செய்திகள்

திரைப்படத் தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளை டிஜிட்டல் நிறுவனங்கள் ஏற்க வேண்டும்

திரைப்படத் தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளை க்யூப், யுஎஃப்ஓ ஆகிய டிஜிட்டல் நிறுவனங்கள் ஏற்க வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் வலியுறுத்தினார்.

தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் க்யூப், யுஎஃப்ஓ என்ற டிஜிட்டல் நிறுவனங்கள் மூலம் படங்கள் திரையிடப்படுகின்றன. இதற்காக இந்த நிறுவனங்கள் தயாரிப்பாளர்களிடமிருந்து கட்டணங்கள் வசூலிக்கின்றன.

இந்தக் கட்டணத் தொகை அதிகமாக இருப்பதாக தமிழ்த் திரைப்பட சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து திரைத்துறையினரின் வாழ்வாதாரத்தை முடக்கும் வகையில் லாப நோக்கத்துடன் செயல்படும் க்யூப், யு எஃப் ஓ நிறுவனங்களுக்கு எதிராக திரையுலகினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தலைவர் சரத்குமார், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், பெப்சி அமைப்பின் தலைவர் ஜி.சிவா ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதில் சரத்குமார் பேசியது: திரையுலகம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. அந்தப் பிரச்னைகளில் க்யூப், யூஎஃப்ஓ ஆகிய டிஜிட்டல் நிறுவனங்களும் பங்கெடுக்க வேண்டும் என்ற கவன ஈர்ப்புக்காவே இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

விளம்பர நிறுவனங்கள் மூலம் ரூ.400 கோடி வரை அந்த நிறுவனங்கள் லாபம் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதில் தங்களுக்கு உரிய பங்கினை தயாரிப்பாளர்கள் கேட்கின்றனர்.தயாரிப்பாளர்கள்தான் முதலாளிகள். திரைத்துறை சார்ந்த பலருக்கும் அவர்கள்தான் வேலை கொடுக்கின்றனர். எனவே தயாரிப்பாளர்களின் கோரிக்கைக்கு டிஜிட்டல் நிறுவனங்கள் செவிசாய்க்க வேண்டும் என்றார்.

டிக்கெட் கட்டணம்: தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும். பெரிய படங்களுக்கும், புதிய படங்களுக்கும் தனித்தனி கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். திரையரங்குகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என இயக்குநர் டி.ராஜேந்தர் கூறினார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நடிகர்கள் ஜீவா, ஆர்யா, சந்தானம், எடிட்டர் மோகன், இயக்குநர் சங்கச் செயலர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர்கள் இப்ராஹீம் ராவுத்தர், பிரமீட் நடராஜன், சிவசக்தி பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.