செய்திகள்

சு.கவின் மேதின கூட்டத்திற்கு செல்வதா? இல்லையா? : மஹிந்த அணி இந்த வாரத்தில் முடிவு

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினக் கூட்டத்தில் கலந்துக்கொள்வதா அல்லது தனியான மேதினக் கூட்டத்தை நடத்துவதா என்பது தொடர்பாக ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும் அந்த கட்சியின் உறுப்பினர்கள் இந்த வாரத்தில் கூடி தீர்மானமெடுக்கவுள்ளனர்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்தை இம்முறை காலியில் நடத்துவதற்கு கட்சி தலைமைத்துவம் தீர்மானித்துள்ள அதேவேளை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் சில ஒன்றிணைந்து கொழும்பில் அந்த கூட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளன.

இந்நிலையில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் வேறு கூட்டத்தில் கலந்துக்கொள்ளக் கூடாது என கட்சியினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை  சேர்ந்த மஹிந்த அணியினர் எந்தக் கூட்டத்தில் கலந்துக்கொள்வதென இது வரை தீர்மானிக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி இந்த வாரத்தில் கூடி அவர்கள் தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் தனக்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து மே தின கூட்டத்திற்கான அழைப்பு எதுவும் கிடைக்கவில்லையெனவும் ஆனால் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியிலிருந்து அழைப்பு கிடைத்துள்ளதாகவும் இதன்படி ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் அழைப்பை தான் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கண்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார். அத்துடன் கட்சியில் பெரும்பாலானோர் தம் பக்கமே இருப்பதாகவும் யாருக்கும் தம்மை அங்கு செல்ல வேண்டாம் , இங்கு செல்ல வேண்டாம் என தடைபோட முடியாது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதன்படி மஹிந்த அணியினர் காலியில் நடக்கும் கூட்டத்தை புறக்கணிக்கும் வகையிலான தீர்மானத்தையே மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மேதின கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் குழுவில் மஹிந்த அணியை சேர்ந்த மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் பவித்திரா வன்னியாராச்சி உள்ளிட்ட சிலரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.