செய்திகள்

அரசாங்கத்தின் திருட்டுகளை மறைக்கும் உத்தியே ராஜபக்‌ஷக்கள் மீதான விசாரணை : நாமல்

தற்போதைய அரசாங்கத்தின் திருட்டுக்களை மூடி மறைக்கவே ராஜபக்‌ஷக்கள் என்ற ஆயுதத்தை அரசாங்கம் கையிலெடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
இதுவேளை அரசாங்கத்தினால் சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு அமையவே தனது குடும்பத்தார் தற்போது விசாரணைகளுக்காக அழைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை சிரந்தி ராஜபக்‌ஷவும் , ரோஹித்த ராஜபக்‌ஷவினதும் விசாரணைகள் முடிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்‌ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை இரண்டரை வருடங்களாக இந்த அரசாங்கம் தேடிக்கொண்டுதான் இருக்கின்றது. இன்னும் அவர்களால் தேடியும் கிடைக்கவில்லை. ஆனால் 4 மாதங்களில் இந்த அரசாங்கத்தின் திருட்டுகள் சிக்கியுள்ளது. 4 மாதத்தில் தற்போதுள்ள தொழிநுட்பங்களின் மூலம் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் எஸ்.எம்.எஸ் (தொலைபேசி குறுந்தகவல்கள்) சிக்கியுள்ளன. அதேபோன்று எங்களின் எஸ்.எம்.எஸ்கள் இருந்திருந்திருந்தால் கண்டு பிடித்திருக்க வேண்டும்தானே. எவ்வாறாயினும் அரசாங்கத்தின் திருட்டுகள் சிக்கிய பின்னர் மீண்டும் ராஜபக்‌ஷக்கள் என திசை திருப்புகின்றது. -(3)