செய்திகள்

பட்டினி கிடந்து.. பல ஏமாற்றங்களை சந்தித்து நடிகையானவர்… ஸ்ரேயா தன்வந்திரியின் மறுபக்கம்

மாடலிங் துறையில் இறங்கி, அப்படியே பிரபலமான நிறுவனங்களின் விளம்பரங்களில் தோன்றி, ‘யார் அந்த பெண் ரொம்ப அழகாக இருக்குதே!’ என்று மக்கள் பேசும் அளவுக்கு பிரபலமானவர், ஸ்ரேயா தன்வந்திரி.விளம்பர படங்களில் தோன்றும்போதே பெருமளவு ரசிகர்களை கவர்ந்த இவர், இ்ந்தி திரை உலகிலும் அடியெடுத்துவைத்து அமர்க்களமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார். முத்தக் காட்சிகளுக்கு பெயர் பெற்ற இ்ம்ரான் ஹஸ்மியுடன் இணைந்து ‘ஒய் சீட் இந்தியா’ என்ற படத்தில் நடித்து, ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்திருக்கிறார்.

சினிமா அனுபவங்களை பற்றி ஸ்ரேயா தன்வந்திரியிடம் சில கேள்விகள்:

உங்களுக்கு சினிமா வாய்ப்பு எப்படி கிடைத்தது?

மாடலிங்கில் இடம்பிடித்தபடி, விளம்பரங் களிலும் நடித்தபடி சினிமா வாய்ப்புகளையும் தேடிக்கொண்டிருந்தேன். வாய்ப்பு தேடி பலமுறை ‘ஆடிஷன்’ சென்றேன். முன்பே சிலர் தேர்வுசெய்து வாய்ப்பு தருவதாக சொன்னார்கள். சில நாட்கள் படிப்பிடிப்பும் நடத்தினார்கள். பின்பு காணாமல் போனார்கள். எப்படியோ அதிர்ஷ்டவசமாக வாய்ப்பு கிடைத்தது. அதை நிலையாக பிடித்துக் கொண்டேன்.

இம்ரான் ஹஸ்மி முத்தக்காட்சிகளுக்கு பெயர் பெற்றவர். உங்களுக்கும் அத்தகைய அனுபவம்..?

சினிமாவில் முத்தம் என்பது பெரிய விஷயம் இல்லை. சினிமாவில் நான் நிறைய ஏமாற்றங்களை சந்தித்திருக்கிறேன். வாய்ப்புகளை தக்கவைத்துக் கொள்வதுதான் போராட்டமாக இருக்கிறது. நான் நல்ல கதை அம்சமுள்ள படங் களில்தான் நடிக்கவிரும்புகிறேன். ஆனால் டைரக்டரின் விருப்பம் என்ன என்பதை என்னால் எப்படி புரிந்துகொள்ளமுடியும். எப்படிப்பட்ட காட்சிகளை படத்தில்வைத்தால் படம் நன்றாக ஓடும் என்பது டைரக்டருக்குதான் தெரியும்.

நீங்கள் நடித்த முதல் படத்தில் கல்விமுறையில் இருக்கும் குறைபாடுகள் பற்றி அலசப்பட்டிருக்கிறது. நீங்கள் படித்தபோது அப்படிப்பட்ட குறைபாடுகள் எதையாவது உணர்ந்தீர்களா?

நிறைய உணர்ந்திருக்கிறேன். நம்முடைய கல்விமுறையில் பல குறைபாடுகள் இருக்கின்றன. நான் என்ஜினீயரிங் படித்தபோது எனக்கு போதுமான பயிற்சி கிடைக்கவில்லை. டாக்டர் படிப்பிற்கும், என்ஜினீயரிங்குக்கும் முழுமையான பயிற்சிகள் தரப்படவேண்டும். வெறும் புத்தகபடிப்பு மட்டும் கல்வியை முழுமைப்படுத்திவிடாது.

பிள்ளைகள் கல்வி பெறுவதில் பெற்றோரின் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

பெற்றோர்கள் கண்களை மூடிக்கொண்டு தங்கள் பிள்ளைகள் டாக்டராக வேண்டும், என்ஜினீயராக வேண்டும் என்று பகல் கனவு காண்கிறார்கள். கல்வித்தரத்தை பற்றி அவர்கள் ஆராயாமல் கனவை மட்டும் கண்டுகொண்டிருப்பதால்தான் நாட்டில் பொறுப்பற்ற கல்லூரிகள் நிறைய உருவாகி விட்டன. இந்த நிலைக்கு பெற்றோர்களும் ஒரு காரணம்தான். என் பெற்றோரையும் சேர்த்துதான் சொல்கிறேன். தங்கள் பிள்ளைகளின் ஆர்வம், திறமை, விருப்பம் போன்றவைகளை புரிந்துகொண்டு அவர்களை அவர்கள் வழியில் நடத்திச்செல்லவேண்டும். எனக்கு சிறுவயதிலே நடிப்பதில் ஆர்வம் இருந்தது. என்ஜினீயரிங் படித்தாலும் நான் நடிப்பைதான் விரும்புகிறேன்.

