செய்திகள்

இலங்கை மீது பொருளாதாரத் தடை: இந்திய அரசை வலியுறுத்துகிறார் ராமதாஸ்

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையை சென்னையில் நடத்த இந்திய மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளவேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை சென்னையில் நேற்று வெளியிட்டார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“இலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களைக் கொடூரமான முறையில் படுகொலை செய்த ஆட்சியாளர்களும்,இ ராணுவ தளபதிகளும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆனால், இலங்கைப் போர் முடிவடைந்து 5 ஆண்டுகளாகியும் இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் இன்றுவரை தண்டிக்கப்படாதது தமிழர்களின் மனதில் ஆறாத வடுவாக உறுத்திக் கொண்டிருக்கிறது.

இனப்படுகொலை குற்றவாளிகளைத் தண்டிக்க உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும், தமிழ் உணர்வாளர்களும் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக சிங்களப்படையினரின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையரின் விசாரணை கோரும் தீர்மானம் மனித உரிமைப் பேரவையில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது.

இந்த விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டியது இலங்கை அரசின் கடமை ஆகும். ஆனால், ஐ.நா. விசாரணைக்குழுவை இலங்கைக்கு அனுமதிக்க மறுப்பதன் மூலம் மனித உரிமை ஆணையத்தின் போர்க்குற்ற விசாரணைக்கு சிங்கள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டைப் போட்டு வருகிறது.

இலங்கை அரசின் இந்த ஜனநாயக விரோதப் போக்கைத் தான் ஐ.நா. மனித உரிமை ஆணையம் கடுமையாகக் கண்டித்திருக்கிறது.

ஜெனீவாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ரூபர்ட் கோல்,‘‘ இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையை சீர்குலைக்க சிங்கள அரசு முயற்சி செய்து வருகிறது. இது இலங்கை அரசின் மீதான நம்பகமற்ற தன்மையைக் காட்டுகிறது. அதுமட்டுமின்றி, விசாரணைக்கு ஆணையிட்ட ஐ.நா. மனித உரிமை ஆணையத்தை அவமதிக்கும் செயலாகவே இதைப் பார்க்கிறோம்’’ என்று கூறியிருக்கிறார்.

இலங்கையின் இச்செயல் அதிர்ச்சியையோ அல்லது வியப்பையோ தரவில்லை. ஏனெனில், இலங்கை அரசு இப்படித்தான் நடந்து கொள்ளும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான்.

அதனால் தான் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையை சென்னையில் நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். சென்னையில் இந்த விசாரணை நடத்தப்பட்டால், போரில் பாதிக்கப்பட்டு உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்பவர்களும் அச்சமின்றி இதில் பங்கேற்பார்கள்.

கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இக் கோரிக்கையை வலியுறுத்தி மூன்று முறை அறிக்கை வெளியிட்டேன். ஜூன் 18 ஆம் தேதி திண்டிவனத்தில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டத்திலும் இதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கெல்லாம் மேலாக ஜூலை 16 ஆம் தேதி மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையிலான குழுவினர் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை தில்லியில் சந்தித்து இலங்கை அரசுக்கு எதிரான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணையை சென்னையில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால், அப்போது இந்த நியாயமான கோரிக்கையை மத்திய அரசு அடியோடு நிராகரித்துவிட்டது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு இருப்பதால் தான் ஐ.நா. அமைப்பையே அவமதிக்கும் அளவுக்கு இலங்கை திமிருடன் நடந்து கொள்கிறது. ஈழத் தமிழருக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை நியாயமாக நடப்பதை உறுதி செய்யவேண்டும்.

ஆனால், விசாரணையை சீர்குலைக்க இலங்கை முயல்வதாக ஐ.நா. அமைப்பே குற்றஞ்சாற்றியுள்ள நிலையில், இந்த விஷயத்தில் இந்தியா எத்தகைய நிலைப்பாட்டை மேற்கொள்ளப் போகிறது என்பதைத் தான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். போரில் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான தமிழர்களின் குடும்பத்தினருக்கு நீதி பெற்றுத்தரும் கடமையும், பொறுப்பும் இந்தியாவுக்கு இருப்பதால், இலங்கை மீதான் போர்க்குற்ற விசாரணையை சென்னையில் நடத்த அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

அதுமட்டுமின்றி, இலங்கையை வழிக்கு கொண்டுவருவதற்காக அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளவேண்டும்” என கூறியுள்ளார்.