செய்திகள்

சிறுபான்மை சமூகம் புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் கருத்தறியும் நடவடிக்கையில் ஆர்வம் காட்டாமை சரியானதா..?

 
-கே.வாசு-
ஆட்சி மாற்றம், புதிய நல்லாட்சி அரசாங்கம் என கடந்த வருடம் பரபரப்புடன் கடந்து விட இவ் வருடம் ஆரம்பித்தில் இருந்தே அரசியல் ரீதியான பல மாற்றங்களுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றது. தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டு வந்து அதன் ஊடாக பிரச்சனைகளை தீர்க்கும் ஒரு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால் அந்த அரசியலமைப்பு சிறுபான்மை இனத்திற்கு சாதமானதாக அல்லது சிறுபான்மை இனம் எதிர்பார்க்கும் வகையில் அமையுமா என்பது ஒரு கேள்விக்குறியே. இருப்பினும் புதிய அரசியலமைப்பை கொண்டு வரும் நோக்கில் மக்கள் மத்தியில் அது தொடர்பில் கருத்தறியும் செயற்பாட்டையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. 20 பேர் கொண்ட நிபுணர் குழு அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் அமைக்கப்பட்டு 25 மாட்டங்களிலும் மக்கள் கருத்துக்களை அறிந்து அந்த நிபுணர்குழு ஒரு அறிக்கையை தயார் செய்து அரசாங்கத்திடம் வழங்கவுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் கருத்தறியும் செயற்பாடு தற்போது இரண்டாம் மாதத்தை தொட்டுள்ளது. 3 மாதங்கள் இதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை முழுவதும் மக்கள் கருத்துக்களை அறிய 3 மாதம் போதாது என்பது வெளிப்படையானதே. ஆனால் அதில் மக்கள் கலந்து கொண்டு கருத்துக்களை கூறுகின்றார்களா என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரை பிரித்தானியரின் காலணித்துவத்திற்குள் இருந்த போது 1833 ஆம் ஆண்டு முதலாவது அரசியலமைப்பாக கோல்புறுக் ஹமறன் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த யாப்பினைக் கொண்டுவருவதற்காக 1829 ஆம் ஆண்டு வில்லியம் கோல்புறுக் தலைமையிலான குழுவும், 1830 ஆம் ஆண்டு சாள்ஸ் எவ் ஹமறன் தலைமையிலான குழுவும் பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்து மக்கள் கருத்துக்களை அறிந்தது. அதன் பின்னரே அந்த அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. மக்கள் கருத்துக்கள் பெறப்பட்ட போதும் அது பிரித்தானியர் நலன்சார்ந்த யாப்பாகவே இலங்கையில் அப்போதைய மத்தியதர வர்க்கத்தினரால் பார்க்கப்பட்டது.
IMG_3228
அதற்கு பின்னர் பிரித்தானியர் காலத்தில் குறூமக்கலம், மனிங், மனிங்டெவான்சயர், டொனமூர், சோல்பரி என அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் வந்த போதும் அதற்கு மக்கள் கருத்துக்கள் பெறப்படவில்லை. அதேபோல் சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையில் 1972 ஆம் ஆண்டு மற்றும் தற்போது நடைமுறையில் உள்ள 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்ட போதும் அதிலும் மக்கள் கருத்துக்கள் பெறப்படவில்லை.
ஆனால், தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்புக்காக மக்கள் கருத்துக்களை பெறுவதற்கு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை உண்மையில் வரவேற்க வேண்டிய ஒரு விடயம். ஆனால் பெரும்பான்மை இனமாக சிங்கள மக்கள் வாழும் நிலையில் மக்கள் கருத்துக்கள் அவர்களுக்கு சார்பாக அல்லது அவர்கள் நலன்சார் கருத்துக்களே அதிகமாக இருக்கப்போகிறது. அப்படியாயின் அதனை வைத்து புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படின் அது சிறுபான்மை மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றதாக அமைய முடியாமல் போகும் என்பது ஜதார்தமே.
இவ்வாறானநிலையில், புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் கருத்தறியும் போது தமிழ் பேசும் சிறுபான்மையின மக்கள் பங்குபற்றுவது மிகக் குறைவாக காணப்படுகின்றது. குறிப்பாக வவுனியாவில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த கருத்தறியும் அமர்வில் வெறும் 20 பேரே கலந்து கொண்டு கருத்துக்களை பதிவு செய்தனர். அது கூட சில சமயங்களில் பாதகமானதாகவே அமையும். புதிய அரசியலமைப்பு மேல் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லை அல்லது அமைக்கப்பட்ட நிபுணர் குழு மேல் நம்பிக்கை இல்லை என்ற தோரணையையும் அது ஏற்பத்தும். அப்படியாயின் ஒட்டுமொத்த சிறுபான்மையின தமிழ் பேசும் மக்களும் அதனை புறக்கணித்தால் அவ்வாறு தான் நடந்தது என கூறிக் கொள்ள முடியும். ஆனால் குறிப்பிட்ட சிலர் ஆர்வத்துடன் பங்கேற்று புதிய அரசியலமைப்பு தொடர்பில் கருத்துக்களை கூற, ஏனைய மக்கள் இதில் ஆர்வம் காட்டாத நிலை காணப்படுகின்றது. அப்படியாயின் தீர்வுத் திட்டம், புதிய அரசியலமைப்பு என்பவற்றில் தமிழ் பேசும் மக்களுக்கு அக்கறை இல்லை என்று கூறிவிடவும் முடியாது. ஏனெனில் அண்மையில் தமிழ் மக்கள் பேரவையால் முன்வைக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு தீர்வுத் திட்ட யோசனையில் பெருமளவான மக்கள் பங்கேற்றிருந்தனர்.
