செய்திகள்

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தமிழ் – முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைய அழைப்பு: சிவசக்தி ஆனந்தன் எம்.பி

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வடக்கு, கிழக்கு மற்றும் மலையக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும், சகோதர முஸ்லிம் பாராளுமன்ற மன்ற உறுப்பினர்களை ஒன்றிணையுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

வவுனியாவில் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நாளை நடைபெறவுள்ள சத்தியா கிரப் போராட்டம் தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளை திங்கள் கிழமை இரண்டாவது தடவையாக பெரும் சத்தியாக்கிரகப் போராட்டம் வவுனியாவில் நடைபெறவுள்ளது. பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் எனப்பலரும் இதற்கு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

இந்த அரசியல் கைதிகளின் நிலமை ஒவ்வொரு மணிநேரமும் மிகவும் மோசமான கட்டத்தை அடைந்து கொண்டிருக்கின்றது. இந்த அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக இதுவரை ஜனாதிபதி, பிரதமர், சட்டமா அதிபர் ஆகியோர் உருப்படியான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் வெறுமனே, சட்டமா அதிபருடன் பேச வேண்டும் அல்லது நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள அரசியல் கைதிகளின் வழக்குகளை கவனிக்க வேண்டும் என்று சாட்டுப் போக்குகள் சொல்லப்படுகிறதே தவிர, இவர்களுடைய விடுதலை தொடர்பாக காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது உண்மையில் அரசியல் ரீதியான பிரச்சனை. அரசியல் ரீதியாகத் தான் தீர்வு காணப்பட வேண்டும். ஆகவே அரசியல் ரீதியாக தீர்வு காணும் விடயத்திற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கு வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் இருக்கக் கூடிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் சகோதர பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து காத்திரமான முறையில் குரல் கொடுக்க வேண்டியுள்ளது.

இன்னும் சொல்லப்போனால் இந்த அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்கும் வரைக்கும், பாராளுமன்றத்தை புறக்கணிப்பதற்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ், முஸ்லிம் மக்களின் பேராதரவுடன் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் 12 ஆயிரம் பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் தற்போது ஜனாதிபதி, பிரதமரால் 130 இற்கு உட்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாமல் இருக்கிறது. இந்தநிலையில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் பொதுச் சபையில் ஜனாதிபதி அவர்கள் உரையாற்றும் போது இலங்கைப் பிரச்சனை உள்நாட்டுப் பிரச்சனை. இது உள்நாட்டில் தீர்வு காணப்பட வேண்டும். இந்தப் பிரச்சனையை ஒரு புதிய கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் போர்குற்றம், மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனிதவுரிமை பேரவையில் இலங்கை அரசாங்கம் இணை அணுசரணை வழங்கிய வாக்குறுதிகள் எவையுமே நிறைவேற்றப்படவில்லை.

புதிய அரசியலமைப்பின் ஊடாக இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும். போர்க்குற்றம், மனிதவுரிமை மீறல் தொடர்பாக ஒரு சர்வதேச கலப்பு விசாரணை செய்யப்பட வேண்டும். அரசியல் கைதிகளின் விடயம், காணாமல் போனோரின் விடயம், காணிவிடுவிப்பு என பல விடயங்கள் குறித்து இந்த அரசாங்கம் ஐ.நா மனிதவுரிமை பேரவைக்கு வாக்குறுதிகளை வழங்கிவிட்டு தற்போது ஐ.நா பொதுச்சபையில் ஜனாதிபதி இந்த விடயங்கள் தொடர்பாக எதனையும் கூறாமல் புதிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் எனக் கூறும் ஜனாதிபதி குறைந்த பட்சம் அரசியல் கைதிகளை கூட விட முடியாமல் இருக்கும் போது தமிழர் பிரச்சனையை எவ்வாறு தீர்க்கப் போகிறார்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை பாதுகாத்துக் கொண்டும், முண்டு கொடுத்துக் கொண்டும் இருக்காமல் காத்திரமான நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திற்கு கடுமையான அழுத்தம் கொடுக்க வேண்டும். அரசியல் கைதிகளை விடுவிக்கும் வரைக்கும் பாராளுமன்றத்தை புறக்கணிக்க வேண்டும். அதைவிடுத்து மக்களை ஏமாற்றுவதற்காக ஜனாதிபதி, பிரதமர் எங்களை ஏமாற்றிவிட்டார்கள் எனக் கூறாது காத்திரமாக செயற்பட வேண்டும். ஆகவே, அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.

N5