சாலாவ இராணுவ முகாம் வெடிப்பின் அதிர்வுகள்
அவிசாவளை, சாலாவ இராணுவ முகாம் ஆயுதக்களஞ்சிய வெடிப்பின் அதிர்வுகள் கட்டுப்பாட்டுக்கள் வந்துவிட்டாலும், அரசியல் ரீதியில் அதன் அதிர்வுகள் தொடர்ந்துகொண்டுதான் உள்ளன. அவை அடங்குவதற்கான அறிகுறிகளைக் காண முடியவில்லை. ஒவ்வொரு தரப்பும் இச்சம்பவத்துக்கு மற்றொரு தரப்பைக் காரணம் சொல்லி இதற்கான பொறுப்பிலிருந்து தப்பித்துவிடும் உபாயத்தைக் கையாள்கின்றன. கடந்த ஒரு வாரமாக இதனைத்தான் நாம் காண முடிகின்றது. ஆக, யாருமே இந்த அனர்த்தத்துக்குப் பொறுப்பேற்க முன்வரவில்லை. முன்வரப்போவதுமில்லை. அதேவேளையில், இது தற்செயல் நிகழ்வு எனப் புறக்கணித்துவிடக்கூடிய நிலைமையும் இல்லை. இதனை வெளிவரும் செய்திகள் உணர்த்ர்துகின்றன. இச்சம்பவத்தில் பாரதூரமான உயிரழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் கூட, சம்பவத்தின் பாரதூரத் தன்மையை அது குறைத்துவிடப் போவதில்லை.
பொதுமக்கள் செறிவாக வசிக்கும் ஒரு பகுதியில் பாரிய ஆயுதக்களஞ்சியம் ஒன்றை அமைத்ததே முதலாவது தவறு. சாலாவ பகுதியிலுள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் இச்சம்பவத்தில் அழிக்கப்பட்டிருப்பது இது மக்கள் செறிவாக வசிக்கும் பகுதி என்பதை உணர்த்துகின்றது. இராணுவத்தினர் விரைவாகச் செயற்பட்டு, மக்களை உஷார்படுத்து அவசரம் அவசரமாக அங்கிருந்து அவர்களை வெளியேற்றியதால் பாரிய உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டிருக்கின்றது. இந்த இடத்தில் இராணுவத்தினர் செயற்பட்ட முறை பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இந்தப் பகுதியில் பாரிய ஆயுதக்களஞ்சியம் ஒன்று அமைந்திருக்கின்றது என்ற தகவல்கூட பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. வெடி விபத்து பகலில் இடம்பெற்றதால், இராணுவத்தினரால் அவசரமாக மக்களை வெளியேற்ற முடிந்தது. இச்சம்பவம் இரவில் இடம்பெற்றிருந்தால், பாரிய விளைவுகள் ஏற்பட்டிருக்கலாம்.
பாரிய ஆயுதக்களஞ்சியம் ஒன்றை அமைக்கும் போது அதற்கான பாதுகாப்பு நடைமுறைகள் பல உள்ளன. மிகவும் சிறிய ஒரு தீ விபத்து கூட, மிகப்பாரிய அனர்த்தத்தை ஏற்படுத்தக்கூடியது. அதனால், சிறிய தீ விபத்து ஏற்பட்டால், அதனையிட்டு உடனடியாகவே எச்சரிக்கும் பொறிமுறை, தன்னியக்கமாகவே அதனை அணைப்பதற்கான பொறிமுறை என்பன மட்டுமன்றி, அதனைப் பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகளும் ஆயுதக்களஞ்சியம் ஒன்றில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இது சர்வதேச ரீதியாகக் கடைப்பிடிக்கப்படும் ஒரு நடைமுறை. சாலாவ இராணுவ முகாம் சம்பவத்தின் போது, இந்தப் பொறிமுறைகளில் முன்னெச்சரிக்கைப் பொறிமுறையைத் தவிர ஏனைய எதுவும் செயற்பட்டதாகத் தெரியவில்லை. தீணை அணைப்பதற்காக அனுப்பட்ட தீ அணைப்புப் படையினர் இரண்டு மைல் தொலைவிலேயே பல மணி நேரமாகக் காத்திருக்க வேண்டியிருந்தது. பாதுகாப்புப் பொறிமுறைகள் எந்தளவுக்குப் பலவீனமாக இருந்துள்ளது என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரமாக உள்ளது.
சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கு வெடிவிபத்துத் தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர். வெடிவிபத்து இடம்பெற்றபோது, சலாவ இராணுவ முகாமில் இருந்த இராணுவத்தினரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலங்களைப் பெற்று வருகின்றனர். சலாவ இராணுவ முகாமில் இருந்த 30 இராணுவத்தினரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ள அதேவேளை, முகாமுக்கு அருகில் இருந்த மக்களிடம் இருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்துக் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழு தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகளும், அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்புப் பொறிமுறைகளில் பெருமளவு குறைபாடுகள் காணப்பட்டுள்ளன என்பது வெளிப்படையாகத் தெரியும் நிலையில், இந்த விசாரணைகள் அவற்றை வெளிக்கொணர்வதாக மட்டுமன்றி, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பதாகவும் அமைய வேண்டும்.
இங்கிருந்த ஆயுதங்களின் விபரம், அவற்றின் நிலை என்பன தொடர்பரில் முழுமையான பட்டியல் ஒன்று பேணப்பட்டுள்ளதா என்பதும் தெரியவில்லை. அதேவேளையில், இந்த ஆயுதங்களை வேறு இடங்களுக்கு மாற்றுதற்கான திட்டம் ஒன்று இருந்துள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின. போர் தீவிரமாக இடம்பெற்ற போதுதான் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில்தான் இந்த ஆயுதக்களஞ்சியம் அமைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. போர் முடிவுக்கு வந்து ஏழு வருடங்கள் சென்றுவிட்ட நிலையில், இவ்வாறான ஒரு ஆயுதக்களஞ்சியத்தை சாலாவ பகுதியில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அதனால், அதனை மக்கள் செறிவற்ற மற்றொரு இடத்துக்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாமைக்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குள்ளது.
இவை அனைத்துக்கும் மேலாக சாலாவ சம்பவத்தை ஒரு எச்சரிக்கையாகக் கருதி, நாட்டில் இவ்வாறு மக்கள் வசிக்கும் பகுதிகளில் இருக்கக்கூடிய ஆயுதக்கிடங்குகளை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பல இடங்களில் இராணுவ முகாம்களையடுத்துள்ள பகுதிகளில் ஆயுதக்கடங்குகளும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல அமைப்புககளும் தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றன. வலி வடக்குப் பகுதியில் இவ்வாறான ஆயுதககளஞ்சியங்கள் இருப்பதை படைத் தரப்பே உறுதிப்படுத்தியிருக்கின்றது. போர் முடிவுக்கு வந்து ஏழு வருடங்கள் சென்றுள்ள நிலையில் இவ்வாறான முகாம்களின் அவசியம் எதற்காக என்ற கேள்விக்கு அரசாங்கத்திடம் தெளிவான பதில் இல்லை. சாலாவ சம்பவத்தின் பின்னராவது, இந்த முகாம்களை மூடிவிட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாகச் செயற்பட வேண்டும். அதனைச் செய்யாமல் நல்லிணக்கம் குறித்துப் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமிருக்கப்போவதில்லை. அதனை தமிழர்கள் நம்பப்போவதுமில்லை என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.
(ஞாயிறு தினக்குரல்)




