செய்திகள்

இலங்கை தமிழரசு கட்சியின் மேலாதிக்கம் தொடருமா?

யதீந்திரா

தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னரான கடந்த எட்டு ஆண்டுகளாக இலங்கை தமிழரசு கட்சியே தமிழ் அரசியலில் மேலாதிக்கம் செலுத்துவருகிறது. இந்த மேலாதிக்கத்தின் மையமாக இருப்பவர் இரா.சம்பந்தன். இந்தக் கட்டுரையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கின்ற தருணம் வரையில், சம்பந்தன் என்னும் மனிதர்தான் தமிழரசு கட்சியின் ஒரேயொரு பலமாக இருக்கின்றார். சம்பந்தன் இவ்வாறானதொரு இடத்திற்கு அவரது திறமையின் காரணமாக மட்டும் வரவில்லை. சம்பந்தனின் காலத்தை ஒட்டிய பலர் உயிரோடு இல்லாத ஒரு சூழலில்தான் சம்பந்தன் தமிழ் மக்கள் மத்தியில் வாழ்பவர்களில் முக்கியமானவர் என்னும் தகுதியை பெற்றார். இன்று அவர் இலகுவில் தவிர்த்துச் செல்ல முடியாத ஒருவராக இருப்பது உண்மைதான். ஆனால் இவ்வாறானதொரு தவிர்த்துச்செல்ல முடியாத இடத்திற்கு அவரை கொண்டு வந்துவிட்டவர்கள் மீது, ஆக்கக் குறைந்தளவான நன்றியுனர்வு கூட அவரிடமில்லை. ஒரு வேளை சம்பந்தனைப் பொறுத்தவரையில் இதுவும் ஒரு அரசியல் ராஜதந்திரமாக இருக்கக் கூடும்.

இன்று பலரையும் பலரும் துரோகி என்று அழைக்கின்றனர். ஆனால் சம்பந்தனும் ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளின் துரோகி பட்டியலில் இருந்தவர்தான். இந்தப் பத்தியாளர் எப்போதுமே துரோகி – தியாகி என்னும் அடைமொழிகள் தொடர்பில் ஆர்வம் கொண்ட ஒருவரல்ல. இதனை எனது முன்னைய பத்திகளிலும் சுட்டிக்காட்டியிருக்கின்றேன். ஏனெனில் இவ்வாறான வாதங்கள் அரசியல் என்னும் கண்ணோட்டத்தில் பெறுமதியற்றவை. இருப்பினும் சிலரை துரோகி என்றும், அவர்கள் தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு ஊறுவிழைவித்தவர்கள் என்றும் சிலர் விவாதிக்க முற்படும் போது, தவிர்க்க முடியாமல் சில தகவல்களை நினைவுபடுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிடுகிறது. சம்பந்தனே தன்னை விடுதலைப் புலிகள் தீர்த்துக் கட்டப்பட வேண்டியவர்களின் பட்டியலில் வைத்திருந்ததாக பல சந்தர்ப்பங்களில் தெரிவித்திருக்கின்றார்.

