செய்திகள்

சுமந்திரனை ”துரோகி” என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது : சபையில் சம்பந்தன் தெரிவிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி.யான எம்.ஏ. சுமந்திரனை “துரோகி” என்று சிலர் குறிப்பிடுவதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது கடந்த தேர்தலின் போது மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களே இவ்வாறாக அவரை துரோகியென கூறுவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் நேற்று சபையில் தெரிவித்துள்ளார்..
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை பாராளுமன்றத்தில் நேற்று விவாதத்துக்கென சமர்ப்பித்து உரையாற்றும் போதே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போது 15 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்ற கட்சியினர் அவர்களை விடவும் 4 மடங்கு அதிகமான வாக்குகளை பெற்ற சுமந்திரன் எம்.பி.யை துரோகி என்று குறிப்பிடுகின்றனர். அவர் அரசுடன் இணைந்து பணியாற்றுவதனாலேயே இவ்வாறு கூறுகின்றனர். சுமந்திரன் மக்களுக்காக பெறுமதியான சேவையை செய்து வருகிறார். அதை நாம் அங்கீகரிக்க வேண்டும்.
2015 ஆம் ஆண்டு தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் அதை போக்கிக் கொள்வதற்காக சுமந்திரனை பயன்படுத்துகின்றனர். இது ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும். இதேவேளை சுமந்திரனுக்கு இருக்கும் உயிர் அச்சுறுத்தல் பற்றி விசாரிக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும். அத்துடன் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் நமக்கள் மத்தியில் கடும்போக்குவாதத்தை தூண்டுகின்றார்கள். என அவர் தெரிவித்துள்ளார். -(3)