செய்திகள்

அப்போது சுவாமிநாதன்; இப்போது சுவாமி நாயக்கவா?

சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க மாட்டோம் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இந்தியாவில் வைத்து தெரிவித்துள்ளார்.
ஆலய தரிசனத்திற்காக தமிழகத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் சுவாமிநாதன் சிதம்பரத்திற்கு சென்றார். சிதம்பரத்தில் தரிசனம் முடித்துவிட்டு ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் சுவாமிநாதன்,  போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை தலையிட அனுமதியோம் எனக்கூறி னார்.
சுவாமிநாதன் என்பது தூய தமிழ்ப் பெயர். தன் தந்தைக்கு பிரணவத்தின் பொருளை உபதேசம் செய்ததன் காரணமாக முருகப் பெருமானுக்கு சுவாமிநாதன் எனப் பெயர் ஏற்படலாயிற்று.
முருகன் தமிழ்க் கடவுள். அவன் தமிழர்களின் தலைவன். தமிழ்த் தலைவனுக்குத் தான் சுவாமிநாதன் என்பது பெயராயிற்று.
அப்படியானால் தமிழ் மக்களுக்காக – தமிழ் இனத்திற்காக குரல் கொடுக்கவேண்டிய டி.எம். சுவாமிநாதன் எதற்காக தமிழ் மக்களுக்கு எதிராக கதைக்கின்றார் என்ற கேள்வி ஏற்படும்.
அட, சுவாமிநாதன் என்பது அவரின் இளமைப் பெயர். இப்போது அவர் இலங்கைத் திருநாட்டின் மேன்மைமிகு அமைச்சர்.
ஒரு தமிழன் அமைச்சராக இருப்பது என்றால் அதற்கேற்றால்போல் தன்னை; தனது கொள்கையை; தனது செயற்பாட்டை மாற்றிக்கொள்ளவேண்டும். ஆக, அப்போது சுவாமிநாதனாக இருந்தவர் இப்போது சுவாமி நாயக்கவாக மாறிவிட்டார்.
இந்தியாவின் தமிழக மாநிலத்திற்குச் சென்று அங்கு வைத்து, போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க விடமாட்டோம் எனக்கூறுவதற்கு ஒரு சிங்கள அமைச்சரால் முடியாது.
அவ்வாறு அவர் கூறிவிட்டு தமிழகத்திலிருந்து சுலபமாக வெளியேறவும் இயலாது.
ஆனால் அமைச்சர் சுவாமிநாதன் ஒரு தமிழர் என்பதால் அவர் கூறியதைக்கேட்டு தமிழகம் வேதனை அடைந்திருக்குமே அன்றி வேறு என்னத்தைத்தான் செய்யமுடியும்.
சிதம்பரத்தில் இறைவணக்கம் செலுத்த வந்த சுவாமிநாதனை எங்ஙனம் கண்டிப்பது என்று தமிழக மக்கள் அமைதி காத்திருப்பர்.
என்ன செய்வது? நம்மவர்களே நமக்கு எதிராக நிற்கும் போது யார் என்ன செய்ய முடியும்? எதுவாயினும் தமிழ் மக்கள் பிறந்த வீடும் இல்லை; புகுந்த வீடும் இல்லை என்றிருந்த வேளையில் கல்வீடு கட்டிக்கொடுக்க மறுத்து பொருத்து வீடு என்று எல்லாவற்றையும் குழப்பிய அமைச்சர் சுவாமிநாதன், பொருத்து வீட்டைத் தன்னிலும் கொடுத்தாரா எனின் அதுவும் இல்லை.
அரசியல் கைதிகளின் விடுதலை பற்றியோ, மீள்குடியேற்றப்படாத மக்களின் அவலநிலை பற்றியோ உடனடி நடவடிக்கை எடுக்காத அமைச்சர் சுவாமிநாதன் போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க மாட்டோம் எனக்கூறியது, இந்தியாவுக்கான நல்ல செய்தியா? அல்லது இலங்கை ஆட்சியாளர்களுக்கு நல்ல பிள்ளையாக நடக்கும் செய்தியா? இது இரண்டும் இல்லை.
அடுத்த ஆட்சியிலும் தான் அமைச்சராக வேண்டும் என்பதற்கான முன்னாயத்த ஏற்பாடா? என்பதை தமிழ்மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
வலம்புரி
n10