சிறிய புதைகுழிகள்- சிறுவர்களை புதைப்பதற்கு இடம்தேடி அலையும் சிரிய அகதிகள்
நன்றி – கார்டியன்
சிறுவர்களிற்கான புதைகுழிகளை இலகுவாக அடையாளம் காணமுடியும், சிறிய மணல்குவியல் போன்று அவை காணப்படும்,மயானத்தின் ஓரங்களில் அவை காணப்படும்.
சிறுவர்களின் புதைகுழிகளை அமைப்பதற்கு நான்கு சிறிய புதைகுழிகள் மாத்திரம் போதும். அவற்றில் பெயர்கள் எதுவும் பொறிக்கப்பட்டிராது.
லெபனானின் பெக்கா பள்ளதாக்கில் உள்ள அல்ரஹ்மா புதைகுழியும் அவ்வாறான ஓன்று – அதில் ஓன்றில் மாத்திரம் சிறிய குழந்தையொன்றின் பெயர் காணப்படுகின்றது. இவையே சிறுவர்களிற்கான புதைகுழிகள். அவர்கள் அனைவரும் சிறுவர்கள், அவர்கள் அனைவரும் சிரிய பிரஜைகள் என அந்த மயானத்தின் பராமரிப்பாளர் தெரிவிக்கின்றார்.பல குழந்தைகள் இறந்துள்ளன, நாங்கள் அவர்களை ஓரத்தில் புதைப்போம், அல்லது வேறு இரண்டு புதைகுழிகளிற்கு நடுவில் புதைப்போம் எங்கெல்லாம் புதைக்க முடியுமோ அங்கெல்லாம் புதைப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.
சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை 5 மில்லியனாக அதிகரித்துள்ளது என ஐநா தெரிவிக்கின்றது. இவர்களில் ஓரு மில்லியனிற்கு மேற்பட்டவர்கள் லெபனானில் அகதிகளாக தங்களை பதிவு செய்துள்ளனர். சிரிய அகதிகள் பல துயரங்களை இங்கு அனுபவிக்கின்றனர். விசா நெருக்கடிகள், மோசமாக நடத்தப்படுதல், எல்லையிலும் விசா அலுவலகங்களிலும் மோசமாக நடத்தப்படுதல், சிறுவர் துஸ்பிரயோகம் என பல நெருக்கடிகளை அவர்கள் சந்திக்கின்றனர். கடும் குளிரை தாங்காத பிளாஸ்டிக் கூடாரங்களில் அவர்கள் வாழ்கின்றனர்.
இதற்கப்பால் மரணமும் அவர்களிற்கு பெரும் நெருக்கடிகளை கொடுக்கின்றது. தங்கள் நேசத்திற்குரியவர்களை புதைப்பதற்கு ஓரு இடத்தை கண்டுபிடிப்பதற்கு அவர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக சிரிய பிரஜைகளின் உடல்கள் ஓரு மாதத்திற்குமேல் பிரேத அறைகளில் கிடப்பதும் வழமை.
மருத்துவமனைக்குரிய கட்டணத்தை வழங்குவதற்கு பெரும் சிக்கலை எதிர்கொள்ளும் சிரிய அகதிகள் பெட்டிகளில் உடல்களை எடுத்துசென்று கைகளால் புதைகுழிகளை தோண்டி அவற்றை புதைக்கின்றனர்.
லெபனான் பிரஜைகளின் மயானங்களை பயன்படுத்துவதற்கான அனுமதியை சில வேளைகளில் அரசசார்பற்ற நிறுவனங்கள் பெற்றுக்கொடுக்கின்றன. எனினும் லெபனான் மக்களைவ விட சிரிய அகதிகளின்எண்ணிக்கை அதிகம் என்பதால் இந்த விடயத்திலும் பிரச்சினைகள் காணப்படுகின்றன.
லெபனாலில் சிரிய அகதிகள் வேலைபார்ப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் இறுதிக்கிரியைகளை மேற்கொள்வது கூட அகதிகளிற்கு கடினமான விடயமாக காணப்படுகின்றது.
மரணத்தில் கூட அவர்களிற்கு நிம்மதி கிடைக்கவில்லை என்கிறார் அரசசார்பற்ற அமைப்பின் பணியாளர் ஓருவர். இவர் சிரிய அகதிகளிற்கான மயானங்களை கண்டுபிடிப்பதற்கு உதவி வருகின்றார்.




