செய்திகள்

சிறுபான்மைத் தமிழரின் தலைவிதியைத் தீர்மானிக்கும் புதிய அரசியலமைப்புச் சட்டப் பிரேரணை

கடந்த 9 ஆம் திகதி பிரேரிக்கப்பட்டிருக்கின்ற புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குதல் என்கின்ற பிரேரணையை சிறுபான்மைத் தமிழ் மக்களின் தலைவிதியை எழுதுகின்ற ஒரு பிரேரணையாக நாங்கள் பார்க்கின்றோம். தேசிய நல்லிணக்கம் தொடர்பாக முன்னோடிக் கருத்துகளைக் கொண்டிருந்தவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
கடல்வாழ் செட்டை மீன் குஞ்சுகள் இனப்பெருக்க நிலையத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு மட்டக்களப்பு கிரான்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீர, மீள்குடியேற்ற பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;
1994 தொடக்கம் 2000 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நான் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும்போது அமைச்சர் மகிந்த அமரவீரவுடன் கடமை புரிந்த நாட்களை நினைத்துப் பார்க்கின்றேன். அக்காலகட்டத்தில் சந்திரிகா குமாரதுங்கவின் தலைமையிலான அரசு அமைந்திருந்தது. தேசிய நல்லிணக்கம் தொடர்பான முன்னோடிக் கருத்துகளைக் கொண்டிருந்தவர் சந்திரிகா. அவருடைய காலத்தில் தான் நீலன்  பீரிஸ் தீர்வுத்திட்டம் என்று சொல்லப்படுகின்ற திட்டம் விடுதலைப் புலிகளின் ஆலோசகரான அன்ரன் பாலசிங்கத்தால் ஒஸ்லோவிலே மாவீரர் தினத்திலே முன்வைக்கப்பட்டது.
வட, கிழக்கு பாரிய இருளில் இருந்து கடந்த வருடம் ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் கிழக்கு வெளுத்தாற்போல் சிறிய ஒளிக்கீற்று எமது பிரதேசத்தில் தென்படத் தொடங்கியது. இந்த ஆட்சி நல்லாட்சி என்ற மகுடத்துடன் செயற்பட்டுவருகின்றது. கடந்த பெப்ரவரி மாதம் தேசிய சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன, இந்த நாடு பன்மைத்துவ நாடு என்றும் பன்மைத்துவத்தினை வென்றெடுத்துக்கொண்டு அனைத்து மக்களின் அங்கீகாரத்துடன் சமாதான சூழலை உருவாக்குவது தன்னுடைய இலட்சியம் என்றும் தெரிவித்தார்.
இந்த நடைமுறையில் உள்ள சில, சில நிகழ்வுகள் இடம்பெற்று அவற்றின் முக்கியமைல் கல்லாக கடந்த 4 ஆம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெற்ற தேசிய சுதந்திர தின விழாவில் இந்த நாட்டு மக்களுக்கு எல்லாம் வெளியிடப்பட்ட நற்செய்தியாக தமிழிலே தேசிய கீதம் பாடப்பட்டது. இவையெல்லாம் நல்ல சமிக்ஞையை வெளியிட்டுக்கொண்டிருக்கின்ற அதேவேளையிலே, அதிகாரப் பங்கீடு என்கின்ற விடயம் அரசினுடைய மிக முக்கியமான சவாலாக அமைந்திருக்கின்றது என்பதனை மகிந்த அமரவீர உணர்வார் என்று நான் நினைக்கின்றேன்.
கடந்த 9 ஆம் திகதி பிரேரிக்கப்பட்டிருக்கின்ற புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குதல் பிரேரணையானது சிறுபான்மை என்கின்ற தமிழ் மக்களாகிய எங்களது தலைவிதியினைத் தீர்மானிக்கின்ற பிரேரணையாகும்.
இந்த வகையில் தெற்கிலே எதிர்கொள்ளக் கூடிய சவால்களை ஜனாதிபதி சமாளிக்க கூடிய வகையிலே அவருக்குக் கைகொடுத்து உதவுகின்ற முக்கிய அமைச்சர்களில் ஒருவர் என்கின்ற பெருமை அமைச்சர் மகிந்த அமரவீரவுக்கு உண்டு என்பதனைக் கூறிவைக்கின்றேன்.
அரசியலமைப்புச் சட்டத்தில் அதிகாரப் பரவலாக்கல் வருவதற்கு ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் எடுக்கலாம். ஆனால் இதனை நடைமுறைப்படுத்திக்காட்டுவதற்கு மத்திய அமைச்சர்களுக்கு அதிகாரம் உண்டு. அந்த வகையிலே மீன்பிடி தொடர்பான விடயங்களை மாகாணங்களுக்கு வழங்குவதிலே நீங்கள் ஒத்துழைத்து பெருமனதோடு செயற்படுவீர்கள் என நான் எதிர்பார்க்கின்றேன்.
மாகாண அரசும் மத்திய அரசும் பரஸ்பரம் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு கடற்றொழில் நீரியல் வள அமைச்சினூடாக, வழிப்படுத்த வேண்டும். எமது மாவட்டத்தில் இவ்வாறான திட்டங்களை நான் வரவேற்கின்றேன். எமது இயற்கை வளங்களைக் குறைவடைய செய்யும் வகையில் எந்தவித திட்டங்களும் அமைந்துவிடக் கூடாது எனத் தெரிவித்தார்.
n10