செய்திகள்

சீனா உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்க இந்தியா- ஜப்பான்- அமெரிக்கா இந்து சமுத்திரத்தில் கடற்படை ஓத்திகையை ஆரம்பித்துள்ளன

சமகளம்- நன்றி சிஎன்என்

இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் சீனாவின் பிரசன்னம் அதிகரிப்பதை தொடர்ந்து இந்தியா ஜப்பான் அமெரிக்க ஆகிய நாடுகள் இணைந்து பிராந்தியத்தின் மிகப்பெரிய கடற்படை ஓத்திகையை ஆரம்பித்துள்ளன.

மூன்று நாடுகளும் தங்களிடம் உள்ள முக்கிய நீர்மூழ்கிகள் யுத்தக்கப்பல்களை பயன்படுத்தி இந்த ஓத்திகையை முன்னெடுக்கின்றன.

1992ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் மலபார் கடற்படை ஓத்திகை கடந்த சில வருடங்களில் மிகப்பெரியதாக மாறியுள்ளது.இந்தோ பசுவிக் பிராந்தியத்தில் கடல்போக்குவரத்து பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள பல வகையான ஆபத்துக்களை கருத்தில்கொண்டே இந்த ஓத்திiயை விரிவுபடுத்தி வருவதாக அமெரிக்கா தெரிவிக்கின்றது.

2015 முதல் மலபார் ஓத்திகை வருடாந்த நிகழ்வாக மாறியுள்ளது.

170711125535-nimitz-malabar-exlarge-169
எனினும் இம்முறையே மூன்று நாடுகளும் தங்கள் கடற்படைகளின் விமானங்களை பயன்படுத்துகின்றன.
திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள இந்த ஓத்திகை மூலம் ஆசியாவின் பாதுகாப்பு சூழலை உறுதிசெய்வதற்கு இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதற்கு தான் தயராகவுள்ளதை அமெரிக்கா வெளிப்படுத்தியுள்ளது என இந்தியா குறித்த வெளிவிவகார நிபுணர் கொன்சன்டினோ ஜேவியர் தெரிவிக்கின்றார்.

ஓரு வார காலம் நடைபெறவுள்ள இந்த ஓத்திகையில் மூன்று நாடுகளையும் சேர்ந்த 16 கடற்படை கலங்கள் ஈடுபட்டுள்ளன. அமெரிக்காவின் அணுசக்தி நீர்மூழ்கியான யுஎஸ்எஸ் நிமிட்ஸ் ரஸ்யாவில் தயாரிக்கப்பட்ட மறுவடிவம் கொடுக்கப்பட்ட இந்தியாவின் ஐஎன்எஸ் விக்கிரமாதித்திய நீர்மூழ்கிபோரிற்கு ஏற்ற விதத்தி;ல் வடிவமைக்கப்பட்ட ஜப்பானின் ஜேஎஸ் இசுமோ போன்ற கடற்கலங்கள் இந்த ஓத்திகையில் பங்கெடுத்துள்ளன.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் பதட்டம் அதிகரித்துள்ள ஓரு சூழலிலேயே இந்த பிராந்தியத்தில் கடற்படை ஓத்திகை இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வருடங்களாக சீனா இந்து சமுத்திரத்தில் தனது கடற்படையின் பிரசன்னத்தை அதிகரித்துள்ளது.
தனது கடற்கரைக்கு அப்பால் செயற்படக்கூடிய விதத்தில் தனது கடற்படையின் பலத்தை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டே சீனா இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்திடம் 283 முக்கிய கடற்படை கலங்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன இது இந்தியாவிடம் உள்ளதை விட நான்னு மடங்கு அதிகமாகும்.

130816040856-uss-nimitz-horizontal-large-gallery

புதுடில்லி நீண்ட காலமாக இந்து சமுத்திரத்தை தனது செல்வாக்கிற்கு உட்பட பகுதியாகவே கருதிவந்துள்ளது.
சீனாவின் கடற்படையின் வளர்ச்சி- குறிப்பாக அதன் நீர்மூழ்கிகளின் வளர்ச்சி இந்திய தலைவர்களை தங்கள் நாட்டின் கரையோர பாதுகாப்பு கொள்கையை மறுபரிசீலனை செய்யவதற்கு தூண்டியுள்ளது.

மே மாதத்திற்கு பின்னர் இந்து சமுத்திரப்பகுதியில் சீனாவின் பல கடற்படை கலங்களை அவதானித்துள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை நீர்மூழ்கிகள் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வருடம் ஆரம்பமாகியுள்ள மலபார் ஓத்திகையிலேயே முதல் தடவையாக மூன்று நாடுகளும் தங்கள் நீர்மூழ்கிகளின் பலத்தை பரிசோதனை செய்ய உள்ளன. பத்து வருடத்திற்கு முன்னர் இந்தியா சீனாவை வேறு விதமான வல்லரசாகவே கணிப்பிட்டது.அதன் பலம் அதன் பொருளாதார அபிவிருத்தியிலேயே தங்கியுள்ளது என இந்தியா கருதியது ஆனால் இன்று புதுடில்லி சீனாவின் அச்சுறுத்தலை எப்படி எதிர்கொள்வது என்ற கேள்விக்கான பதிலை தேடுகின்றது என்கிறார் ஜேவியர்.