ITAK concention

2012இல் அவர் ஆற்றிய நாடாளுமன்ற உரை ஒன்றில், தன்னை விடுதலைப் புலிகள் தீர்த்துக் கட்டப்பட வேண்டியவர்களின் பட்டியலில் வைத்திருந்ததாக குறிப்பிட்டிருக்கின்றார். விடுதலைப் புலிகள் அவர்களது தீர்த்துக் கட்டும் பட்டியலில் ஒருவரை வைத்திருக்கின்றார்கள் என்றால், அவர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டிருக்கின்றார் என்பதுதானே பொருள். அதாவது அவர் அந்தக் காலத்தில் விடுதலைப் புலிகளின் பார்வையில் துரோகியாக இருந்திருக்கிறார் என்பதுதானே அதன் இன்னொரு பொருள். இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம் துராகியாக இருந்த சம்பந்தன் எவ்வாறு பிரபாகரனின் அருகில் செல்ல முடிந்தது? சமாதான முன்னெடுப்புக் காலத்தில் வன்னியில் இடம்பெற்ற சந்திப்புக்கள் தொடர்பான புகைப்பட்டங்கள் பத்திரிகைகளில் அவ்வப்போது வெளிவந்துகொண்டிருந்தன. அதனை இப்போதும் நீங்கள் இணையங்களில் காணலாம். கூட்டமைப்பு – விடுதலைப் புலிகள் சந்திப்பின் போது, சம்பந்தன் பிரபாகரனுக்கு அருகில் அமர்ந்திருப்பார். வலது பக்கம் சம்;பந்தன் அமர்ந்திருப்பார். இடது பக்கம் சு.ப.தமிழ்ச்செல்வன் அமர்ந்திருப்பார். அந்தளவிற்கு ஒரு உயர்வான இடம் சம்பந்தனுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. தீர்த்துக் கட்டும் பட்டியலில் இருந்த ஒருவர் எவ்வாறு பிபாகரனுக்கு அருகில் இந்தளவு நெருக்கமாக இருக்க முடிந்தது என்னும் கேள்வி இப்போதும் கூட ஒரு சாதாரண தமிழ் குடிமகனுக்கு ஆச்சிரியத்தை ஊட்டலாம். ஒவ்வொரு தேர்தல்களின் போதும் தங்கள் விரலில் மையை பூசிக்கொள்ளும் அப்பாவி வாக்காளர்களுக்கு ஆச்சரியங்கள் மட்டுமே இறுதில் எஞ்சுவதுண்டு.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கலாநிதி.நீலன் திருச்செல்வம் 1999ஆம் ஆண்டு தற்கொலை குண்டுதாரியின் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார். நீலன் திருச்செல்வமும் துரோகி என்னும் சொல் கொண்டே கொல்லப்பட்டார். 1995இல் அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஒரு தீர்வாலோசனையை முன்வைத்திருந்தார். அந்த வரைபின் பின்னால் நீலன் திருச்செல்வமே இருந்தார். அதனுடன் சம்பந்தனும் நெருங்கிச் செயற்பட்டுக் கொண்டிருந்தார். இந்தக் காலத்தில் சம்பந்;தன் சந்திரிக்காவின் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் பாதுகாப்பில் இருந்தார். அந்தக் காலத்தில் அடுத்த இலக்கு சம்பந்தன்தான் என்று மக்கள் மத்தியில் அரசல் புரசலாக கதைகள் அடிபட்டுக் கொண்டிருந்தன. ஒரு வேளை திருகோணமலை தமிழ் மக்கள் இதனை மறந்திருக்கக் கூடும். மறப்பது மக்களின் இயல்புதானே! கவனிக்க, இன்று சிலர் துரோகியாக குறிப்பிடுகின்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரியை விடுதலைப் புலிகள் ஒரு போதும் கொல்ல முற்படவுமில்லை, தங்களது தீர்த்துக் கட்டும் பட்டியிலில் போடவுமில்லை. உண்மையிலேயே சங்கரி தங்களுக்கு துரோகம் இழைக்கின்றார் என்று விடுதலைப் புலிகள் கருதியிருந்தால், அவரையும் தீர்த்தல்லவா கட்டியிருப்பர் அல்லது அதற்காக முயற்சித்திருப்பார்களா! ஆனால் சங்கரி ஆங்காங்கே பேசிய விடயங்களால் விடுதலைப் புலிகள் எரிச்சலடைந்திருந்தாலும் கூட, சங்கரியை பிரபாகரன் ஒரு துரோகியாக கருதியிருக்கவில்லை என்றே தெரிகிறது. சங்கரி என்னிடம் ஒரு முறை கூறியது நினைவுக்கு வருகிறது, தம்பி பிரபாகரன் நினைத்திருந்தால் குருவி சுடுவது போன்று என்னை சுட்டிருக்க முடியும். நனெல்லாம் அவர்களுக்கு ஒரு ஆளா?

praba-sambanthan-600x398

ஆனால் நீலன் திருச்செல்வதற்கு நடந்தது சம்பந்தனுக்கு நடக்கவில்லை. ஏன்? இந்த இடத்தில்தான் சம்பந்தன் ஜயாவின் மதிநுட்பம் பாராட்டைப் பெறுகிறது. சம்பந்தன் விடுதலைப் புலிகள் தன்னைத் தேடி வருதற்கு முன்னரே அவர்களை தேடிச் சென்றுவிட்டார். அதனால் தப்பித்துக் கொண்டார். அந்தவகையில் அவர் ஒரு ராஜதந்திரிதான். நீலன் திருச்செல்வத்தின் கொலைக்கு பின்னர், 1999 அல்லது 2000 ஆம் ஆண்டாக இருக்க வேண்டும் (ஒரு வேளை ஆண்டைக் குறிப்பிடுவதில் தவறிருக்கலாம்) சம்பந்தன் இங்கிலாந்து தொழில் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் பரி கார்டினர் என்பரை சந்தித்திருக்கிறார். அவரின் ஊடாக, பாலசிங்கத்தை சம்பந்தன் சந்தித்திருக்கிறார். விடுதலைப் புலிகளின் நிகழ்சிநிரலோடு ஒத்துப் போகும் விருப்பத்தை சம்பந்தன் வெளிப்படுத்துகின்றார். இந்த சந்திப்பின் போது. தம்பியிடம் சொல்லுங்கள், தான் துரோகியாகச் சாக விரும்பவில்லை என்று, சம்பந்தன் பாலசிங்கத்திடம் கூறியதாகவும்கூட ஒரு தகவலுண்டு.

