செய்திகள்

“வைரமுத்து மீதான புகாருக்கு ஆண்டாள் சர்ச்சைதான் காரணமா?” பின்னணி பாடகி சின்மயி பேட்டி

தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தின் நிர்வாகிகள் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சினிமா டைரக்டர் லட்சுமி ராமகிருஷ்ணன், கவிஞர் லீனா மணிமேகலை, பின்னணி பாடகி சின்மயி, டெலிவிஷன் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பின்னணி பாடகி சின்மயி நிருபர்களிடம் கூறியதாவது,வைரமுத்துவை எதிர்த்து நான் குரல் கொடுத்ததற்கு, ஆண்டாள் சர்ச்சை தான் பின்னணி விவகாரம் என்கிறார்கள். அது தவறு.ஆண்டாள் விவகாரத்தில் நான் எந்த கருத்தும் கூறவில்லை. இந்த விவகாரத்தில் என்னை வைத்து அரசியல் செய்பவர்களை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. என் வலி எனக்கு தெரியும். வைரமுத்து யார் என்று பெண்களுக்கு நன்றாகவே தெரியும்.

என்னை போல சக பாடகிகள் பலர் இந்த பிரச்சினையை சந்தித்து இருக்கிறார்கள். ஏதாவது சொல்லிவிட்டால் கணவர் தன்னை வெறுத்துவிடுவாரோ, குடும்பத்தினர் ஒதுக்கி விடுவார்களோ என்ற பயம் தான் அதற்கு காரணம்.வைரமுத்துவை எதிர்த்து நான் குரல் கொடுப்பது இப்போது தான் ஊடகங்களுக்கு தெரியும். அதற்கு முன்பாகவே எனது நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடம் வைரமுத்து யார், எப்படிப் பட்டவர்? என்பதை தெளிவாக கூறியிருக்கிறேன்.ed5GYWnrrtts

எனது திருமணத்துக்கு பிறகு கூட ஓரிரு நிகழ்ச்சிகளுக்கு வரும்படி வைரமுத்து அழைப்பு விடுத்தார். அப்போது முடியாது என்று கூறினேன். அதற்கு அவர் என்னை கடுமையாக திட்டினார். மிரட்டவும் செய்தார். இதை எனது கணவர் மற்றும் மாமனார்-மாமியாரிடம் தெரிவித்தேன். அவர்களது ஆதரவும், நண்பர்கள் கொடுத்த ஊக்கமும், ‘மீ டூ’ இயக்கமும் தான் என்னை இப்போது உண்மையை பேச செய்தது.

வைரமுத்து எனக்கு தொல்லை தந்த காலகட்டம் எது? என்பதற்கான ஒரே ஆதாரம் எனது பாஸ்போர்ட் தான். அதில் தான் சுவிட்சர்லாந்து போனது குறித்த ஸ்டாம்ப் ஒட்டப்பட்டு இருக்கிறது. சென்னையில் நாங்கள் இதுவரை 10 வீடுகளுக்கும் மேல் மாறிவிட்டோம். எனது அந்த காலகட்டத்தில் உபயோகப்படுத்திய பாஸ்போர்ட் எங்கே போனது என்று தெரியவில்லை. அந்த பாஸ்போர்ட் கிடைத்ததும் நிச்சயம் வைரமுத்து மீது புகார் அளிப்பேன். அதற்காக வக்கீல்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறேன். ஆவணங்களை சேகரித்து வருகிறேன் இவ்வாறு அவர் கூறினார்.

சினிமா டைரக்டர் லீனா மணிமேகலை பேட்டியளிக்கும்போது, ‘டைரக்டர் சுசிகணேசன் மீது போலீசாரிடம் இதுவரை புகார் அளிக்காதது ஏன்?’, என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து அருகில் இருந்த சின்மயி ஆவேசமடைந்தார்.அப்போது, “ஊரில் உள்ள ஆண்களை எல்லாமே அசிங்கப்படுத்த நாங்கள் வரவில்லை. எங்களுக்கு தனி கதை இருக்கிறது. இப்போது சமூக வலைத்தளங்களில் சிலர் என்னை விபசாரி எனும் அளவுக்கு கேவலமாக பேசி வருகிறார்கள். எனக்கும், என்னை போன்ற பிரச்சினைகளை சந்தித்த பெண்களுக்கும் உணர்வுகளும், வலிகளும் உண்டு. அதை புரிந்துகொள்ளுங்கள்”, என்று சின்மயி கண்ணீர் மல்க கைகூப்பியபடி கூறினார்.(15)