செய்திகள்

சிறுபிள்ளைகளை வேட்டையாடும் காமுகர்களுக்கு மரண தண்டனை வழங்க சட்ட திருத்தம் கொண்டுவரப்படுதல் வேண்டும்!

சிறுபிள்ளைகளை வேட்டையாடும் காமுகர்களுக்கு மரண தண்டனை வழங்க சட்ட திருத்தம் கொண்டுவரப்படுதல் வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார, சிறுவர் நன்னடத்தை அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் சிலதினங்களுக்கு முன்னர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி தொடர்பாக அமைச்சரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

போருக்கு பின்னரான சூழ்நிலையில் வடக்கில் சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளமை கவலையளிக்கின்றது. நாட்டில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை மாற்றுத்தரப்பினரால் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான வன்புணர்வு சம்பவங்கள் நடந்தேறின. அவற்றை எதிர்த்து குரல்கொடுத்தோம். எனினும் தற்போது நமது சமூகத்திலுள்ளவர்களாலேயே இவ்வாறான கொடிய சம்பவங்கள் நடைபெறுவதை ஜீரணிக்க முடியாதுள்ளது. இந்த சமூத்தை பிரதிநித்துவப்படுத்தும் குடிமகானாக இந்த நிலையை நினைத்து வெட்கி தலைகுனிய வேண்டியுள்ளது.

வவுனியா வடக்கில், யாழ்ப்பாணத்தில் இன்று வவுனியாவில் நம் கதவை தட்டியுள்ளது. நாளை உங்கள் வீடுகளிலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறலாம். எனவே பெற்றோர்கள் மிக அவதானமாக இருக்கவேண்டியது அவசியமாகும். குறிப்பாக வேலைக்கு செல்பவர்கள் தங்கள் குழந்தைகளை தனியாக வீட்டில் விட்டுவிட்டு செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன் இதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டுமென அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

N5