சிங்களக் குடியேற்றங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவும்: மக்கள் நலக் கூட்டணி தேர்தல் அறிக்கை
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக மக்கள் நலக் கூட்டணி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், இலங்கையில் தமிழர் பகுதியில் உள்ள சிங்களக் குடியேற்றங்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை இணைந்து தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கென மக்கள் நலக் கூட்டணியை அமைத்துள்ளன.
இந்தக் கூட்டணி விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க., வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவற்றுடன் இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கிறது. இந்த நிலையில், மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், தமிழகத்தின் முதல் கூட்டணி அரசை மக்கள் நலக் கூட்டணி, தே.மு.தி.க., த.மா.காங்கிரஸ் ஆகியவை இணைந்து அமைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஊழலை ஒழிப்பதற்கான லோக் ஆயுக்தா சட்டம், சேவைகள் கிடைப்பதை உறுதிசெய்யும் சேவை உரிமைச் சட்டம், முழுமையான மதுவிலக்கு ஆகியவை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இந்த தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அதிமுக அரசு உயர்த்திய பால்விலை, மின்சாரக் கட்டணம் ஆகியன குறைக்கப்படும் என்றும் இதில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இணைய தள வர்த்தகம், முன்-பேர வர்த்தகம் ஆகியவை தடுக்கப்படும் என்றும், கிராமப்புற இளைஞர்கள் இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கான கடனுக்கு அரசு உத்தரவாதம் அளிக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வனப்பரப்பை அதிகரிக்கும் வகையில், தொழில்கல்விகளில் சேரும் போதும் அரசு வேலைவாய்ப்பின் போதும் மாணவர்களின் குடும்பம் 25 மரக் கன்றுகளை நட்டிருந்தால் 1 மதிப்பெண், 50 மரக் கன்றுகளை நட்டிருந்தால் 2 மதிப்பெண் வழங்கப்படும் என்றும் இந்தத் தேர்தல் அறிக்கை கூறுகிறது.
இலங்கையில் தனி ஈழம், கூடங்குளம் அணு உலை விவகாரம் ஆகியவற்றில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை இடையே ஒத்த கருத்தைக் கொண்டிருந்தாலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இதில் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருப்பதால் அவை தொடர்பாக இந்த தேர்தல் அறிக்கையில் எதுவும் இடம்பெறவில்லை என வைகோ கூறினார்.
R-06




