செய்திகள்

இனி யாருக்கும் காடுகளை அழிக்க முடியாது : ஜனாதிபதி

தனது பதவிக்காலத்தில் எவருக்கும் காடுகளை அழிக்க விடமாட்டேன். காடுகளை அழிப்பவர்களுக்கு எதிராக கடும் சட்டங்களை நடைமுறைப்படுத்துவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சர்வதேச சுற்றாடல் தினத்தையொட்டி நேற்று பொலனறுவை மெதிரிகிரிய வட்டதாகை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்ட உரையாற்றும் போதேத ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது  20 வீதமான பகுதியிலேயே காடுகள்  காணப்படுகின்றது. இப்படித்தான் நாட்டில் காடுகள்  காணப்படுகின்றதென வரைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வரைப்படத்தில் இருப்பதை போன்று தற்போது காடுகள் கிடையாது. அவை அழிக்கப்பட்டுவிட்டன. ஆனால் யுத்தம் நடைபெற்ற வடக்கு கிழக்கு பகுதிகளில் மாத்திரமே அந்த 20வீதமான காடுகள் மிஞ்சிஇருக்கின்றன. யுத்தம் நடைபெறாத மற்றைய இடங்களில் காடுகள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன.

இந்நிலையில் நான் கடந்த வாரம் யாழ்பாணத்துக்கு செல்லும் போது வில்பத்து வனத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாகவும் பார்த்துக்கொண்டு சென்றேன். அந்த ரம்மியமான வனத்துக்கு எந்தளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவை தவறான அரசியல் தீர்மானங்களினாலேயே இடம்பெற்றுள்ளது.

இவ்வாறான நிலைமையில் நான் ஒருவிடயத்தை தெளிவாக கூற வேண்டியுள்ளது. அதாவது நான் எனது பதவிக் காலத்தில் நாட்டில் எந்தவொரு அரசியல்வாதிக்கோ அல்லது வர்த்தகருக்கோ பணம் சம்பாதிப்பதற்காக காடுகளை அழிக்கவோ சுற்றாடலை சீரழிக்கவோ விடமாட்டேன்.

என்பதனை கூறிக்கொள்கின்றேன். எனக்கு தவறான வழியில் செல்லும் அரசியல்வாதிகள் மற்றும் வியாபாரிகளுடன் எந்த கொடுக்கல் வாங்கலும் கிடையாது. ஐக்கிய தேசிய கட்சியோ , ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியோ எதுவாக இருந்தாலும் எனக்கு முக்கியமில்லை. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும்  அவர்களுக்கு இடமளிக்கப் போவதில்லை.