செய்திகள்

சிறைக்குள் கையடக்கத் தொலைபேசி……….!

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் 53 கையடக்கத் தொலைபேசிகளை கடத்திச்சென்று கைதிகளுக்கு விற்றதாக சந்தேகிக்கப்படும் சிறைக்காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதாள உலக நபரான ‘தெமட்டகொட சாமிந்த’ என்பவரின் பெயரைப் பயன்படுத்தி இவர் பலரிடம் ‘ஈஸிகேஷ்’ முறையில் கப்பம் வசூலித்திருக்கிறார் எனவும், அந்தப் பணத்தில் கையடக்கத் தொலைபேசிகளை வாங்கி சிறைக்கைதிகளுக்கு விற்றிருக்கிறார் எனவும் பேலியகொடை பிராந்திய குற்ற விசாரணைப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

குருநாகல் பிரதேசவாசியான இவர், குருநாகலிலுள்ள ஈஸிகேஷ் நிலையமொன்றில் பணப்பரிமாற்றம் செய்வது அந்நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமெராவில் (சி.சி.ரி.வி) பதிவாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் இவர் கடந்த 16ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரிடமிருந்து இரண்டு கையடக்கத் தொலைபேசிகளும், இரண்டு சிம் அட்டைகளும் 20 ஆயிரத்து 300 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சந்தேக நபரை இம்மாதம் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.

தற்சமயம் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சாமிந்த எனும் பாதாள உலக நபரின் வழிகாட்டலுடன் அவரது பெயரைப் பயன்படுத்தி குருநாகல், அநுராதபுரம், வெஹெர போன்ற பல பிரதேசங்களிலுள்ளவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து ஈஸிகேஷ் முறையில் இலட்சக்கணக்கில் குறித்த காவலர் பணம் கறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

N5