இந்தப் பின்னணியில்தான் சம்பந்தன் ஜயா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரானார். ஆனால் சம்பந்தன் ஜயாவோ தான் விடுதலைப் புலிகளால் தலைவராகப்படவில்லை என்று தொடர்ந்தும் ஆணித்தரமாகக் கூறி வருகிறார். ஆரம்பத்தில் சம்பந்தனை கூட்டமைப்பின் தலைவராக வெளியுலகிற்கு காண்பிப்பது தொடர்பிலும் வன்னியிடம் தயக்கங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. எனினும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரைத்தான் கூட்டமைப்பின் தலைவராக்க வேண்டும் என்பதில் விடுதலைப் புலிகளின் தலைமை உறுதியாக இருந்தாகவே அறிய முடிகிறது. சம்பந்தன், தமிழ் தேசியம் தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டவரல்ல என்பதே வன்னியின் தயக்கத்திற்கு காரணம் என்றும் அறியக்கிடைக்கின்றது. ஒரு சாதாரண தமிழ் குடிமகனால் கூட இந்த விடயத்தின் உண்மைத்தன்மையை விளங்கிக்கொள்ள முடியும். விடுதலைப் புலிகளால் அனைத்தும் தீர்மானிக்கப்பட்ட ஒரு காலகட்டத்தில், சம்பந்தனது தலைமைத்துவம் மட்டும் சுயமாக நிகழ்ந்திருக்க முடியுமா?

sam and Tamilselvan

சம்பந்தன் இன்று ஒரு தலைவராக வலம் வர முடிகிறதென்றால் அதற்குரிய ஒரேயொரு காரணம் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிதான் அதாவது அதன் தலைமையின் மறைவு. அதே போன்று இலங்கை தமிழரசு கட்சி என்னும் ஒன்று அரசியலை ஏகபோகமாக தாங்களே தீர்மானிக்க முடியும் என்று நம்புவதற்கும் மேற்படி காரணமே, காரணம். ஆனால் தமிழரசு கட்சியின் ஏகபோகம் தொடர்ந்தும் நீடிக்க முடியுமா என்னும் கேள்வி தற்போது பரவலாகிவருகிறது. அரசியல் நிலைமைகளை உற்றுநோக்கினால் தமிழரசு கட்சியின் ஏகபோக அரசியல் ஏதோவொரு வகையில் நெருக்கடியை சந்திக்கவுள்ளது. இந்த உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் அதன் ஏகபோகத்தின் மீது நிச்சயமாக கேள்வியை எழுப்பலாம், ஒரு வேளை தமிழரசு கட்சி பெரும்பாண்மையான இடங்களை வென்றாலும் கூட.

சுரேஸ் பிரேமச்சந்திரனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஒரணியில் நின்றிருந்தால் நிலைமைகள் வேறு விதமாக அமைந்திருக்கலாம் என்றாலும் கூட, உதய சூரியன் சின்னத்திற்கு கிடைக்கும் இடங்கள், சைக்கிள் சின்னத்திற்கு கிடைக்கும் இடங்கள் அத்துடன் பல சுயேற்சைக் குழுக்களுக்கு கிடைக்கும் இடங்கள் அனைத்தும், நிச்சயமாக தமிழரசு கட்சிக்கு எதிரான வாக்குகளாகவே இருக்கும். அது எதிர்காலத்தில் ஏனைய கட்சிகள் எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்பதற்கான ஒரு செய்தியையும் நிச்சயம் சொல்லும். அந்த வகையில் நோக்கினால் தமிழரசு கட்சி அதன் சரிவின் ஆரம்பத்தை பார்க்கப் போகிறது