 ஆனால், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அரசியலமைப்பு கருத்தறியும் அமர்வுகளில் பங்குபற்றுவதை அவர்கள் தவிர்க்கின்றனர். காரணம், காலம் காலமாக பல்வேறு ஆணைக்குழுக்களையும், நிபுணர் குழுவையும் அமைத்து கருத்துக்கள், விசாரணைகள் என நடந்த போதும் உரிய நடவடிக்கையே எடுக்கப்படாமை மற்றும் உரிய தீர்வு வழங்கப்படாமை குறித்து மக்கள் மத்தியில் இருக்கும் அதிருப்தி இதில் அக்கறை இல்லாத தன்மையை ஏற்படுத்தும் என்பது உண்மை. ஆனாலும், தற்போதைய புதிய அரசியலமைப்பு என்பது இந்த அரசாங்கத்தால் விரும்பி கொண்டு வரப்படவில்லை. இது சர்வதேச அழுத்தம் காரணமாக ஒரு தீர்வுத் திட்டத்துடன் கூடியதாக கொண்டு வர வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இருக்கிறது. அதனாலேயே இதைச் செய்ய முனைகிறது. ஒரு தீர்வுத் திட்டம் நோக்கி நகரும் போது ஏற்படும் குழப்பத்தில் இருந்து அரசாங்கம் தன்னை பாதுகாக்கவும், மக்கள் இதையே விரும்புகிறார்கள் என சர்வதேசத்திற்கு காட்டவுமே இந்த மக்கள் கருத்தறியும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது என்பது கள ஜதார்த்தம்.
இதை தமிழ் பேசும் சிறுபான்மை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதனால் விரும்பியோ, விரும்பாமலோ அவர்கள் இதில் தமது தீர்வுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை முன்வைக்க வேண்டிய தேவையுள்ளது. அப்போது தான் சிறுபான்மையின மக்கள் காலம் காலமாக கொள்கை மாறாது இதனையே விரும்புகிறார்கள் என இந்த அரசாங்கம் மீண்டும் விளங்கிக் கொள்ளும். இந்த கருத்தறியும் அறிக்கையை பார்வையிடும் சர்வதேசம் மீண்டும் புரிந்து கொள்ளும். அதன் மூலம் நாம் கேட்பது எல்லாம் கிடைத்து விடாது போனாலும் அது தொடர்பாக அரசாங்கம் சிந்திக்க வேண்டிய நிலையேற்படும். சிறுபான்மை மக்கள் தீர்வு விடயத்தில் அக்கறையாகவுள்ளதை அவர்களால் உணரமுடியும். இது அடுத்த கட்ட நகர்வுக்கு ஒரு உந்துசக்தியாக அமையும்.
IMG_3219
தனித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் கருத்துக்களை கூறி எதுவும் நடந்துவிடப் போவதில்லை. மக்கள் மயப்படுத்தப்பட்ட கருத்துக்களும், போராட்டங்களுமே வெற்றி பெற்றிருப்பது கடந்த கால படிப்பினை. இதனை சிறுபான்மை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கு மக்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பு சிறுபான்மை இன சமூகங்களைப் பிரதிபலிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னனி  உள்ளிட்ட கட்சிகளுக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் தமிழ் மக்கள் பேரவையினருக்கும் பாரிய பொறுப்பு உண்டு. சிறுபான்மை சமூகத்திற்கு அரசாங்கம் புதிய அரசியலமைப்பில் முக்கியத்துவம் கொடுக்காது விட்டாலும் அவர்கள் தமது எதிர்பார்ப்வை வெளியிட இது ஒரு நல்ல சந்தர்ப்பம். அதற்கு அதிகளவிலான மக்கள் பங்கேற்று புதிய அரசியலமைப்பு தொடர்பில் கருத்துக்களை கூற வேண்டும். சிவில் சமூகத்தினர், அரசியல்வாதிகள், கல்விமான்கள் ஆகியோரும் இதில் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்து சிறுபான்மை சமூகம் சார்பில் முன்வைக்கப்படும் கருத்துக்களை வலுவுள்ளதாக மாற்ற வேண்டும். அவ்வாறு அமையும் பட்சத்தில் அது கூட அரசாங்கத்திற்கு ஒரு அழுத்தமானதாக மாற வாய்ப்புள்ளது. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பதை விடுத்து அவ்வப்போது வருகின்ற சந்தர்ப்பங்களை சரியாகவும், சாதுரியமாகவும் பயன்படுத்த சிறுபான்மை சமூகம் பழகிக் கொள்ள வேண்டும். அதற்கு அரசியல்வாதிகள் உறுதுணையாக நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயமே.
5 Attachments