ஆனால் என்ஜினீயர் ஆவதைவிட நடிகையாவது பெரிய கஷ்டம் என்று கூறுகிறார்களே?

அது உண்மைதான். ஆனால் நாம் செய்ய விரும்பும் வேலையில் நமக்கு முழு ஆர்வம் இருக்கவேண்டும். ஆர்வம் இல்லாத வேலை நமக்கு பாரமாகி விடும். நான்கு வயதிலே எனக்கு நடிக்கும் ஆசை வந்துவிட்டது. அதனால் ‘பிரிட்டீஷ் ஸ்கூல் ஆப் எஜூகேஷனில்’ படித்தேன். அங்கு எனது ஆர்வத்திற்கு ஏற்ப வகுப்புகள் நடத்தினார்கள். பாட்டு, நடிப்பு, ஆட்டம், கொண்டாட்டம் என்று என் பள்ளி நாட்கள் மிக அற்புதாக அமைந்தது. ஆனால் கல்லூரிக்காலத்தில்தான் என் ஆர்வம் தடம்மாறிப்போனது.

சினிமாவில் உங்கள் லட்சியத்தை அடைய எந்த மாதிரியான முயற்சிகளில் ஈடுபட்டீர்கள்?

அதற்கு முதல் வேலையாக மும்பை வந்து தங்கவேண்டும். நான் ஏழு வருடங்களுக்கு முன்பே மும்பை வந்துவிட்டேன். மும்பை வாழ்க்கை சுலபமானதல்ல, இயந்திரமய மானது. வாடகை அதிகம். அழகாக தோன்ற நிறைய பணத்தை பியூட்டி பார்லருக்கு அள்ளிக்கொடுக்கவேண்டும். பலரை தேடிப்போய் சந்திக்கவேண்டும். அதற்காகவும் நிறைய செலவிடவேண்டும். அதற்கான பணத்துக்காக நான் என் பெற்றோரை நம்பி இருக்கவில்லை. மாடலிங் செய்தேன். தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்தேன். மும்பையில் காலூன்ற ரொம்ப போராடினேன். பல நேரங்கள் பட்டினியாகக்கூட கிடந்தேன். ஆனால் என் லட்சியத்தை விட்டுக்கொடுக்கவே இல்லை. தொடர்ந்து வாய்ப்புகளை தேடினேன். அந்த போராட்டத்தில் வென்று நடிகையாகியிருக்கிறேன். நான் நடிகையாக என் உயரமும் ஒரு காரணம்.

நீங்கள் நடிகையாக உங்களுக்கு யாரெல்லாம் உதவினார்கள்?

எனக்கு நம்பிக்கையான சில நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களது ஆலோசனைப்படி நான் நடந்துகொள்கிறேன். நடிக்கும் ஆசையில் இருக்கும் பெண்களைத் தேடி, வாய்ப்பு தருகிறேன் என்று கூறிக்கொண்டு பலர் வருவார்கள். யாரென்றே தெரியாத அவர்களிடம் ஏமாந்துவிடக்கூடாது. இங்கே எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. பல விஷயங்களை கற்றுத் தெளிந்திருக்கிறேன்.

உங்கள் திரை உலக பயணத்திற்கு, குடும்பத்தினர் தந்த ஒத்துழைப்பு..?

என்னை முழுமையாக நம்பி அவர்கள் எனக்கு சுதந்திரம் தந்தார்கள். என் வழியில் என்னை போக அனுமதித்தார்கள். என் முதல் விளம்பர படத்தைப் பார்த்து பாராட்டினார்கள். சினிமாவில் காலடி எடுத்துவைக்கவும், அங்கே என் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்றும் நம்பிக்கையூட்டினார்கள். அவர்கள் நம்பிக்கை பலித்துவிட்டது. என் குடும்பம் கொடுத்த ஒத்துழைப்புதான் என்னை ஜெயிக்க வைத்தது.

நீங்கள் திடீரென்று எதற்கெல்லாம் கோபம்கொள்வீர்கள்?

தேவையற்ற ஹாரன் சத்தம் என்னை டென்ஷ’னாக்கிவிடும். அதிகமான இரைச்சல் எனக்கு இ்ம்சையாக இருக்கும். தேவையே இல்லாமல் ரோடுகளில் நிறைய வேகத்தடைகள் இருக்கும். அவைகளும் என்னை கோபம்கொள்ளச் செய்யும். நான் சாதாரண குடும்பத்தில் பிறந்தவள். எப்போதும் சாதாரணமாக வாழ விரும்புகிறவள்.