செய்திகள்

ஈரானிற்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்போம் – இஸ்ரேல் மிரட்டல்

இஸ்ரேல் ஈரானின் சகாக்களிற்கு எதிராக மாத்திரமல்ல ஈரானிற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்
சிரியாவின் எல்லையில் இடம்பெற்ற சம்பவங்கள் மத்திய கிழக்கில் நேரடி மோதல்களிற்கான ஆபத்தினை அதிகரித்துள்ள நிலையிலேயே இஸ்ரேலிய பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவினதும் ஐரோப்பிய நாடுகளினதும் பாதுகாப்பு வல்லுனர்கள் கலந்துகொண்ட மியுனிக் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டிலேயே இஸ்ரேலிய பிரதமர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேலிய வான்பரப்பிற்குள் ஊருடுவிய ஈரானின் ஆளில்லா விமானத்தின் சிறிய பகுதியை மாநாட்டில் கலந்துகொண்டவர்களிற்கு காண்பித்தவாறே அவர் இதனை தெரிவித்துள்ளார்
டிரோனின் ஓரு பகுதியை கையில் உயர்த்திப்பிடித்தபடி இதனை உங்களால் அடையாளம் காணமுடிகின்றதா? உங்களால் அடையாளம் காணமுடியும் இது உங்களுடையது என ஈரான் வெளிவிவகார அமைச்சரை நோக்கி உரையாற்றியுள்ள இஸ்ரேலிய பிரதமர் இஸ்ரேலின் உறுதிப்பாட்டை சோதிக்கவேண்டாம் என்ற செய்தியை ஈரானில் உள்ள சர்வாதிகாரிகளிற்கு தெரிவியுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் தனது கழுத்தை பயங்கரவாதத்தின் கயிறு நெருக்குவதை அனுமதிக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் கைப்பொம்மைகளிற்கு எதிராக மாத்திரமல்ல ஈரானிற்கு எதிராகவும் தேவைப்பட்டால் நடவடிக்கை எடுப்போம் என அவர்; குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் இஸ்ரேலிய ஈரானிய படையினருக்கு இடையில் இடம்பெற்ற மோதலை தொடர்ந்தே இஸ்ரேல் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சிரியா இஸ்ரேல் எல்லையின் ஊடாக இஸ்ரேலிற்குள் நுழைய முயன்ற ஈரானிய டிரோனை இடைமறித்துள்ளதாக கடந்த வாரம் அறிவித்திருந்த இஸ்ரேல் சிரியாவில் உள்ள ஈரானிய இலக்குகள் மீது தாக்குதலை மேற்கொண்டிருந்தது