செய்திகள்

அச்சுவேலி – மூளாய் சிற்றூர்தி சேவை சுமார் 29 வருடங்களின் பின்னர் ஆரம்பம்

மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்த வழித்தடம் 773 இலக்க மூளாய் அச்சுவேலிக்கான சிற்றூர்தி சேவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் நேற்று உத்தியோக பூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.குறித்த நிகழ்வு நேற்று காலை 10.30 மணியளவில் அச்சுவேலி பஸ் நிலையப் பகுதியில் நடைபெற்றது.நேற்று ஆரம்பிக்கப்பட்டள்ள குறித்த மார்க போக்குவரத்து சேவை சுமார் 29 வருடங்களின் பின்னர் மீண்டும் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த வழித்தடத்தினூடாக தட்டிவான் சேவையே நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நாட்டிலேற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக நீண்ட காலமாக தடைப்பட்டிருந்த மூளாய் – அச்சுவேலிக்கான போக்குவரத்து சேவையை மேற்கொள்ளும் வழித்தடம் 773 இலக்க தட்டிவான் சேவையை மீண்டும் சிற்றூர்தி சேவையாக மேற்கொள்வதற்கான அனுமதியை பெற்றுத்தருமாறு குறித்த தட்டிவான் உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் கடந்த மாசிமாதம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த உரிமையாளர்களது வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்பினருடன் பேச்சுக்களை மேற்கொண்டு அச்சேவையை மேற்கொள்வதற்கான அனுமதியை பெற்றுக் கொடுத்ததற்கிணங்க இன்றையதினம் உத்தியோக பூர்வமாக டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.(15)