செய்திகள்

இன்று அமைச்சரவை மாற்றம் அங்கஜயனுக்கு வாய்ப்பு

இலங்கையில் அமைச்சரவை மாற்றம் இன்று வியாழக்கிழமை இடம்பெறவுள்ளதாக அரச மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான பிரேரணையை ஆதரித்து வாக்களித்த சுதந்திரக் கட்சியின் 6 அமைச்சர்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.இதனையடுத்து அமைச்சரவையில் 6 அமைச்சர்களுக்கான வெற்றிடம் காணப்படுகிறது.

சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, பிரியங்கர ஜயரத்ன, ஜோன் செனவிரத்ன ஆகியோரே இவ்வாறு பதவியிலிருந்து விலகியுள்ளனர்.

இவ்வாறு வெற்றிடமாக இருக்கின்ற அமைச்சுப் பதவிகளை ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெற்றிடத்திற்கு சுதந்திரக் கட்சியில் தற்போது இராஜாங்க அமைச்சர்களாக உள்ளவர்களுக்கு வழங்கவும் தீர்மானித்திருப்பதாக அறியமுடிகின்றது.

குறிப்பாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோருக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.இதேவேளை பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்களிப்பிலிருந்து விலகிநின்ற சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை இரவு ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(15)