செய்திகள்
சிங்கள மக்களை தூண்ட வேண்டாம் : ஒன்றிணைந்த எதிரணியிடம் ஜனாதிபதி கோரிக்கை
சிங்கள மக்களை தூண்டி அவர்களை தவறான வழிக்கு கொண்டு செல்ல வேண்டாமென காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்திற்கு எதிராக கூச்சலிடுபவர்களிடம் கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு நடைபெற்ற தொலைக்காட்சியொன்றினுடான நேர்காணலின் போது ‘பாராளுமன்றத்தில் மிகச் சிரமத்துடன் அங்கீகரித்த காணாமற் போனோர் பற்றிய அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டம், நாட்டைப் பிரிப்பதற்கான மற்றுமொரு வேலையா எனும் குற்றச்சாட்டு உள்ளது. இதன் மூலம் இராணுவ வீரர்கள் தண்டிக்கப்படுவார்களா?” என அவரிடம் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காணாமற் போனோர்கள் பற்றிய அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களை பார்க்கும்போது அவர்கள் இந்த நாட்டு தேசிய அரசியலில் எங்கு உள்ளார்கள் என நான் சிந்திக்கின்றேன். எல்லா பிரச்சினைக்கும் ஆரம்பம், மத்தி, முடிவு உண்டு. காணாமற் போனோர் தொடர்பான அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டம் பற்றி அல் இதன் ஆரம்பம் எது என்பது தொடர்பாகவே நாம் நோக்க வேண்டும். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஊடாக எம்மிடம் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைகளே இதன் ஆரம்பமாகும்.
நேற்று பாராளுமன்றத்தில் சிலர் நிலத்தில் உட்கார்ந்து கூச்சலிடுவதை நான் கண்டேன். ஆகவேதான் இப்பிரச்சினையின் ஆரம்பம், மத்தி, முடிவு என்பவற்றை புரிந்துகொள்ள வேண்டுமென நான் கூறினேன். கூச்சலிடும் இவர்களுக்கு ஆரம்பமும் இல்லை மத்தியும் இல்லை முடிவும் இல்லை. இந்நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு கூச்சலிடும் நபர்களுக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன். விசேடமாக இந்த நாட்டின் சிங்கள பௌத்த மக்களை தூண்டிவிட வேண்டாம், தவறாக வழிநடத்த வேண்டாம். பௌத்த தேரர்களுக்கு இந்த சட்டம் தொடர்பாக பிழையாக விளக்கம் அளிக்க வேண்டாம். நாம் அனைவரும் இந்த நாட்டை நேசிக்கின்றோம் என நான் மிகத் தெளிவாகக் கூறுகின்றேன். -(3)




