செய்திகள்

இரசாயன ஆயுத தாக்குதலிற்காக பெரும் விளைவை சந்திக்கவேண்டியிருக்கும் – டிரம்ப் எச்சரிக்கை

சிரியாவில் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இரசாயன தாக்குதலிற்காக சிரிய அரசாங்கத்தையும் அதன் சகாக்களான ரஸ்யா மற்றும் ஈரானையும் கடுமையாக கண்டித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இதற்காக சிரியாவும் அதன் சகாக்களும் கடும் விலையை செலுத்தவேண்டியிருக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.
இரசாயன தாக்குதல் குறித்த தனது கோபத்தை தொடர்ச்சியாக தனது டுவிட்டர் செய்தியில் பதிவு செய்துள்ள டிரம்ப சிரியா ஜனாதிபதி அசாத்தை மிருகம் என வர்ணித்துள்ளார்.
சிரியாவில் இடம்பெற்ற கண்மூடித்தனமான இரசாயன தாக்குதலில் குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள டிரம்ப் சிரிய இராணுவத்தின் முற்றுகைக்குள் சிக்கியுள்ள பகுதியில் அநியாயங்கள் இடம்பெறுகின்றன சர்வதேச சமூகம் அந்த பகுதிக்கு செல்ல முடியாமலுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி புட்டினும் ரஸ்யாவும் ஈரானும் அசாத் என்ற விலங்கை ஆதரிப்பதே இதற்கு காரணம் இதற்காக பெரும்விலையை செலுத்தவேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.