செய்திகள்

ஆட்சியமைக்கப் போவது யார்? : மும்முனைப் போட்டி

கூட்டு அரசாங்கம் தொடருமா? இல்லையா? என்ற கேள்விகள் தொடரும் நிலையில் தற்போதைய அரசாங்கத்தின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் தனித்து அரசாங்கத்தை அமைப்பதற்கான திட்டங்களை வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 10 உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 22 பேரை தங்களுடன் இணைத்துக்கொண்டு தமது அரசாங்கத்தை அமைத்துக்கொள்வதற்கான முயற்சிகளை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முன்னெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்ளூராட்சி தேர்தலில் இந்த இரண்டு கட்சிகளும் பின்னடைவை அடைந்த நிலையில் கூட்டு அரசாங்கத்திலிருந்து விலகுவதற்காக தீர்மானங்களை மேற்கொண்டிருந்தன. ஆனபோதும் இரண்டு தர்ப்புக்கும் தனித்து அரசாங்கத்தை அமைப்பதற்கான பெரும்பான்மை ஆசனங்கள் இல்லாத காரணத்தினால் யார் அரசாங்கத்தை அமைப்பதென்ற பிரச்சினைகள் எழுந்திருந்தன. எவ்வாறாயினும் ஐக்கிய தேசிய கட்சியினால் தனித்து அரசாங்கத்தை அமைப்பதற்கான தீர்மானங்களை மேற்கொள்ளப்பட்டிருந்த போதும் பின்னர் ஐ.தேக. எம்.பிக்கள் , அமைச்சர்கள் மற்றும் பிரதமருக்கு இடையே நடத்தப்பட்ட கலந்துரையாடல்களை தொடர்ந்து தேசிய அரசாங்கத்தை தொடர்வதற்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதியை சந்திதுள்ள அவர்கள் அது தொடர்பாக தெரிவித்துள்ளனர்.
ஆனபோதும் ஐக்கிய தேசிய கட்சிக்கு அரசாங்கத்தை அமைக்க விடாது தனித்து ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்தை அமைப்பதற்கான திட்டங்களும் மறைமுகமாக முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு தேவையான உறுப்பினர்களை ஐக்கிய தேசிய கட்சியிலிருந்தே பெற்றுக்கொள்வதற்கு முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி தங்களுடன் இணைந்துக்கொள்ள ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 22 பேர் தயாராக இருப்பதாகவும் இதன்படி ஒன்றிணைந்த எதிர்க்கட்சியிலுள்ள உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு பெரும்பான்மையை நிருபித்து அரசாங்கத்தை அமைக்க முடியுமென ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியை சந்திக்க நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியும் இரகசியமான முறையில் தனித்து அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளன. இந்த சந்தர்ப்பத்தை கைவிட்டு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு சந்தர்ப்பத்தை கொடுத்துவிட்டால் எதிர்காலத்திற்கு சிக்கல்களான விடயமாகிவிடும் என்ற காரணத்தினால் எப்படியாவது அரசாங்கத்தை அமைப்பதற்கு அந்த கட்சி முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. பிரதமர் பதவியில் மாற்றம் மேற்கொள்ளாது ரணில் விக்கிரமசிங்க தலைமையிலேயே அந்த அரசாங்கத்தை தொடர்வதற்கும் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)