார்க் நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்டு கலப்பு அஞ்சல் (நீச்சல், ஓட்டம்) போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற சுரங்க நுவான் குமார மற்றும் கபடிப் போட்டியில் இலங்கை குழாமில் பங்கு பற்றி மூன்றாம் இடம்பெற்று பதக்கம் பெற்ற புத்திக்க நக்மால் ஆகியோருக்கே இந்த கௌரவிப்பு இடம்பெற்றது.
முன்னதாக வவுனியா நகரில் இருந்து வாகத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட விளையாட்டு வீரர்கள் இருவரையும் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் வரவேற்று, பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் நினைவுப் பரிசும் வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள், இராணுவ அதிகாரி, பொலிசார், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
N5







