செய்திகள்

சீரற்ற வானிலையால் 50,000 பேர் பாதிப்பு: மூவர் மரணம்!

நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவும் கடும் மழையுடன் கூடிய வானிலையால் பல்வேறு அனர்த்தங்களில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை கடும் மழை காரணமாக 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வரக்காப்பொல – தும்பலியத்த மாயின்நொலுவ பகுதியில் இடம்பெற்ற மன்சரிவில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, ஹொரணை –  வகவத்த பகுதியில் நீர் நிறைந்த மாணிக்கக்கல் சுரங்கத்தில் தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனிடையே களு கங்கை, களனி கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவை அண்மித்த பகுதிகளில் சிறு வௌ்ளம் ஏற்பட்டுள்ளதாக  நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டது.

கடும் மழை காரணமா குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் சில பகுதிகள் நீரில் மூ்கின.

கிங் கங்கையை அண்மித்த தாழ்நிலங்களும் வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.

இதேவேளை, ஹாலிஎல – கிஹீகல்கொல்ல பகுதியிலுள்ள வீடொன்றின்மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதேவேளை, கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று மாலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது.

மழை காரணமாக  கிண்ணியா – பூவரசன்தீவு, கல்லடி வெட்டுவான், மகாமார் ஆயிலியடி ஆகிய பகுதிகளிலுள்ள வயல் நிலங்கள் வௌ்ளத்தில் மூழ்க்கியுள்ளன. அத்துடன், கிண்ணியா குறிஞ்சாக்கேணி , நடுத்தீவு  ஆகிய பகுதிகளும் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால் சுமார் 400  குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கடும் மழையுடன் கூடிய வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும் 100 மில்லிமீட்டருக்கு மேற்பட்ட பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

-(3)