சிரியாவில் ஏன் சிறுவர்கள் கொல்லப்படுகின்றனர்?
கெவின் பொன்னையா – பிபிசி
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடிபாடுகளின் மத்தியிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட ரவான் அலோவஸ் என்ற ஐந்து வயது சிறுமியின் கதறல், சிரியா குறித்த உலகின் அரசியல், சிறுவர்களை பலிகொண்டுவருவதை உலகிற்கு நினைவுபடுத்தியுள்ளது.
250000ற்கும் மேற்பட்ட மக்கள் சிக்குப்பட்டுள்ள அலப்போ மீது சிரிய அரசபடையினர் கடந்தசில நாட்களாக உக்கிரதாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தாக்குதல் அலெப்போ மீது திணிக்கப்பட்ட புதிய நரகம் என பிரிட்டனின் ஐக்கியநாடுகளிற்கான தூதுவர் தெரிவித்துள்ளார்.இந்த தாக்குதல்களை அவர் யுத்தகுற்றங்கள் எனவும் வர்ணித்துள்ளார்.
இந்தமோதலின் நடுவில் ஓரு இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் சிக்குண்டுள்ளதாக மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன. அலெப்போவில் காயங்கள் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பான்மையானவர்கள் சிறுவர்கள் என ஐக்கியநாடுகள் தெரிவித்துள்ளது.
காயமடைந்த சிறுவர்கள் மருத்துவமனையில் உயிரிழக்கின்றனர்,மருந்துப்பொருட்கள் இன்மையே இதற்கு காரணம் என மனிதாபிமான அமைப்புகள் தெரிவிக்கின்றன.சிரிய சிறுவர்கள் முன்னர் ஓருபோதும் இதுபோன்ற மோசமான நிலையை எதிர்கொண்டதில்லை என மனிதாபிமான அமைப்புகள் தெரிவிக்கின்றன.
ஏன் சிறுவர்கள் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர்?
அந்த பிராந்தியத்தின் ஏனைய நாடுகளை போன் சிரியா சனத்தொகையில் அதிகமானவர்கள் இளவயதினர்.அந்த நாட்டிலிருந்து அகதிகளாக வெளியேறியுள்ள 6 மில்லியன் மக்களில் அதிகமானவர்கள் சிறுவர்கள்.கிழக்கு அலெப்போவில் முற்றுகைக்குள் சிக்கியுள்ளவர்களில் 40 வீதம் சிறுவர்கள் என்கின்றது சேவ்த சில்ட்ரன்.
இதன் காரணமாக உயிரிழப்பு வீதம் சமாந்திரமாக காணப்படுகின்றது.கடந்த சில நாட்களாக அலெப்போ மீது கண்மூடித்தனமான விமானக்குண்டுவீச்சு இடம்பெறுவதை காணமுடிகின்றது,இதன்காரணமாக சிறுவர்களும் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர் என்கிறது சேவ் த சில்ரன்.
விமானதாக்குதலும் தொடர் முற்றுகையும் கடந்த ஐந்து வருடங்களில் சிரியா சிறுவர்களிற்கு என்றுமில்லாத நரகத்தை உருவாக்கியுள்ளது.
அலெப்போ போன்ற நகரப்பகுதிகளில் விமானக்குண்டு வீச்சு இடம்பெறும்போது தப்புவதற்கு வழியிருக்காது,இந்த இடங்களில் சிறுவர்கள் அதிகளவிற்கு பாதிப்படைய வாய்ப்புண்டு,
இதுதவிர சிறுவர்கள் அதிகம் காணப்படும் பாடசாலைகள், மருத்துவமனைகள், போன்றவற்றை சிரியா அரசாங்கம் இலக்குவைப்பதும் சிறுவர்களின் உயிரிழப்பு அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளது என்கின்றன மனிதாபிமான அமைப்பு.





