செய்திகள்

சித்திரைப் புது வருடத்திற்குள் மீள்குடியேற்றம் செய்யாவிடின் வெள்ளைக் கொடியுடன் வலி வடக்கிற்குள் அத்துமீறி நுழைவோம்

சித்திரைப் புது வருடத்திற்குள் வலி.வடக்கில் மீள்குடியேற்றம் செய்யாவிடின், வெள்ளைக் கொடியுடன் வலி வடக்கிற்குள் அத்துமீறி நுழைவோம் என வலிவடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டிய மக்கள் சூளுரைத்துள்ளனர்.

வலி.வடக்கு நலன்புரி நிலைய பொது நிர்வாக அமைப்பினரின் ஏற்பாட்டில், யாழ். சபாபதிபிள்ளை மற்றும் கண்ணகி நலன்புரி நிலையங்களில் வாழும் மக்கள் இன்று வெள்ளிக்கிழமை மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி அடையாள உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

அந்த உண்ணாவிரத போராட்டத்தின் போதே இவ்வாறு மக்கள்  சூளுரைத்தனர்.

இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் நண்பகல் வரை மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி அடையாள உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டது. அந்த உண்ணாவிரதத்தில் 3 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக விஸ்தரிப்புச் செய்ய வேண்டாம், எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் விரைவில் வலி.வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் நலன்புரி நிலைய மக்களுக்கான வாழ்வாதாரங்களை வழங்குதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

தம்மை மீள்குடியேற்றம் செய்யும் வரை வலி.வடக்கு மக்கள் வாழும் நலன்புரி நிலையங்களில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அடையாள உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும் அம்மக்கள் தெரிவித்தனார்.
n10